வர்மம் எனும்  மர்மக்கலை!

வர்மம் எனும்  மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

புயவர்மம்

சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கூட்டுக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் புயவர்மம் பற்றி அறிவோம்.

புயவர்மம் புயத்தின் நடுச்சுழியில் அமைந்துள்ளது. புஜ வர்மம், புஜப்பொருத்து வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.

“புஜத்தின் நடுச்சுழியில் புயவர்மம்”.

                                                                                வர்ம குருநூல்

“தாக்குகின்ற காறை எல்லுமுனை அற்றத்தில்

சார்வாக புயவர்மம்”.

                                                                               – வர்ம கலைக்களஞ்சியம்

என குறிப்பிடுகிறது.

“தீருமடா காறையதின் முனையில் தானே

திறமான புயவர்மம் அதற்கு பேரு

ஆரடா கையதிலே கூச்சமாகி

அழகான புயமதில் வீக்கமுண்டாம்

நேருமடா கையதனை தூக்கிடாது

நிர்ணயமாய் நித்திரையும் காணாதப்பா

சேருமடா திருமேனி எண்ணெயிட்டு

செயலாக மூன்று நாள் தடவத்தீரும்”.                                                                                                                                                                                                           – வர்மச் சூத்திரம்

“……………. இத்தலத்தில் பிசகு வந்தால்

பொருத்துவிட்டு எல்லுதான் விலகிப்போகும்

கை தானும் அசைக்கொட்டாது

கனத்த வீக்கம் வந்து

தேகமெல்லாம் விசர்த்து தளர்ந்துபோகும்”.

                                                                                                                வர்ம நிதானம்

                “ஈடுவரும் புயவர்மம் கொண்டங்கம் தரித்தாலோ

                                பங்கம்வரும் பழிகள்வரும் உயர்த்தொண்ணாது

                பாடுவரும் வழிதீர்க்க கவளியடங்கல் சுழித்து

                                சுழியாடி செவிக்குற்றி பழிதீர ஆடைவழி தடவி

                கூடுவரும் கழுத்துறை வழி தடவி கூத்தனுயிர்

                                ஆடவரும் கையசைத்து நால்வசவும்

                கேடுவரும் பிணியகல வழிவகையாய் மருந்தும் செய்து

                                கெடுதியிலே பணிமுடிக்கும் பருதியாமே”.

                                                                                                                                வர்ம குருநூல்

எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,

                காணுகின்ற கைப்புயச்சுழி மேலுறவாய் பற்றியேக்

                கோணுகின்றதலந்தனிலுற்றுறவாய்புயவன்மமிஃது

                வேணுமென்ற வூக்கமிஞ்சிக் கொண்டிடில் உடன்

                நாணுமிந்த மேற்கையோ பொங்கிடாது என்னே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கண்ணில் காணுகின்ற புயத்தின் மேல் உள்ள சுழிவாகி கோணுகின்ற தலம் பற்றி புயவர்மம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அதிக ஊக்கமாய் தாக்கம் கொண்டிடில் உடனே மேற்கையானது உயர்த்த முடியாமலாகிவிடும் என்பதாம்.

                பொங்கிடாதுள் வலியும் தரிப்பெடுத்துழையுமாம்

                அங்குறவாய் வீக்கமுற்றசைத்திடவேக் கடினம்

                தங்குமந்த வலியதானால் தூக்கம்மிகக்கலையும்

                எங்குமுறும் வலியாலே தளர்வுறுத்தும் என்னே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கை உயர்த்த இயலாமல் வலி மிஞ்சி தரிப்பெடுத்து உழைச்சல் உண்டாகும். தொடர்ந்து வீக்கம் தோன்றி கை அசைக்க முடியாமலாகி விடும். மேலும் அவ்விடத்தில் வலி மிஞ்சுவதால் தூக்கமும் கெட்டுவிடும். தொடர்ந்து வலி அதிகமாகும்போது உடலும் தளர்ச்சை அடையும் என்பதாம்.

