பேராசிரியர் முளங்குழி பா.லாசர்
உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார். ஆனால் நாட்டு நடப்புகளைக் கவனித்த அவர் உள்ளத்தில் தேசபக்தியெனும் சுதந்திரகண் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இந்தியா விடுதலை பெற வேண்டும். அதற்கு நானும் என் பங்கினைச் செய்ய வேண்டும் என்று எண்ணிய நீரா ஆர்யா காந்தியடிகளின் அகிம்சை முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் போராட்டம் அவரைக் கவர்ந்தது. நேதாஜியின் போராட்டத்தில் ஆர்வம் காட்டினார். யாருக்கும் தெரியாமல் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜாண்சிராணி படைப்பிரிவில் சேர்ந்து ரகசியமாகப் பணியாற்றி வந்தார்.
அன்புமகள் நீரா ஆர்யா, நேதாஜியின் ஜாண்சிராணி படைப்பிரிவில் ரகசியமாகப் பணியாற்றி வருவதை அறியாத சேத்சஜீமால் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். மகளின் விருப்பத்தைக் கேட்காமலேயே ஆங்கில அரசில்புலனாய்வு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். வெள்ளைக்கார அரசில் பணியாற்றிய கணவர் ஸ்ரீகாந்தை தேசபக்தி மிக்க நீரா ஆர்யாவுக்கு அறவே பிடிக்கவில்லை. அது ஒரு கட்டாய கல்யாணம். கண்டிப்பு மிகுந்த தந்தைக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலவில்லை.
திருமணமாகி கணவன் மனைவியாக ஆன பின்பும் இருமனங்களும் ஒரு மனமாக மாறவில்லை. திருமணமான உடனேயே இருவருக்கும் சின்னச்சின்ன சண்டைகளும், உரசல்களும், மனக்கசப்பும் ஏற்பட்டன. விருப்பமில்லாமலேயே வேண்டா வெறுப்புடன் வேறுவழியின்றி ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
புலனாய்வு அதிகாரி ஆன காரணத்தால் ஸ்ரீகாந்த் தன் மனைவி நீரா ஆர்யா, நேதாஜி படைபிரிவாம் ஜாண்சிராணி வீராங்கனை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். துருவித்துருவி கேள்விகள் கேட்டார். நீரா ஆர்யா ஒரு பதிலும் சொல்லவில்லை.
சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்திய போதும் நீரா ஆர்யாவிடமிருந்து ஒரு தகவலும் பெற இயலவில்லை. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஸ்ரீகாந்த் நீரா ஆர்யாவை துன்புறுத்தினார். தொந்தரவு செய்தார். அவமானப்படுத்தினார். சித்திரவதை செய்தார். நீரா ஆர்யா சண்டை போட்டாரே தவிர நேதாஜி பற்றி வாய் திறக்கவே இல்லை.
நாட்கள் நகர்ந்தன. ஆங்கிலேய அதிகாரிகள் பற்றிய ரகசிய செய்தியொன்று நீரா ஆர்யாவுக்கு கிடைத்தது. அளவற்ற நாட்டுப்பற்றின் காரணமாக செய்தியை நேதாஜியிடம் தெரிவிப்பதற்காக, கணவனுக்கு தெரியாமல் ரகசியமாக சென்றார்.
மனைவியின் செயல்களை அவருக்குத் தெரியாமல் ரகசியமாகக் கண்காணித்து வந்த ஸ்ரீகாந்த் அவரைப் பின் தொடர்ந்தார். கணவன் ரகசியமாக தன்னைக் கண்காணித்தபடி பின் தொடர்ந்து வருவதை அறியாத நீரா ஆர்யா விரைவாக நேதாஜியின் இருப்பிடத்தை அடைந்தார். ஸ்ரீகாந்தும் நேதாஜியின் இருப்பிடத்தில் அவரைக் கண்டார்.
