கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்

கை கொடுக்க ஆளில்லாதவர்களுக்கும் தோள் கொடுக்கும்

  • By Magazine
  • |

சமூக ஆர்வலர் குளச்சல் முகம்மது சபீர் !

‘கை கொடுக்க ஆளில்லாதபோது, தோள் கொடுக்க ஒருவராவது வேண்டும்’ என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தன்னை சமூக சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் குளச்சல் முகம்மது சபீர். கன்னியாகுமரி மாவட்டத்தின் அறியப்படாத பல சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வரும் இவரை, நம் புதிய தென்றலுக்காக சந்தித்தோம்.

கேள்வி: இருபது ஆண்டுகால நீண்ட சமூக சேவைப் பயணம்… இந்த ஆர்வம் எப்படித் தொடங்கியது?

பதில்: சமூகத்தில் அடித்தட்டு மக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைப் பெறுவதற்கே திணறுவதைக் கண்டு மனம் வருந்தினேன். அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை இந்தப் பயணத்தில் இறக்கிவிட்டது. இது வெறும் சேவையல்ல, என் வாழ்க்கையின் ஒரு பகுதி.

கேள்வி: உங்கள் சமூக சேவைக்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் யார்?

பதில்: எதையும் தனித்துச் சாதிக்க முடியாது. நாகர்கோவிலைச் சேர்ந்த கவிஞர் நா. இனியன்தம்பி அவர்களும், சமூக சேவகர் குளச்சல் சாகுல் அமீது, அகில இந்தியமக்கள் நல கழகம் நிறுவனத் தலைவர்  சிவகுமார். தகவல் அறியும்  உரிமைச் சட்டம் ஆர்வலர் திருநெல்வேலி உத்தர நாயகம். ஆகியோர் எனக்கு வழிகாட்டிகளாகவும், உத்வேகம் தரும் ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையும், வழிகாட்டலுமே என்னை இன்றுவரை தளராமல் மக்கள் பணியில் ஈடுபட வைக்கிறது.

கேள்வி: நீங்கள் பொதுமக்களுக்காக மேற்கொள்ளும் பணிகள் என்னென்ன?

பதில்: எளிமையானதுதான், ஆனால் அவர்களுக்கு அது மிகப்பெரியது. ஏழை எளியவர்களுக்கு ரேஷன் கார்டு பெற்றுத் தருவது, நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்ப்பது, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மனுக்கள் மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பது, குடிநீர் மற்றும் மின்சார சிக்கல்களுக்கு அதிகாரிகளிடம் குரல் கொடுப்பது எனப் பல பணிகளைச் செய்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பலருக்கு நியாயம் பெற்றுத் தந்துள்ளோம்.

கேள்வி: ‘இளம் கரங்கள் இரத்த தான அமைப்பு’ குறித்துக் கூறுங்களேன்…

பதில்: இது என் இதயத்திற்கு நெருக்கமான முயற்சி. பல இளைஞர்களை ஒன்றிணைத்து இரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திரு. சேக், திரு. சுரேஷ், ரதி, சரவணன், சேக் முகமது போன்ற தன்னலமற்ற நண்பர்களின் ஒத்துழைப்புதான் இந்த அமைப்பைத் திறம்பட நடத்த முடிகிறது.

கேள்வி: இவ்வளவு பெரிய பணிகளில் நீங்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்திருக்கிறீர்களா?

பதில்: ஆம், மனித உரிமை மற்றும் நுகர்வோர் உரிமை அமைப்புகள், தமிழ்நாடு தமிழ் சங்கம், தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு எனப் பல அமைப்புகளில் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறேன். கன்னியாகுமரி மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு மற்றும் மக்கள் உரிமை குழுவின் மாவட்டத் துணைத் தலைவர் பொறுப்புகளில் இருந்தும் மக்களுக்காகச் செயல்படுகிறேன்.

கேள்வி: உங்கள் சேவையைப் பாராட்டித் தேடி வந்த விருதுகள் பற்றி?

பதில்: விருதுகள் எனக்குத் தரும் ஊக்கத்தைவிட, விருதுகள் கொடுக்கும் அமைப்புக்குச் சேவையின் மீதான மரியாதையைத் தருகிறது. ஜமாத் கூட்டமைப்பின் ‘சிறந்த சமூக சேவகர்’ விருது, JCI விருதுகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் விருது, மதுரை உதவும் அறக்கட்டளையின் ‘சாதனை நாயகன்’ விருது எனப் பல அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. இது இன்னும் நிறையப் பணியாற்ற எனக்குப் பொறுப்பை உணர்த்துகிறது. மக்களின் கண்ணீர் துடைப்பதே தனது விருது எனக் கருதும் முகம்மது சபீர் அவர்களின் மக்கள் பயணம் மென்மேலும் சிறக்க, இதழாளர் ஜெய கர்ணன், சமூக ஆர்வலர் சங்கர் ராஜேந்திரன், இலங்கை சமூக சேவகர் பிரதாபன் . செ முருகன்  சமூக ஆர்வலர் கோவில்குளம் அம்பாசமுத்திரம். சிநேகம் முதியோர் இல்லம் நிர்வாகி லதா கலைவாணன். இவாஞ்சலின் டிரஸ்ட் நிர்வாகி தங்க சுதா. முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகி பரிதாபேகம்.கன்னியாகுமரி மாவட்டம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள். பிளசிங் லைப் பவுண்டேஷன் டிரஸ்ட் நிர்வாகி  ரவி. எம் எஸ் சி அறக்கட்டளை தலைவர் சமூக சேவகர்  வினோ தேவராஜ்.   மற்றும் பல சமூக  ஆர்வலர்கள் தனது சமூக சேவைக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறுகிறார் சமூக சேவகர் குளச்சல் முகமது சபீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *