இந்தி ஆதிக்க எதிர்ப்பு

இந்தி ஆதிக்க எதிர்ப்பு

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார்.

மொழிப்போர் முதல் கட்டம்

உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என அனைவரும் ஓரணியில் இராசாசி கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்திக்கும் தமிழர்களுக்கும் எத் தொடர்புமில்லை. இந்தி ஓர் ஆரியமொழி. மூட நம்பிக்கைகளும் குருட்டுப் பழக்கவழக்கங்களும் நிறைந்தமொழி. இது பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவே பயன்படுத்தப்படும் என்றுஅனைவரும் எதிர்த்தனர். ஆனால், இராசாசி எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 1938-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் 125 பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. கட்டாய இந்திக்கு எதிராகப் பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இந்தி கட்டாயப் பாடமானால், பார்ப்பனர்கள் கல்வியில் முன்னேறுவர். பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகள் மேல்படிப்பைத் தொடர முடியாமல், கல்வியை இழப்பர் என்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இராசாசி பிடியை இறுக்கினார் தமிழர்கள் போராட்டத்தைக் கடுமையாக்கினர்.

‘தமிழர் பாசறை” என்ற அமைப்பு, கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். அக் கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டது. தலைவராகச் சோமசுந்தர பாரதியாரும் செயலாளராகக் கி.ஆ.பெ.விசுவநாதமும் பொறுப்பேற்க, பொரியார், உமாமகேசுவரன், பாலசுப்பிரமணியம், சௌந்தரபாண்டியன் ஆகியோர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர். முதலமைச்சர் வீடு, இந்தி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள் ஆகிய இடங்களில் மறியல், காங்கிரசு அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடிகாட்டுதல், உண்ணாநோன்பு போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிறை செல்லவும் இரத்தம் சிந்தவும் மடியவும் தயாராக இருந்தனர்.

1938, சூன் 3-ஆம் நாள் முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் முதல் நாள் மறியல் போராட்டம் தொடங்கியது. ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டனர். அடுத்தநாள் இன்னொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியை எதிர்த்து உண்ணாநோன்பிருந்த காங்கிரசுக்காரர் பொன்னுச்சாமியும் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் வீட்டின் முன் போராடினால், கைது செய்வோம் என்றது, காவல்துறை. உடனே போராட்டக் களம் மாறியது. இந்தி கற்பிக்கும் பள்ளிகளின் முன்னால் போராடியவர்கள் இந்தியைப் புறக்கணிக்கும் படி பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகத்து, 1-ஆம் நாள், தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொண்டது. 42 நாள்கள் நீடித்த அப் பயணம், 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக் கூட்டங்களை நடத்தி, 577 மைல்கள் பயணம் செய்தது. திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில் மக்கள் பெருவெள்ளமெனத் திரண்டனர்.

இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகப் பெண்களும் இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மீனாம்பாள், நீலாம்பிகை, இராமாமிர்தம், தர்மாம்பாள், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள், மஞ்சுளாபாய், புவனேசுவரி, மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகியோர் மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இதில் பலர் குழந்தைகளோடு கைது செய்யப்பட்டனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கத் தொடங்கியதை அடுத்துப் பெரியார், அண்ணா உட்பட, தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த நடராசன் என்ற இளைஞர் உடல் நலக்குறைவால் 1939, சனவரி 19-ஆம் நாள் சிறைக்குள்ளேயே இறந்தார். மொழிப் போரில், முதல் உயிர்த் தியாகம் நடராசனுடையது. அவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவரைத் தொடர்ந்து, மார்ச் 12-ஆம் நாள், குடந்தைதாளமுத்து என்ற இளைஞர் சிறைக் கொடுமை காரணமாக இறந்தார். இருவரின் இறப்பும் போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கியது.

இதற்கிடையில்,‘இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவம் ஈடுபடுத்தப்படும்” என்று ஆங்கிலேய அரசு அறிவித்ததைக் கண்டித்து, காங்கிரசுத் தலைவர்கள் தங்கள் பதவியைத் துறந்தனர். இராசாசியும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தி கட்டாயம் என்பது திரும்பப் பெறப்பட்டுப் போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இத்துடன் முதல் மொழிப்போர் முடிவுக்கு வந்தது.

மொழிப்போர் இரண்டாம் கட்டம்

1948, சூன் 20, காங்கிரசைச் சேர்ந்த ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்த போது, மீண்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தார். அதை எதிர்த்து மறியல் போராட்டங்களும் கருப்புக் கொடிப் போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் மீண்டும் தொடர்ந்தன. அதேநேரத்தில், இந்தி குறித்துத் தேசிய அளவில் எழுந்த விவாதத்தில், காங்கிரசு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசின் ஆட்சிமொழி இந்தி என்றும் 1965 வரையில் ஆங்கிலம் தொடர்ந்து தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்படும் என்று முடிவானது.

மொழிப் போர் மூன்றாம் கட்டம்

தமிழ்நாட்டில் நடந்த முதல் இரண்டு மொழிப் போர்களும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை எதிர்த்து நடந்தவை. 1950-களில் நிலைமை வேறு விதமாக மாறியது. இந்தியைப் பொது மொழியாக, ஆட்சிமொழியாக ஆக்குவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வேறு கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆவதற்கான தகுதி பெற்றது என்பது இந்தி ஆதரவாளர்களின் கருத்து. இந்தி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி அல்ல. இந்தியாவின் இளையமொழியும் குறிப்பிடும் படியான இலக்கியங்களோ, அறிவுசார் அறிவியல் நூல்களோ இல்லாத இந்தியை, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்க முடியாது என்பது இந்தி எதிர்ப்பாளர்களின் வாதம்.

மேலும், இந்தி ஆட்சிமொழி என்ற பெயரில், இந்தி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. இந்தி அச்சகங்களுக்குச் சிறப்புச் சலுகைகள், அரசுப் பணிகளில் இந்தி படித்தோருக்கு முன்னுரிமை, இந்தி அலுவலங்களுக்குச் சிறப்புப் பரிசுகள், நாணயங்கள், உரூவா நோட்டுகளில் இந்தி எழுத்துகள் மட்டும் பொறிப்பது, ஒன்றிய அரசு நிறுவனங்களான இரயில், அஞ்சல் அலுவலகங்களில் இந்திக்கு முன்னுரிமை போன்றவை இந்தி எதிர்ப்புக்கு அடிப்படையாயின.

இந்திய விடுதலைக்குப் பிறகு, 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்று, இராசாசி மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இந்நிலையில், 1952, ஆகத்து முதல் இரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளைத் தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் திராவிடர் கழகமும் தி.மு.க-வும் இணைந்து களமிறங்கின. திருச்சியில் பொரியார் தலைமையில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் களமிறங்கினர். ஈரோட்டில் அண்ணா, கோவையில் ஈ.வே.கி. சம்பத்து மதுரையில் நெடுஞ்செழியன், கடலூரில் மதியழகன், சென்னையில் நடராசன், சத்தியவாணிமுத்து எனப் பெரும் தமிழர் படை இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளுக்குத் தார்பூசியது. இந்தியைத் திரும்பப் பெறும் வரை ஒவ்வோர் ஆண்டும் அப் போராட்டம் தொடரும் என்றார் பொரியார். தார்பூசிய இந்தி எழுத்துகளை, காங்கிரசுத் தொண்டர்கள் மண்ணெண்ணெய் கொண்டு நீக்கினர். அதற்கு ம.பொ.சி.-யின் தமிழரசுக் கழகம் உதவியது.

1955- இல் ஆட்சிமொழி ஆணையம் அமைக்கப்பட்டும் இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டுவர இயலாத சூழலில், 1959, ஆகத்து 7-ஆம் நாள் நேரு நாடாளுமன்றத்தில், முடிவில்லா காலத்திற்கு அரசுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக ஆங்கிலத்தை ஒரு கூடுதல் இணைமொழியாக இருக்கச் செய்வேன். மக்கள் எத்துணைக் காலம் அது தேவையெனக் கருதுகிறார்களோ, அதுவரைக்கும் நான் ஆங்கிலத்தை மாற்று மொழியாக இருக்கச் செய்வேன். அதனைப் பற்றி முடிவெடுப்பதை இந்தி பேசும் மக்களிடம் நான் விடமாட்டேன். இந்தி பேசாத மக்களிடமே விடுவேன் என்று உறுதிமொழி அளித்தார். அதை அப்படியே காற்றில் பறக்கவிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்து, 1960, ஏப்பிரல் 7-ஆம் நாள், புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அதில் 1965 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்றார்.

இப்போது மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாடு முதல்வர் காமராசரோ போராட்டத்தை எதிர்த்தார். ‘எங்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அதில் தோட்டவும் இருக்கிறது” என்றார் காமராசர். ‘ தியாகம் செய்வதற்கு எங்களிடம் 3,300 கிளைகள் இருக்கின்றன. 3 இலட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார் அண்ணா.

ஒன்றிய அரசுக்கும் திராவிட அமைப்புகளுக்கும் இடையேயான இந்தித் திணிப்பு தீராத போராட்டமாகத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இந்நிலையில், நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த இலால் பகதூர் 1963, ஏப்ரல் 13-ஆம் நாள், ஆட்சிமொழிச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். 1965, சனவரி 26 முதல் இந்தி ஆட்சிமொழியாக இருக்கும். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றது அந்த அறிக்கை. அறிக்கை மீது வாக்கெடுப்பு இல்லை, விவாதம் இல்லை, திருத்தங்கள் செய்ய ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் இச் சட்டத்தை ஏற்க முடியாது என்றனர் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள். எல்லா எதிர்ப்புகளையும் மீறி, சட்டம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் கட்டமொழிப் போர் தமிழ்நாட்டில் தொடங்கியது.

இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவை நீக்கவேண்டும். தமிழ் உள்ளிட்ட 14 மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் புதியசட்டப் பிரிவைச் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1963, நவம்பர் 17 முதல் 1965, சனவரி 26 வரை போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவித்தன, திராவிட இயக்கங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கருப்புக் கொடிப் போராட்டங்கள், மறியல்கள், ஈ.வெ.கி. சம்பத்து,க.அன்பழகன், மு.கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகக் களத்தில் நின்றனர். ஆறு மாதங்கள், ஓராண்டு என சிறைத் தண்டனை பெற்றனர். திருச்சி மாவட்டம் கீழ்ப்பழுவூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சின்னச்சாமி, 1964, சனவரி 25-ஆம் நாள் திருச்சி இரயில் நிலையத்தில் தனது உடலில் தீ வைத்துக் கொண்டு, ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!” என்று முழக்கமிட்டபடியே உயிர் நீத்தார். அவரது இறப்பால் இந்திக்கு எதிரான போராட்டம் கட்சிகளைக் கடந்து, தமிழ் மாணவர்களை, இளைஞர்களைப் போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *