வாய்ப்புண்

வாய்ப்புண்

  • By Magazine
  • |

டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)

வாயில் ஆரம்பித்து ஆசனவாயில் முடிவடையும் ஜீரணமண்டலத்தில், வாய் முதல் பகுதியாக உள்ளது.

வாய்ப்புண் பல காரணங்களால் ஏற்பட்டு, உணவு உண்பதற்கும், உணவு விழுங்குவதற்கு சிரமத்தை கொடுக்கிறது.

உதடுகளின் உட்புறம், கன்னத்தின் உட்புறம், நாக்கு, பல்ஈறு ஆகிய பகுதியில் ஏற்படும் புண்களை, வாய்ப்புண் என்று அழைக்கிறோம்.

பொதுவாக வாய்ப்புண் 4 நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் ஆறிவிடும். வாய்ப்புண்ணை அக்கரம் என அழைப்பதுண்டு.  மேலும்  Apthousulcer, Stomatitis என்பதும் வாய்ப்புண்ணை குறிக்கும்.

வாய்ப்புண் உண்டாவதற்கான காரணங்கள்

  • காரமான உணவு உட்கொள்ளுதல், சூடான உணவு உட்கொள்ளுதல்.
  • காணம் போன்ற உஷ்ண தன்மையுள்ள உணவு பதார்த்தங்களை அதிகமாக உண்பது.
  • சத்தான உணவு உண்ணாமல் இருப்பது (இரும்புசத்து, விட்டமின் B2, B3, B6, B9, B12, விட்டமின் C சத்து, நாகசத்து)
  • போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம் மற்றும் உடல் உஷ்ணப்படுதல்.
  • காய்ச்சல் மற்றும் நோய் கிருமிகளினால் ஏற்படும் தொற்றுநோயை தொடர்ந்து உண்டாகலாம்.
  • பல் விளிம்புகளால் உராய்வுகள் ஏற்படுதல், பல் கடிபடுதல்
  • பிறநோய்களுக்கு உண்ணும் மாத்திரைகளின் பக்கவிளைவு.
  • குடல்புண் நோய் இருப்பதன் காரணமாக வாயில் புண் உண்டாகலாம்.
  • வாயில் உமிழ்நீர் சுரப்பு குறைந்து வாய் வறட்சியாக இருப்பது.
  • நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது.
  • புகையிலை, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்கள் காரணமாக வாயில் புண் உண்டாகலாம்.

வாய்ப்புண் உண்டாகமல் தடுக்க

  • வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருமுறை பல் துலக்குவது, உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.
  • சத்துள்ள உணவு பொருள்களை உண்ணுதல். குறிப்பாக இரும்புசத்து, விட்டமின் B  சத்து நிறைந்த உணவு பொருள்கள் அதிகம் உண்ணவும்.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய விட்டமின் C சத்து நிறைந்த உணவு பொருள்கள் அதிகம் உண்ணவும்.
  • புகையிலை, புகைபிடித்தல் போன்ற போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • போதிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • காரமான உணவு, கொள்ளு போன்றவை சாப்பிட்டால் மோர் குடிக்க வேண்டும்.
  • உடல் உஷ்ணத்தை குறைக்கவும், நல்ல தூக்கத்தை உண்டாக்கவும் யோகப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வாய்ப்புண்ணிற்கு வீட்டு வைத்தியமுறை

  • தேங்காய் பால் 100 மில்லி வீதம் காலையில் ஆகாரத்திற்கு முன் ஒரு வாரமாவது  சாப்பிடவும்.
  • தேன் அல்லது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் புண்ணில் தொட்டு போடலாம்.
  • தினசரி மோர் குடிக்கவும்.
  • மணத்தக்காளி கீரை மென்று சாப்பிடலாம்.
  • தேனுடன் சிறிது மஞ்சள் கலந்து புண்ணில் பூசலாம்.
  • நெல்லிக்காய் (2 அல்லது 3 எண்ணம்) இத்துடன் தண்ணீர் விட்டு வேகவைத்து வடிகட்டி அருந்தலாம்.
  • தேங்காய் எண்ணெய் 20 மில்லி வாயில் வைத்து கொப்பளித்து 5 நிமிடம் கழித்து உமிழலாம்.

வாய்ப்புண்ணிற்கு எளிய சித்த வைத்திய குறிப்பு

  • திரிபலா சூரணம் தேன் கலந்து வாய்ப்புண்ணில் பூசி வைக்கவும் விரைவில் புண் ஆறும்.
  • வெங்காரத்தை பொரித்து தேன் கலந்து அரைத்து (வெங்காரமது) வாய்ப்புண்ணில் பூசி வைக்கவும்.
  • திரிபலா சூரணம் அரை கறண்டி தினம் இருவேளை சாப்பிடலாம்.
  • மேலும் மருத்துவரை அணுகி இந்நோய்க்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வது சிறந்ததாகும்.

கவனிக்க வேண்டியவைகள்

  • சுமார் 14 நாட்களுக்குள் வாய்ப்புண் ஆறவில்லை எனில் மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
  • தொடர்ந்து மீண்டும் மீண்டும் வாய்ப்புண் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
  • வாய்ப்புண்ணுடன் காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுக வேண்டும்.
  • ஆறாத வாய்ப்புண்கள், வாய்ப்புண்ணால் வாய் திறக்க சிரமம், அதிக அளவு காந்தல், புண் கடினத்தன்மையாக இருத்தல், பேசும்போது பேச்சு தடைபடுதல் போன்றவை வாய்ப்புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *