– கை. செல்லத்தங்கம்
வாசலில் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அத்தை என்று கூப்பிட்டப்படி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் என் தம்பி மகள் பாவனா. என்னடியம்மா காலேஜில் இருந்து நேரே இங்கேயா வந்த…? ஆமா அத்தை இன்றைக்கு லாஸ்ட் அவர் ப்ரீ அதான் இங்கே வந்து அத்தானைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்தம் கேட்டு மகனும் மருமகளும் வெளியே வந்தனர். சிரித்தபடியே என் மருமகள் அத்தானை மட்டும் தான் பார்க்க வந்தியா என்றாள். என்னக்கா உங்களையும் குட்டிப் பையனையும் பார்க்க தான் வந்தேன். அன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ நான் வீட்டில் இல்லை. நாளைக்கு ஊருக்குப் போக போறதா அம்மா சொன்னாங்க அதான். ஏய் வாப்பா நான் சும்மா உன்னை சீண்டினேன் என்றாள். ஆமா குட்டிப் பையன் எங்கே என்றாள் என் தம்பி மகள். அவன் தூங்குறான்பா. நாங்க இரண்டு பேரும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு வெளியே போகலாம்னு கிளம்பினோம் என்றான் என் மகன். தூங்கும் என் பேரனை பார்த்து கொஞ்சி விட்டு நீங்க போயிட்டு வாங்க நான் கொஞ்சம் நேரம் அத்தை கிட்ட பேசிகிட்டு கிளம்புகிறேன் என்றாள். சரிப்பா என்றபடி வெளியே கிளம்பின என் மகனும் மருமகளும். மாமா எங்கே அத்தை என்றபடி சோபாவில் அமர்ந்தாள் பாவனா.
பாவனா என் ஒரே தம்பியின் செல்லப் பெண். அவளது அண்ணன் அருண். அருண் மிலிட்டரியிலே வேலை பார்க்கிறான். இவள் கல்லூரியில் படிக்கிறாள். என் தம்பி அரசு அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளான். என் மகளுக்கு திருமணம் ஆவதற்கு முன்னால் விடுமுறை என்றாலே என் தம்பி பிள்ளைகள் எங்கள் வீட்டில் தான். அத்தை அத்தை என்று என்னையே சுற்றி வருவார்கள். என் பிள்ளைகளிடடும் நல்ல ஒட்டுதல். என் தம்பி பொண்டாட்டிக்கு கூட அவள் வழி உறவோடு ஒட்டாமல் இந்த பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற ஆற்றாமை கூட உண்டு. M.Sc இரண்டாம் ஆண்டு படிக்கும் பாவனா.
அம்மாகிட்ட சொன்னியாம்மா தேடுவாளே என்றேன். சொல்லி விட்டேன் அத்தை என்றாள். காப்பி, பலகாரம் கொடுத்தேன். சுவைத்து குடித்தாள். அத்தை உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் என்றாள். என்னடியம்மா பெரிய பீடிகை போடுற என்றேன். அத்தை காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்றாள். என்ன திடீர் ஆராய்ச்சி.. காதலைப்பற்றி என்றேன். சும்மா சொல்லுங்க அத்தை.. உங்கள் கருத்தை.. காதலொன்றும் தப்பில்லை உரிய வயதில் வரணும். அவங்க சார்ந்தவர்களுக்கு துன்பமும் பிரச்சினையும் இல்லாமல் இருக்கணும் என்றேன். அப்படின்னா… அது Planned love அத்தை என்றாள். என்ன வேணும்னாலும் சொல்லு. காதலிக்கிற பிள்ளைகள் பெத்தவங்ககளுக்கு நிறைய சங்கடங்களை கொடுக்கிறாங்க.. அப்படியில்லாமல் இருக்கணும் என்றேன். நம்ம குடும்பத்துல யாராவது காதலித்து கல்யாணம் பண்ணியிருக்காங்களா. இல்லம்மா என்றேன். நீங்க காதலிச்சிருக்கீங்களா? என்றாள். இதுக்கு நான் என்ன பதில் சொல்வது. மனசோட முடிஞ்ச காதலை யாராவது சொல்வார்களா… அப்படின்னா உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கு… அப்படித்தானே… அட போடி நீ வேற அதெல்லாமில்ல… ஆமா நீ ஏன் இதெல்லாம் கேட்கிற…எனக்கு ஒரு சந்தேகம் அத்தை அத உங்ககிட்ட கேட்கணும். எது கேட்கிறதா இருந்தாலும் நேடியாக கேளு. தலையை சுத்தி மூக்கைத் தொடாதே. அதிரடியாய் கேட்டாள் எங்கப்பா காதலிச்சிருக்காங்களா? அதை உங்கப்பன் கிட்ட கேளு என்கிட்ட கேட்கிறாய்! அப்பாக்கிட்டே கேட்க முடியாதில்லா அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன் என்றாள். அதெல்லாம் இப்ப உனக்கெதுக்கு இதுக்கு தான் காலேஜில இருந்து இங்கே வந்தியா என்றேன். சொல்லுங்கத்தை மேவாயை பிடித்து கெஞ்சினாள். அம்மா ஒரு நாள் ஜாடை மாடையாய் பெரியம்மா கிட்ட கோவிலில் வைத்து ஒருத்தங்களக் காட்டி ஏதோ சொன்னாங்க. என்னைக் கண்டதும் நிறுத்திக்கிட்டாங்க. நான் கேட்டதுக்கு அம்மா அப்பாவோட ஒட்டிய சொந்தம்ன்னு சொன்னாங்க. ஆனால் அவங்க கூட எல்லாம் நாம் உறவு வைக்கல்லியே. அத்தான், அக்கா கலியாணத்துக்கு கூட அவங்க வரல்ல. அதான் எனக்கு சந்தேகம் என்றாள். சொல்றேன் ஆனால் யாரிடமும் மூச்சு விடக்கூடாது. அது எங்களுக்கு சொந்தம் தான். உங்க அப்பாவும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்க. உங்க அப்பா வேலை கிடைக்காமல் தேர்வுகளுக்கு படிச்சிக்கிட்டிருந்த சமயம். அவங்க வீட்டிலே அவளை கட்டாயப்படுத்தி வேற கல்யாணம் பண்ணி கொடுத்திட்டாங்க. வெளியூரிலே இருக்கிறாள். தொடக்க காலத்திலே ஊருக்கு அதிகமாக வருகிறதில்லையாம். இப்போ காலங்கள் கடந்த பின் எப்பவாவது வருவாள் போல… அவளுக்கு இரண்டு பையங்ககின்னு கேள்விப்பட்டேன். ஆமா என் வாயைக் கிண்டி தெரிஞ்சிக்கிட்ட கில்லா போ… என்றேன். அப்பா லைப்ல ஏதோ இருக்குன்னு நினைச்சது சரியாப் போச்சு. எங்கம்மா தான் பாவம்… உங்கம்மாவும் எங்களுக்கு தூரத்து சொந்தம் தான். எல்லாம் தெரிஞ்சி தான் உங்கப்பாவுக்கு வேலை கிடைச்ச பிறகு உங்கள் தாத்தா கல்யாணம் பண்ணி வச்சா£. என் தம்பி மாதிரி ஒரு நல்ல மனுசனைப் பார்க்க முடியுமா… ஆமா அத்தை ஆனால் அவர் மனசிலும் ஒரு சோகம் புதைஞ்சிருக்குல்லா… ஆமாம்மா… இதே மாதிரி ஏதும் பிரச்சினையை என் தம்பிக்கு கொடுத்து விடாதேம்மா என்றேன். வாறேன் அத்தை என்று புறப்பட்டாள் என் தம்பி மகள்.
Leave a Reply