                வன்மையுறும் புயவன்மம்கொண்டுவலிமிஞ்சிடிலோ

                தன்மையறிந்துறவாய் அண்டியிறுக்கி தூசியது சூழ

                நன்மைவுணர்ந்துநற்கட்டிட்டுநனைத்துவிடுதைலம்

                பொன்மை புதுமையுற புகட்டு நல்மருந்தகமே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                வலிமையான தாக்கம் கொண்டு புயவர்மத்தில் வலி மிஞ்சிக் காணப்பட்டால் அதன் தன்மைக்கேற்ப துணியினால் கட்டி மருந்து தைலத்தை நனைத்து வருவதோடு சிறந்த மருந்துகளையும் கொடுத்து விட வேண்டும் என்பதாம்.

                நன் மருந்தொன்று கேளன்று பிணிபல அகலவே

                வன்மருந்தாமிஃதுழிஞை தோடைவகை நொச்சி

                தின்மருந்தமிர்துசிவன்வேம்புநல்வேம்புகொழிஞ்சி

                என்மருந்தென்றமுக்கூரம் பாவுகருஞ்சீரகம் சீரமே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பிணிகள் பல தீருவதற்கு நல்ல மருந்தொன்று கேட்பாயாக. உழிஞை, ஆடாதோடை, வெண்நொச்சி, கருநொச்சி, அமிர்துவள்ளி, சிவனார்வேம்பு, வேம்பு, கொழிஞ்சி, அமுக்கூரம், சீனப்பாவு, கருஞ்சீரகம், சீரகமுமாமே.

                சீரமொடும் சந்தம் நல் அரத்தையதிமதுரம் ஆனைத்திப்பிலி

                காரமொடும் காணம் கார்கோல் வெண்குந்திரிக்கம் குக்கில்

                வீரமொடு எடு கருஞ்சூரை திறிகடுகு திறிபலையும்இங்கு

                தீரமொடும் வால்மிளகு கசகசா மரமஞ்சளாமே.

விளக்கம்

                மேல்மருந்துகளுடன் சந்தனம், அரத்தை, அதிமதுரம், ஆனைத்திப்பிலி, காணம், கார்கோலரிசி, வெண்குந்திரிக்கம், குக்கில், கருஞ்சூரை, திறிகடுகு, திறிபலை, காயம், வால்மிளகு, கசகசா, மரமஞ்சளுமாமே.

                மரமஞ்சளொடும் கொட்டம் கொம்பரக்கு இறகதரிஇடம்

                திரமஞ்சளாம் கறிமஞ்சள்கற்கடகசிங்கியொடுதெசாவரம்

                வரள்மஞ்சளுறும் கடலழிஞ்சில் கருதுநல் வாலுளுவை

                நறுமஞ்சணாத்திப் பட்டையொடு பகருநல் ஓமமே.

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மேல்மருந்துகளோடு கொட்டம், கொம்பரக்கு, இறகதரி, இடம்புரி, கறிமஞ்சள், கற்கடகசிங்கி, தெசாவரம், கடலழிஞ்சில், வாலுளுவை, நறுமஞ்சணாத்திப்பட்டை, ஓமம்.

                ஓமமொடும் எடு மருந்திடு வகை வகைக்கு நாற்கழஞ்சாய்

                ஏமமொடும் கொடு அனலில் புனல் வற்றி எடுஎட்டொன்றாய்

                நாமமொடும் இம்மருந்திருநேரம் நாளொன்றுக்கு தேன்விட்டு

                வேகமொடு மெய்வலிகள் தருபல் பிணிகளோடும் எண்ணே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மேல்மருந்துகள் அனைத்தும் வகைக்கு நான்கு கழஞ்சி அளவு எடுத்து கசாயமிட்டு வற்றக்காய்ச்சி எட்டில் ஒரு பங்காக்கி நாளொன்றுக்கு இருவேளை வீதம் தேன் கலந்து பருகிவர உடல்வலியும் பல்வேறு பிணிகளும் பறந்து ஓடும் என்பதாம்.

                என்னவேப் பிணிகள் பலவோடு முடலதில்காண்

                அன்னவே வீக்கம் வன்மம் கொழுத்தும் குத்தும்

                தின்னவே திடமாம் பத்தியமாய்யன்னம் மிதற்கு

                மென்னவே மேன்மருந்து பொடிகுளிகை பாரே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                பல்வேறு பிணிகள் அகலுவதோடு, பத்தியமாய் இதனை உண்டுவர உடலில் உண்டாகும் வீக்கம், வர்மம், கொழுத்து, குத்து போன்ற பிணிகளும் அகலும். மேலும் இம்மருந்துடன் பொடி மற்றும் குளிகையும் சேர்த்து உண்டுவரவும்.

                பாரில் புயவன்மம் தொட்டுறவாய் செய்திடிலோ

                நீரில் உப்புறவாம் திகைப்பும் அப்புறமாய் ஓடும்

                சேரில் கையணைத்துசீருறவாய் செய்துவரிலோ

                வேரிலா மரமன்னவாம் வலிகள் பலவென்னே.     

  – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                புயவர்மத்தை தொட்டு தூண்டிவர, நீரில் உப்பு கரைந்து காணாமல் போவது போன்று திடீரென வரும் திகைப்பு எனும் அதிர்ச்சி (Shock) மாறிவிடும். மேலும் இவ்வர்மத்தினை சீராக தூண்டிவர உடலில் உண்டாகும் பலவித வலிகளும் வேரில்லா மரம்போல் நில்லாமல் ஓடிவிடும் என்பதாம்.

                என்னவும் இவ்வன்மம் மருந்துறாது விட்டிடிலோ

                கன்னவேகடுவலியும் கரவாதம்குத்துழைச்சல்காண்

                அன்னமேசெறுக்கும்உறக்கமும்போம்மெய்வலியும்

                மென்னவே மேன்மேல் வளர்ந்துறும் என்னே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இவ்வர்ம பாதிப்பிற்கு மருந்துண்ணாமல் விட்டுவிடில் கடுமையான வலியும், கையில் வாதமும், குத்துழைச்சலும் உண்டாகி உணவு உண்ணும் விருப்பம் குறைந்து, உறக்கமும் கெட்டு உடல்வலி மேலும் அதிகரிக்கும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தில் தாக்கம்கொண்டால் தாக்கத்தின் மாத்திரைக்கேற்ப கையில் கூச்சமும், புயத்தில் வீக்கமும், தாங்கமுடியாத அளவு வலியும் உண்டாகி கையை தானாக தூக்க முடியாமல் ஆகிவிடும். புயம் விழுந்து போகும், புய பகுதியில் தரிப்பு உண்டாகி, தோள்பகுதியில் பாரம் தோன்றும். கலைநிலையில் கொண்டு வலி மிஞ்சுமானால் வியர்வையுடன் தளர்ச்சையும், தாகமும் உண்டாகும். கை புயத்தில் முறிவு ஏற்படுமாயின், துணியினால் கட்டிட்டு, முறிவெண்ணெய் தாரை செய்து நல்ல மருந்துகளும் கொடுத்துவர சுகம் உண்டாகும்.

இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்தின் மேல்பகுதியிலிருந்து தடவி, இருபக்க புயம் வழியே கை வரை தடவி, கைவிரல் வழியே இழுத்து நீட்டி, தசைவழியே கை முன்னும் பின்னும் அணைத்து தடவி, கவளி அடங்கல், சுழியாடி அடங்கல், செவிக்குற்றி அடங்கல், கூட்டடங்கல் போன்றவைகளை தூண்டி விட சுகம் உண்டாகும். எனினும் தொடர்ந்து எண்ணெய் கட்டு, மூலிகை பாளமிடுதல் போன்றவைகளோடு சிறந்த அகமருந்துகளையும் உடனடியாக செய்யவேண்டும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் கையில் கூச்சம், அடிக்கடி தரிப்பு, உறக்கமின்மை, கரவாதம் மற்றும் கழுத்துவலி போன்ற பின்விளைவுகளில் ஒன்றோ பலவோ உண்டாகக் கூடும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல், அகங்கை போன்றவைகளாலான தூண்டல், அழுத்தல், அனுக்கல், அதிர்த்தல், அமத்தல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர கழுத்துவலி, கை செயலிழப்பு, கைமூட்டு வலி, நிணநீர் காசக்கட்டிகள், கைவலி, காதுவலி, திடீரென தோன்றும் கோபம், தலைவலி போன்றவை குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *