– கை. செல்லத்தங்கம்
காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ சிந்தனைதான் என்றேன். எதிர்த்த வீட்டு பொண்ணை பற்றி நினைச்சி பார்த்தியாக்கும் என்றார் என்னவர். ஆமாங்க என்றேன். உன் முகத்திலே தெரியுது என்றார். பெரிய சைக்கியாட்ரிஸ்ட் தான் வாங்க டிபன் சாப்பிடுவோம் என்றேன். இருவரும் காலை உணவு அருந்திய பின் மீண்டும் பால்கனியில் வந்து செயரில் இருந்தேன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
இரண்டு வருடம் இருக்கும் அப்போது எங்கள் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு வந்தது. அதுக்கு முன்னாலும் இருந்தாங்க அவங்க என் மனதைத் தொட்டதில்லை. எங்கள் வீட்டுக்கு முன் ரோடு 24 அடி அகலம் இருக்கும். எதிர்த்தாப்பில ஒரு சிம்பிளான வீடு. ஒரு நடுத்தர குடும்பம் வசிக்க போதுமானது. வீட்டு சொந்தகாரர் கொஞ்சம் புறநகரில் பெரிய வீடு கட்டிப் போட்டார். பழைய வீட்டை வாடகைக்குக் கொடுத்திருக்கார். நானும் என் கணவரும் தான் வீட்டிலே இரண்டு பேரும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.
எனது மகன் வெளியூரில் வேலை… மாதம் ஒருமுறை குடும்பத்தோடும் இருமுறை அவன் மட்டும் வந்து போவான். காலை மாலை இருவேளை போன்…மாலையிலே வீடியோ கால். மகள் பக்கத்து ஊரிலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து அவளும் பட்டணத்தில் தான் இருக்கிறாள். ஊருக்கு வரும் போது வருவாள். மற்றபடி கோவில் விழா. உறவுகள் வீட்டு விஷேசங்களுக்கு வந்து போவார்கள். எனது பொழுதுபோக்கு ரேடியோ கேட்பது, புத்தகங்கள் படிப்பது. காலை 6 மணிக்கு தொடங்கி 10 மணி வரை ரேடியோ. அதன் பின்னர் நாளிதழ், நாவல்கள் என வாசித்தல். கணவர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் அது இது என இப்போதும் பொறுப்புகள் தான்.
மாலையில் நடசாரிகளுடன் பொழுதுபோக்கு என அவருக்கு நேரம் சரியாக போய் விடும். எதிர்த்த வீட்டிலே ஒரு குடும்பம் வந்தபின் எனது பொழுதுபோக்கு கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. ஏனென்றால் அதே செயல்பாட்டுடன் அந்தப் பெண். பார்க்க அழகாக துடைச்சி வச்ச குத்து விளக்கு மாதிரி இருப்பாள். கணவர் மாமியாருடன் சின்ன குடும்பம். வந்து கொஞ்சம் நாளிலே எல்லோரிடடும் பழகி விட்டாள்.
அவள் பெயர் கல்பனா என்றும் கணவர் பிரபலமான ஜவுளிக் கடையில் மேலாளர் என்றும், கணவரோடு பிறந்தவர்கள் ஓர் அண்ணன், தங்கை இருவருக்கும் திருமணமாகி விட்டது. திருநெல்வேலி மாவட்டம் சொந்த ஊர். கணவரின் சகோதரர் குடும்ப வீட்டில் குழந்தைகளோடு உள்ளார். அவர் விவசாய வேலையும் ஒரு சைக்கிள் கடையும் வைத்துள்ளார் என்றும் கூறினார். அவர்களும் இவர்களும் அடிக்கடி ஊருக்கு சென்று வருவார்கள். வந்து இரண்டு மாதத்திலே அக்கம் பக்கத்தினரிடம் பேசி கேட்டு டியூசன் எடுக்க ஆரம்பித்து விட்டாள். பத்து பன்னிரண்டு பிள்ளைகள் படிக்க வருகிறார்கள். மாலை 5 மணி தொடங்கி 8 மணி வரை டியூசன் தான். பிள்ளைகள் சைக்கிளில் வருவதும் அவங்க பெற்றோர் கொண்டு விட்டு கூட்டிக்கிட்டு போவதை மாலையில் சிட் அவுட்டில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பார்த்துக் கொண்டிருப்பேன். கொஞ்ச நேரம் நடைபயிற்சியும் அந்த ரோட்டில் செய்வேன்.
டியூசன் நடக்கும் போது கல்பனாவின் மாமியார் அவங்க வீட்டிலே சின்ன சிட் அவுட்டில் உட்கார்ந்திருப்பார். பெரும்பாலும் மாலை வேளையில் கோவிலுக்கு சென்று விடுவார். நாலு தெரு தள்ளி அவரோட சகோதரி இருக்கிறதாகவும் அங்கே போய் இருந்து கிட்டு கோவிலுக்குப் போய்க்கிட்டு வருவதாகவும் சொல்வார். கல்பனா பற்றி சொல்லணுமே காலையில் வாசல் தெளித்து கோலம் போடுறதில் இருந்து எல்லா வேலையிலும் சுத்தம், சுறுசுறுப்பு. அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை. ஆனால் அழகு , நீண்ட கூந்தல், நெற்றியில் கோவி பொட்டு, சிறப்பான டிரெஸ்ஸிங் கோடு ஏனோ அவளை எனக்குப் பிடித்து விட்டது. வந்த இரண்டு நாள்களில் வெளியே அம்மா என்று குரல் கேட்டது. வந்து பார்த்தேன். தன் பெயர் கல்பனா M.Sc Maths படித்துள்ளதாகவும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதாகவும் சொல்லி கணவர் குடும்பம் பற்றியும் சொன்னாள். எப்போதும் புன்னகையுடனான முகம். அதன் பிறகு அம்மா… அம்மா என கூப்பிட்டு மனதில் இடம் பிடித்து விட்டாள்.
மார்க்கெட் போகிறேன் ஏதாவது வேணுமா வாங்கி வர்றேன் என்பாள். ஒரு நாள் வீட்டில் இல்லையென்றால் என்னம்மா காணோம் என விசாரிப்பு . முகவாட்டம் தெரிந்தால் உடம்பு சரியில்லையா என கரிசனமான விசாரிப்பு. பொதுவாக எல்லோரும் இப்படி இருப்பதில்லை. இவள் சற்றே வித்தியாசமானவள். நானும் பல ஊர்களில், அலுவலகங்களில் 33 வருடம் பணிபுரிந்திருக்கிறேன். பலரோடு பழகியிருக்கிறேன். இவள் வேற மாதிரி மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். காலையிலேயே அவங்க வீட்டிலேயும் ரேடியோ கேட்கும் அவளும் ரேடியோ கேட்கிறாள். மற்ற நேரங்களில் குரூப் தேர்வுகளுக்கு தயாராகப் படிப்பு தான். ஒருநாள் மகிழ்ச்சியோடு வந்தாள். அம்மா நான் குரூப் – II பாஸ் பண்ணிட்டேன் என்றாள் வாழ்த்தினேன்.
மூன்று மாதங்களுக்கு பிறகு வந்து இனிப்பு தந்தாள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி என்றாள். கணவரும் அவர் வேலை செய்யும் ஜவுளிக்கடை அந்த ஊரில் உள்ளது மாற்றல் வாங்கி விட்டார் என்றாள். ஒன்றாம் தேதி வேலையிலே சேரணும்.. வீடு பார்த்துட்டோம்.. அடுத்த வாரம் மாறி விடுவோம் என்றாள். எனக்கு மனசு கனத்தது. உங்களை மாதிரி உள்ளவங்களை மிஸ் பண்ணுவது கஷ்டமாக இருக்குது அம்மா என்றாள். ஆனாலும் வாழ்க்கை சக்கரத்தின் பின்னால் சுற்றித்தானே ஆகணும். அவளுக்கு மட்டுமா கஷ்டம் நானும் அவளை மிஸ் பண்ணுகிறேன் என்று அவளுக்கு புரிந்திருக்கும். வீடு மாறிச்செல்லும் போது குடும்பத்தோடு வந்து சொல்லி சென்றார்கள். அதன் பின்னர் அந்த வீட்டிற்கு யாரும் வரவில்லை. வீட்டை இடித்து பெரிய வீடு கட்டப் போகிறார் என்று பேசிக் கொள்கிறார்கள். என் கணவர் என்னைப் புரிந்து கொண்டார். 38 வருடமாக குடும்பம் நடத்துகிறவர் அல்லவா என் பிள்ளைகளிடமும் போனில் சொல்லி விட்டார். உங்கம்மா எதிர்த்த வீட்டுப் பொண்ணை மிஸ் பண்ணுகிறாள் என கிண்டலோடு பேசுகிறார். ஆம் எல்லோரும் மனதில் ஒட்டுவதில்லை. இவள் ஒட்டி விட்டாள். அவளிடம் பேச வேண்டும் என நினைத்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பாள் என்று நினைக்கவும் என் கைபேசி சிணுங்கியது. என்னவர் போனை எடுத்து வந்தார். திரையில் பெயர் எதிர்வீடு என்று வந்ததும் சிரித்தார். உன் எதிர்வீடு வருகிறது பேசு என்றார். சிரித்தபடி வாங்கிப் பேசினேன். நலம் விசாரித்த பின் சொன்னாள் நான் தாயாக போகிறேன் என்று மன நிறைவுடன் வாழ்த்தினேன் என் மனமும் மகிழ்ந்தது.
Leave a Reply