தத்துவச் சுடராய்  வாழ்ந்த தோழன் பிரேம்குமார்!

  • By Magazine
  • |

– எஸ்.கே. கங்கா

மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று சம்பவித்திருக்கிறது. (26.05.2026)

பெரிய பட்டங்களிலோ, அதிகாரத்தின் ஆசனங்களிலோ அவன் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், நேற்று பிற்பகல் தொடங்கி முகநூல் முழுக்க அவன் நினைவுகளால் நிறைந்திருக்கிறார். தன் வாழ்க்கைப்பயணத்தில் அவன் யாரையெல்லாம் பாதித்தாரோ, அந்த உள்ளங்கள் யாவும் இன்று நிலைகுலைந்து போயிருக்கின்றன.

அவனை அறிந்தவர்கள் எவராலும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 60 வயதைக் கூடக் கடக்காதவன். இன்னும் எத்தனையோ காலங்கள் அவனோடு பயணித்திருக்கலாம்; ஆனால், காலம் முந்திக்கொண்டு அவன் வாழ்வில் குறுக்கிட்டுவிட்டது.

இளமையிலேயே இளம் சிவப்பபைத் தன் இயல்பாய் ஏற்றுக்கொண்டவன் மாணவர் பருவத்தில் இந்திய மாணவர் பெருமன்றத்தின் (SFI) முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவன். அது ஒரு தொடக்கம்தான். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கச் செயல்பாடுகளில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்டு வளர்ந்தவன்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தக்கலைக் கிளையில் அவன் நுழைந்த பிறகு, தன்னை ஒரு முழுமையான கலை இலக்கியப் பெருமன்றத்துக் காரனாகவே மாற்றிக்கொண்டான். அதுவே பிரேம்குமார் என்ற மனிதனின் அபூர்வ குணமாக அமைந்தது.

தக்கலை கிளையில் அவன் இணைந்த காலம் தொட்டு நான் அவனை அறிவேன். துடிப்பானவன், அறிவு நுட்பம் மிக்கவன். படைப்பிலக்கியத்தை விடவும், அவருடைய ஆழமான தத்துவத் தேடலே அவனை வழிநடத்தியது. மார்க்சியத் தத்துவ விசாரணைகள்தான் அவன் வாழ்நாள் முழுமைக்கும் திசைகாட்டியாக இருந்தன. இதற்கான களத்தைத் தக்கலை கலை இலக்கியப் பெருமன்றம் அவனுக்கு அமைத்துக் கொடுத்தது.

பின்னாளில் அவன்  நாகர்கோவில் வாசியாக மாறிய போது, மாவட்ட அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஒரு தத்துவச் சிந்தனையாளனாக அவன் ஆழமும் அகலமும் பெற்று, உலகளாவிய தத்துவப் போக்குகளை உடனுக்குடன் உள்வாங்கித் தோழமைகளுடன் உரையாடும் ஆற்றலைப் பெற்றிருந்தான்.

பொதுவாக தத்துவவாதிகள் சற்று இறுக்கமாக இருப்பார்கள் என்பார்கள். ஆனால், இளமை முதலே நகைச்சுவை உணர்வு மிக்கவன் பிரேம்குமார். அந்த அன்னியோன்யமான சூழலில், தன் பேச்சிலும் நடை உடை பாவனைகளிலும் அந்த நகைச்சுவையைத் தன் இயல்பாகத் எப்போதும் தக்க வைத்துக் கொண்டவன்.

இன்னும் சிந்தனை உலகில் சிறகடித்துப் பறக்க வேண்டியவன், இப்படித் திடுதிப்பென்று விடைபெற்றதை எந்தத் தோழனாலும் ஜீரணிக்க முடியவில்லை. அவனைப் போன்ற ஒரு கூர்மையான சிந்தனையாளன் உருவாக இன்னும் 30, 40 ஆண்டுகள் ஆகுமே என்ற கவலை நெஞ்சை அடைக்கிறது.

அவன்வெறும் படைப்பாளி மட்டுமல்ல; வெறும் சிந்தனையாளனும் மட்டுமல்ல. எல்லாவற்றிலும் நுட்பமும் கூர்மையும் கொண்ட ஓர் அறிவுச் சுடர். இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளுக்கு அப்பால், மக்கள் சார் செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஓர் அற்புதமான தோழன் அவன்.

அவனது மறைவு அவன் குடும்பத்தாருக்குப் பேரிழப்பு என்றால், இடதுசாரி இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தம்பி அலெக்ஸ் நாயகம், நண்பன் எச். ஜி. ரசூல், தோழன் ஏ. எம். சாலன் ஆகியோரின் அகால மரணங்கள் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், இப்போது பிரேம்குமாரும் அந்த வரிசையில் இணைந்து நிற்பது நெஞ்சைப் பதற வைக்கிறது. படைப்பாளியாக, விமர்சகனாக, சிந்தனையாளனாக, மொழிபெயர்ப்பாளனாக, பேச்சாளனாக, போராளியாக வாழ்ந்த அவன்  நினைவுகள் நம்மிடையே என்றும் வாழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *