உண்பதன் மூலம் உயிர்களை அழிக்கிறோம்!

  • By Magazine
  • |

– ஓஷோ

உண்ணப்படுவோம் என்று நாம் பயப்படுகிறோம், ஏன்? இதைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்ணப்படுவோம் என்று ஏன் அவ்வளவு பயப்பட வேண்டும்? எல்லா வாழ்க்கையிலுமே நாம் உண்ணுகிறோம். உண்பதன் மூலம் உயிர்களை அழிக்கிறோம். நீங்கள் எதை உண்டாலும் கொல்கிறீர்கள். நீங்கள் கொல்லத்தான் வேண்டும். ஏனெனில் உயிர் உயிரைத் தான் உண்ண முடியும். வேறு வழியில்லை. எனவே எவருமே சைவமாக உண்மையில் இருக்க முடியாது. யாரும்! எல்லோருமே அசைவம் தான். ஏனெனில் நீங்கள் உண்ணும் எதுவுமே உயிர்தான். நீங்கள் பழத்தை உண்கிறீர்கள். அது உயிர்தான். நீங்கள் காய்கறிகளை உண்கிறீர்கள். காய்கறியில் உயிர் இருக்கிறது. கோதுமை, அரிசி இவற்றை உண்கிறீர்கள். இவை மேலும் புதிய உயிர்கள் மலர்வதற்கான விதைகள், நீங்கள் சார்ந்து நிற்கும் எதுவுமே உயிரோடு இருக்கிறது.

உயிர் உயிரை உண்கிறது. எதுவுமே வேறு யாருக்கோ உணவாகத்தான் இருக்கிறது. பிறகு ஏன் உங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும்? நீங்கள் உண்ணப்படாமலிருக்க வேண்டும் என்று ஏன் நிச்சயம் செய்ய வேண்டும்? வெறும் முட்டாள் தனம்! உங்கள் வாழ்க்கை முழுவதும் உண்டு கொண்டே இருந்தீர்கள். இப்போது உங்களை உண்பதற்கு அதற்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். உங்களை உண்ண அனுமதியுங்கள்.

எனவே தான் நான் சொல்கிறேன், உடலை அப்புறப்படுத்த பார்சியினரின் முறை தான் அறிவியல் பூர்வமானது. இந்துக்கள் அதை கொழுத்தி விடுகிறார்கள். ஒவ்வொரு மரமும் தன் கனியை எரித்தால், ஒவ்வொரு மிருகமும் இறந்து அதை அடுத்த மிருகம் எரித்தால் என்னவாகும்? யாருமே இங்கே இருக்க மாட்டார்கள்.

உட்கிரகிக்கப்பட இதுதான் மிகச் சிறந்த வழி. உண்ணப்படுவதால் உங்களில் இருக்கும் உபயோகமான எல்லாமே எங்கோ யாரிடமோ உபயோகமாய் இருக்கிறது என்று பொருள். ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மிருகம் உங்கள் வாழ்வால் உயிர்த்தன்மையோடு இருக்கும். உங்கள் வாழ்வு பகிர்ந்தளிக்கப்பட்டது என்று சந்தோஷமாக இருங்கள். இதில் ஏதோ, பிரச்சினை என்று ஏன் உணர்கிறீர்கள்? எதையுமே நம்மால் பாதுகாக்க முடியாது. எதுவுமே பாதுகாக்கப்பட முடியாது.

வாழ்க்கை பாதுகாப்பற்றது, சாவைக் கூட பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் முயற்சிக்கிறீர்கள். பாதுகாக்க, அழியாமலிருக்க நீங்கள் நினைக்கிறீர்கள். பார்சிகளின் முறைதான் மிகச் சரியானது. சுவரின் மேல் உடலை வெறுமனே விட்டு விடுகிறார்கள். பிறகு கழுகுகளும் மற்ற பறவைகளும் வந்து அதை உண்ணுகின்றன. எல்லோருமே, பார்சிகளே கூட பார்சிகளை எதிர்க்கிறார்கள். ஏனெனில் முழு விஷயமும் மிகவும் அசிங்கமானதாக இருக்கிறது. அது அசிங்கமாக இல்லை. நீங்கள் சாப்பிடும் போது அது அசிங்கமாகவா இருக்கிறது? பிறகு ஏன் ஒரு கழுகு சாப்பிடும் போது அசிங்கமாக இருக்க வேண்டும்? நீங்கள் சாப்பிடும் போது இரவு உணவாகிறது. கழுகு உங்களை சாப்பிடும்  போது கழுகுக்கு அது இரவு உணவு தான். பிறரை நீங்கள் உண்டு கொண்டிருந்தீர்கள். அடுத்தவர்கள் உங்களை உண்ண அனுமதியுங்கள். உட்கிரகிக்கப்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *