– காளீஸ்வர்
1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன?
பிளாஸ்க்கின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே வெற்றிடம் (Flask) இருக்கும். வெப்பம் கடத்தப்படுவதற்கு ஏதேனும் ஒரு ஊடகம் (காற்று அல்லது பொருள்) தேவை. வெற்றிடத்தில் வெப்பம் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் நடைபெறாது என்பதால் வெப்பம் வெளியேறாமல் நீர் சூடாகவே இருக்கிறது.
2. பாதரசம் மட்டும் ஏன் திரவ நிலையில் இருக்கிறது?
பாதரச அணுக்களுக்கிடையேயான பிணைப்பு (Metallic bonding) மிகவும் பலவீனமானது. இதன் எலக்ட்ரான் அமைப்பு மிகவும் நிலைப்புத்தன்மை கொண்டது என்பதால், அறை வெப்பநிலையில் இது மற்ற அணுக்களுடன் சேர்ந்து திடமாக மாறும் அளவுக்கு ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்காது. மேலும் பாதரசமானது சிறிய வெப்பநிலை வேறுபாடுகளை கூட கண்டறிய மிகவும் பயன்படுகிறது.

3. சுட்டெரிக்கும் வெயில் அடிக்கக் கூடிய பாலைவன தேசங்களில் கூட இரவு நேரத்தில் குளிராக இருப்பதற்கு காரணம் என்ன?
பாலைவன மணல் வெப்பத்தை விரைவாக ஏற்கும், அதேபோல் விரைவாக வெளியிட்டுவிடும். அங்கு காற்றில் ஈரப்பதம் மற்றும் மேகங்கள் இல்லாததால், பகலில் தரை உறிஞ்சிய வெப்பம் இரவு நேரத்தில் எந்தத் தடையுமின்றி வளிமண்டலத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுகிறது. இதனால் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. மேலும் இரவு நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடும் இதற்கு காரணமாக அமைகிறது.
4. கடல் நீர் ஆவியாவதால் எப்படி உப்பு உற்பத்தியாகிறது?
அடிப்படையில் கடல் நீரில் பல்வேறு விதமான தனிமங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில் குறிப்பிடும்படியாக சோடியம் குளோரைடு அதாவது சாதாரண உப்பும் நிறையவே கலந்து இருக்கிறது.
கடல் நீரை பாத்திகளில் தேக்கி வைக்கும்போது, சூரிய வெப்பத்தால் நீர் மட்டும் ஆவியாகிறது (Evaporation). நீரில் கரைந்துள்ள தாதுக்களும் உப்புகளும் ஆவியாக முடியாது என்பதால், அவை அடியிலேயே தங்கி படிகங்களாக (உப்பாக) மாறுகின்றன.
5. ஏன் சாலைகள் எப்போதும் கருப்பு நிறத்திலேயே இருக்கின்றன?
சாலைகள் போடப் பயன்படும் பிற்றுமின் (Bitumen) என்ற தார் பொருள் இயற்கையிலேயே கருப்பு நிறம் கொண்டது. இது பெட்ரோலிய கழிவிலிருந்து கிடைப்பதால் மலிவானது மற்றும் கற்களை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால்தான் சாலைகள் கருப்பு நிறத்தில் இருக்கின்றன.
6. கருப்பு சட்டை அணிந்தால் கோடை காலங்களில் அதிகமாக வியர்ப்பதற்கு காரணம் என்ன?
கருப்பு நிறம் தன் மீது விழும் அனைத்து சூரியக் கதிர்களையும் (வெப்பத்தையும்) உறிஞ்சும் (Absorb) தன்மை கொண்டது. இதனால் உடல் வெப்பமடைந்து குளிர்ச்சியடைய வேண்டி அதிகமாக வியர்க்கிறது. இதற்குப் பின்னால் பிளாக் பாடி ரேடியேஷன் எனும் தத்துவம் இருக்கிறது. இயற்பியலின் படி கருப்பு எனும் நிறம் தன்னை நோக்கி வரும் அனைத்து வெப்ப கதிர்களையும் ஈர்த்துக் கொள்ளும் பண்பை பெற்றிருக்கிறது. எனவே வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
7. வெள்ளை நிற சட்டைகளை கோடைகாலத்தில் அணியக் கூறுவதன் அறிவியல் காரணம் என்ன?
வெள்ளை நிறம் தன் மீது விழும் சூரிய ஒளியின் பெரும்பகுதியை அப்படியே பிரதிபலிக்கும் (Reflect). இது வெப்பத்தை உறிஞ்சாததால் உடல் வெப்பமடையாமல் தடுக்கிறது.
8. துபாய் நாட்டில் கடலில் செயற்கை தீவை உருவாக்கி விட்டார்கள். கடல் ஓட்டத்தில் அந்த மண்ணை அடித்துச் சென்று விடாதா?
அலைகள் மண்ணை அரிப்பதைத் தடுக்க அந்தத் தீவுகளைச் சுற்றி பிரம்மாண்டமான கல் சுவர்கள் (Breakwaters) கட்டப்பட்டுள்ளன. இவை அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மண்ணைப் பாதுகாக்கின்றன. இதன்மூலம் கடல் அலைகளால் மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
9. திடப்பொருளாக இருக்கும் அரிசி வேகவைக்கும் போது எப்படி மிருதுவாக மாறுகிறது?
அரிசியில் உள்ள ஸ்டார்ச் (Starch) மூலக்கூறுகள் சுடுநீரை உறிஞ்சி விரிவடைகின்றன. இந்த நிகழ்வு Gelatinization எனப்படுகிறது. நீர் உள்ளே புகுந்து மூலக்கூறுகளைத் தளர்த்துவதால் அரிசி மிருதுவாகிறது.
10. அரிசிக்கு நேர மாறாக இட்லி மாவு அவித்தவுடன் திடமான இட்லி ஆக மாறுவது எப்படி?
மாவில் உள்ள புரதம் மற்றும் ஸ்டார்ச் வெப்பமடையும் போது ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு ஒரு வலைப்பின்னல் போன்ற அமைப்பை (Protein-Starch matrix) உருவாக்குகின்றன. ஆவியில் வேகும்போது ஈரப்பதம் குறைந்து இந்த அமைப்பு கெட்டியாகி திடமான இட்லியாக மாறுகிறது.
11. நார்வே நாட்டில் நள்ளிரவில் சூரியன் உதிப்பதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் என்ன?
பூமி தனது அச்சில் 23.5-க்கு சாய்ந்து சுழல்வதால், கோடை காலங்களில் வட துருவப் பகுதிகள் (நார்வே போன்றவை) தொடர்ந்து சூரியனை நோக்கியே இருக்கும். இதனால் பூமி சுழன்றாலும் அந்தப் பகுதிகளில் சூரியன் மறைவதே இல்லை. இதற்காகத்தான் அங்கு நள்ளிரவில் சூரிய உதயம் ஏற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள்.
12. முட்டையை வேகவைத்து குளிர்ந்த நீரில் வைக்கும் போது முட்டையின் வெளிப்புற ஓடு சீக்கிரமாக குளிர்ந்து விடுகிறது. ஆனால் உட்புறமோ இன்னும் சூடாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன?
முட்டை ஓடு மெல்லியது மற்றும் வெப்பத்தை ஓரளவுக்குக் கடத்தும். ஆனால் உட்புறம் உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு அடர்த்தியானவை (High thermal mass). அவை வெப்பத்தை அதிகப்படியாகச் சேமித்து வைத்திருப்பதாலும், வெப்பம் கடத்தப்படும் வேகம் குறைவாக இருப்பதாலும் ஆற அதிக நேரம் எடுக்கிறது.
13. மிகச்சிறிய இழைகளாக இருக்கும் சிலந்தி வலையில், எப்படி மிகப்பெரிய பூச்சிகள் கூட மாட்டிக் கொள்கின்றன. அந்த சிலந்தி வலைகள் அறுந்து விடாதா?
சிலந்தி வலை இழைகள் எஃகை விட வலிமையான புரதத்தால் ஆனவை. மேலும், இவை அதிக மீள் தன்மை (Elasticity) கொண்டவை. பூச்சிகள் மோதும்போது அந்த அதிர்வை உள்வாங்கிக்கொண்டு விரிவடையும் தன்மை கொண்டதால் வலைகள் எளிதில் அறுவதில்லை.
14. கடுகு அளவிற்கு இருக்கக்கூடிய எறும்புகள் செங்குத்தானே சுவற்றின் மீது எளிமையாக இருக்கின்றன. ஆனால், மனிதர்களோ தென்னை மரத்தில் ஏறுவதற்கு திணறுகிறார்கள் இதற்கு காரணம் என்ன?
எறும்புகளின் கால்களில் மிகச்சிறிய கொக்கிகள் மற்றும் பிசுபிசுப்பான திரவம் சுரக்கும் திசுக்கள் (Arolia) உள்ளன. இவை சுவருடன் மூலக்கூறு ரீதியான பிணைப்பை (an der Waals forces) ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு உடல் எடை மிக அதிகம் மற்றும் இத்தகைய பிடிப்பு வசதி இயற்கையில் இல்லை. இதனால்தான் மனிதர்களால் உயரமான இடங்களில் ஏறுவது கடினமானதாக இருக்கிறது.
15. மரத்தில் ஏறக்கூடிய பூனை போன்ற விலங்குகளை பார்க்கும்போது அவற்றுக்கு கூரிய நகங்கள் இருக்கின்றன அவ்வாறு நகங்கள் இருந்தால் மட்டும் எளிமையாக மரத்தில் ஏறிவிட முடியுமா?
முடியாது. நகங்கள் பிடிமானத்திற்கு (Grip) உதவுகின்றன, ஆனால் ஏறுவதற்கு அவற்றின் வலுவான தோள் மற்றும் கால் தசைகள், மற்றும் உடலின் சமநிலை (Balance) மிக முக்கியம். இயற்கையிலேயே பூனைகளுக்கு அதுபோன்ற உடல் தகவமைப்பு உள்ளது.
16. கற்பூரத்தை பொருத்தி அதை சில வினாடிகள் வரை கையில் வைத்திருக்கும் போது சூடு தெரிவதில்லை. சில வினாடிகள் கழித்த பிறகுதான் கை சுடுவது போல இருக்கிறது. காரணம் என்ன?
இதற்கும் வெப்பவியல் விதிகள் தான் காரணம். வெப்பம் காற்றில் மேல்நோக்கிச் செல்லும் (Convection). ஆரம்பத்தில் கற்பூரம் எரியும் போது உருவாகும் வெப்பம் உங்கள் கையை அடைய ஒரு சிறிய கால இடைவெளி தேவைப்படும் (Thermal inertia). மேலும், கற்பூரம் ஆவியாகும் போது ஏற்படும் குளிர்ச்சியும் ஆரம்பத்தில் வெப்பத்தைத் தடுக்கும். அதற்காக கையில் கற்பூரத்தை ஏற்றி பார்ப்பதெல்லாம் வேண்டாத வேலை ஆபத்தானது.
17. கடல் ஓர பகுதிகளில் அதிகமாக துரு பிடிப்பதற்கு காரணமென்ன?
கடல் காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் உப்பு (Sodium Chloride) உள்ளது. உப்பு ஒரு மின்பகுளியாகச் (Electrolyte) செயல்பட்டு, இரும்பு துருப்பிடிக்கும் வேதிவினையை (Oxidation) பல மடங்கு வேகப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கடலோரப் பகுதிகளில் துருப்பிடிப்பது விரைவாக நடக்கும்.
18. ஒரு காகிதத்தின் மீது தீப்பெட்டியை வைத்தால் வேகமாக தீ பரவுகிறது. அதுவே பத்து காகிதங்களை நெருக்கமாக வைத்தால் தீ எரிவது குறைவாக இருக்கிறது ஏன்?
தீ எரிய ஆக்சிஜன் (Oxygen) அவசியம். ஒற்றைத் தாளுக்கு அடியில் காற்று தாராளமாகப் புகும். ஆனால் காகிதங்களை அடுக்கி வைக்கும்போது அவற்றுக்கு இடையே காற்று புக இடமிருக்காது. போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் எரிவது குறைகிறது. மேலும் அடர்த்தியான பொருட்களில் நெருப்பு பற்றுவதற்கு சிரமப்படும்.
19. சில நேரங்களில் கீழே விழுந்தால் தோளில் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், மேலே அணிந்திருக்கக்கூடிய துணி கிழிவதில்லை ஏன்?
துணியின் இழைகள் நெகிழ்வுத்தன்மை (Flexible) கொண்டவை, அவை உராய்வின் போது நகர்ந்து கொடுக்கும். ஆனால் நமது தோல் திசுக்கள் மென்மையானவை மற்றும் எலும்புகளுக்கு மேலே மெல்லிய படலமாக இருப்பதால், உராய்வின் போது ஏற்படும் அழுத்தம் தோலை எளிதில் காயப்படுத்துகிறது. மேலும், நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் துணி வகையைப் பொறுத்து இது மாறுபடும்.
20. திருவிழா காலங்களில் ஆம்ப்ளிபையர் கருவியை திருக்குவதன் மூலமாக எப்படி ஒலி அளவு அதிகரிக்கப்படுகிறது?
ஆம்ப்ளிபையரில் உள்ள பொத்தான் (Knob) மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் அதைத் திருக்கும்போது, மின் சமிக்கைகளின் வீச்சை (Amplitude) உயர்த்தி ஒலிபெருக்கிக்கு அனுப்புகிறது, இதனால் சத்தம் அதிகரிக்கிறது.!
Leave a Reply