நேதாஜியைக் கண்ட ஸ்ரீகாந்த் ஆவேசத்துடன் தான் அவரைக் கொல்ல எண்ணி துப்பாக்கியால் சுட்டார். களம்பல கண்ட மாவீரன் நேதாஜி சுதாகரித்து தப்பினார். குண்டு நேதாஜியின் டிரைவர் மேல் பாய்ந்தது. அவர் காயமடைந்தார்.
நீரா ஆர்யா தன் கணவர் ஸ்ரீகாந்த் தானறியாமல் ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்து, தான் உயிரை விட மேலாக மதித்த தலைவன் நேதாஜியை கொலை செய்ய துப்பாக்கியால் சுட்டதை கண்டார். உடல் முழுவதும் தேசபக்தி நிரம்பி வழிந்த அவரால் கணவனின் செயலை மன்னிக்க முடியவில்லை. ஆவேசமடைந்தார். ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
கணவனே கண்கண்ட தெய்வம் என்றெல்லாம் போற்றப்படும் தன் கணவன் ஸ்ரீகாந்த் தனக்குத் தெரியாமல் மறைந்து பின் தொடர்ந்து வந்து இந்தியாவின் ஈடு இணையற்ற தலைவன் நேதாஜியைக் கொலை செய்யும் எண்ணத்துடன் சுட்டதை அவரால் தாங்க இயலவில்லை. மன்னிக்க முடியவில்லை.
சிலிர்த்தெழும் சிங்கம் போல் சீறி எழுந்தார். ஒரு கூர்மையான கத்தியைக் கையில் ஏந்தினார். புலிபோல் ஸ்ரீகாந்த் மீது பாய்ந்தார். எதிர்பாராத ஸ்ரீகாந்த் நிலைகுலைந்தார். கணவன் என்று பாராமல் கத்தியால் அவன் மீது பல இடங்களில் குத்தினார். ஸ்ரீகாந்த் ரத்த வெள்ளத்தில் பிணமாக மண்ணில் சாய்ந்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நேதாஜி ஆச்சரியத்தோடு பார்த்தார். தன்னைச் சுட்ட கணவர் ஸ்ரீகாந்த்தை நீரா ஆர்யா வெறி கொண்ட வேங்கை போல குத்திக் கொன்றதை வியந்து நோக்கினார். இப்படியும் நாட்டுப்பற்று மிக்க ஓர் வீரப்பெண்மணியா என்று நீரா ஆர்யாவை வியந்து போற்றினார். பாராட்டினார்.
வெள்ளை போலீசார் நீரா ஆர்யாவைக் கைது செய்து சிறையிலடைத்தனர். நேதாஜியின் இருப்பிடத்தை அறிய பல வழிகளில் முயன்றனர். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினர். சித்திரவதைகளைத் தொடர்ச்சியாக செய்தனர். நீரா ஆர்யா நேதாஜியின் இருப்பிடத்தைக் கடைசி வரைக் காட்டிக் கொடுக்கவே இல்லை. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் நீரா ஆர்யா விடுதலை செய்யப்பட்டார்.
உறவினர் தொடர்பு இல்லை. நேதாஜி படையில் பணியாற்றிய காரணத்தால் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. சொந்த வீடு இல்லை. வாழ வழியில்லை. செல்வச் சிறப்பு மிக்க குடுத்பத்திலே வசதியாய் வாழ்ந்த நீரா ஆர்யா ஐதரபாத் தெருக்களிலே பூ விற்றுப் பிழைத்தார். சிறிய ஓலைக் குடிசையிலே வாழ்ந்தார். 1998- ஆம் ஆண்டு ஜீலை 26- ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இந்தியாவில் யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் பெயர் இந்திய நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரிசையில் வரலாற்றில் எழுதப்படவில்லை.
தற்போது ரூபா ஐயர், நீரா ஆர்யா வாழ்க்கை வரலாற்றை ஒரு இந்தி திரைப்படமாக தயாரித்து நடித்து இயக்கி வருகிறார். தேசபக்தியால் தாலிகட்டிய கணவனையே தன் கையால் கொன்ற மாபெரும் வீரமங்கை நீரா ஆர்யா புகழ் வாழ்க.
Leave a Reply