விஜயபாரதி
“இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” என்று பதில் உரைத்தவள், மீண்டும் சொன்னாள் “அடுப்ப சிம்ல வச்சுட்டு ரெண்டு கொடத்த தூக்கிட்டு ஓடியாந்தேன் தண்ணி நின்னுடும்ல்ல அதான்” என்றாள் கல்யாணி.”ரெண்டு கொடம் பத்தாதா?” என்றாள் போதும்.
“அது எனக்கு புடிச்சிட்டு போனேன், இது என் மாமியாவுக்கு புடிச்சு வக்கிறேன், அது எங்க ஆட்டிட்டு வரப்போவுது, அதான் நானே புடிச்சு வக்கிறேன். கத பேசிட்டே தண்ணிய வீணாக்காத, கொடம் நிரம்பி வழியுது பாரு என்றார் உரிமையும் கோபமும் கலந்தபடி மருதையன். ஏன் காலையில ஆறு மணியிலருந்து வருதுல்ல புடிக்க வேண்டியது தானே என்றான் சின்னான். ம்ம்ம்ம்ம்,,,,, பொம்முனாட்டி கிட்ட தான் ஞாயம் பேசுவ நீ. எனக்கு என்னா வேலையா இல்லை? என்றாள் கவிதா. சிமெண்ட் கடையில வேலை செய்யற இளங்கோ ஒரு கொடத்த புடிச்சு எக்ஸ் எல் (XL) வண்டியில முன்னாடி இருக்கிற எடத்துல தண்ணி கொடத்த வச்சு ஆடாம சரி பண்ணிட்டு நின்னுகிட்டே இருக்கான் வழிய மறச்சாப்ல. எதிர்ல, நம்பர் பிளேட்ல அம்பேத்கர் படம் ஒட்டிய ஸ்ப்ளெண்டர்ல முன்னாடி ஒரு கொடத்தையும் பின்னாடி சீட்ல ரெண்டு பக்கத்துலயும் ரெண்டு கொடத்தையும் நைலான் கயிறு போட்டு கட்டி தராசு தட்டு போல சமமா தொங்கவிட்டுட்டு ஆக்சிலேட்டர உறுமி எதிர்ல வழிய மறச்சாப்ல நின்னவன தலையால சைகை காட்டி நகரச் சொல்லி புறப்பட்டார் முத்து.
அன்றைக்கு ஞாயிறு என்பதால் ஆண்களும் பெண்களும் ஒரே கூட்டமாக நின்று தண்ணீர் பிடிக்கிறார்கள் கூட்டமா இருக்கு. சுற்றி இருக்கிற இருபது தெருக்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் 650 -க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கும் முருகன் கோயில் வாசலில் இருக்கும் நீர்மூழ்கி மோட்டாரில் இருந்து வரும் தண்ணீர் தான் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை தினமும் தண்ணீர் வரும் குடி தண்ணீர் பஞ்சம் இல்லாமல் எல்லோருக்கும் தாகம் தீர்த்துட்டு இருக்கு.
ஊருக்கே தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்த கோயில் தர்மகர்த்தாக்கள் ஒன்று கூடி என்ன செய்வதென்று திட்டமிட்டார்கள். ஆளுக்கு ஒரு யோசனை சொல்லி, முடிவில் வீட்டுக்கு வீடு வரி வசூல் செய்வதென்றும், தனியே ஒரு நீர்மிழ்கி மோட்டார் இறக்குவதென்றும் முடிவு எடுத்தார்கள். பணம் போதவில்லை என்றால், கோயில் பராமரிப்புக்கு என்று சேர்த்திருக்கும் தொகையை செலவு செய்து மோட்டார் இறக்கவும் திட்டமிட்டனர். அப்படி உருவான போர் தண்ணீரை தான் ஊரே கூடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் தான், வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு புதிதாக குடிவந்த பாரதியும், கீதாவும் மூன்று குடங்களையும் கையில் பிடித்து அமைதியாக நின்று கொண்டிருக்கிறார்கள். கீதாவும் பாரதியும் அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். பாரதிக்கும் கீதாவுக்கும் ஊர் மக்கள், இடம், தண்ணீர் பிடிக்க குடத்துடன் நிற்பது என எல்லாமே புதிதுதான். பணி காரணமாக வெளியூருக்கு சென்று வாடகை வீடுகளில் தங்கி வாழ்வது, பாரதிக்கு பல அனுபவங்களை தந்து இருந்தது. இருந்தும் இப்படி ஒரு சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை. கஷ்டப்பட்டதும் இல்லை. இந்த ஊருக்கு வந்து பதினோரு மாதங்கள் ஆகின்றன. இந்த பதினோரு மாதங்களில், இது மூன்றாவது வீடு வாடகைக்கு மாறியிருக்கிறார்கள். மூன்றாவது மாடியில் வீடு. அங்கு எல்லா வசதிகளும் இருந்தன. வீடு கொஞ்சம் சிறியது. மாடி நடை பயிற்சி மேற்கொள்ளும் அளவிற்கு பெரியது. மாடியின் ஓரம் ஒரு டாய்லெட் பாத்ரூம் இருந்தது. வீடு, டாய்லெட், பாத்ரூம் என எல்லாமே அழகாக இருந்தது. குழந்தைகள் மனைவி என எல்லாருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. இரவு நேரத்தில் சாப்பாட்டை மாடியில் வைத்துக்கொண்டு நிலாச்சோறு சாப்பிடுவது. காற்றில் நிலா வெளிச்சத்தில் அமர்ந்திருப்பது, சாலையில் செல்லும் வாகனங்கள், மரங்கள், தோட்டங்கள் என எல்லாமே மாடியிலிருந்து பார்க்க அழகா இருந்தன. எல்லாமே பிடித்திருந்தாலும் ஒரே ஒரு குறை இருந்தது. மாடியில் சுற்றுச்சுவர் உயரம் சிறியதாக இருந்தன. குழந்தைகள் விளையாடும் போது தவறினால் அவ்வளவுதான் உயிருக்கு சேதாரம் ஆகிவிடும்.
குழந்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி புரிய வைத்து பழக்கி விடலாம் என நினைத்து தான் அவ்வீட்டிற்கு குடி வந்தனர். குழந்தைகள் துறுதுறுவென்று விளையாடுவார்கள். விளையாடும் போது பொருட்கள் கீழே தவறி விழுந்தால், மாடியில் இருந்து எட்டி பார்ப்பார்கள்.
அதற்கு பயந்துதான் இரண்டே மாதங்களில் வீட்டிற்கு நேர் எதிர் தெருவில் தரைதளத்தில் இருந்த வீடு காலியாகவே, தற்போது இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து விடலாம் என யோசித்தார்கள். தனி வீடு, குறைந்த வாடகை வீட்டு ஓணர் அருகில் இல்லை. அடுத்த தெருவில் தான் இருக்கிறார். பாரதி பேச்சுலராக இருக்கும் போதிருந்தே வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது வழக்கம். அப்படி தங்கும்போது வீட்டு ஓணர் வீட்டிலேயே இருப்பது போல் பார்த்துக் கொள்வான். தண்ணீர், மின்சாரம் மற்ற ஏதாவது என்றால் உடனே கேட்கலாம், சரி செய்தும் தருவார்கள். மேலும் பள்ளிக்கு செல்கிற நாட்களில் கடிதம் வந்தால் கூட வாங்கி வைப்பார்கள் என்பன போன்ற பாதுகாப்பு கருதியே அப்படி இருந்திருக்கிறான். ஆனால் இந்த வீட்டில் அப்படி இல்லை. அடுத்த தெருவில் தானே இருக்கிறார்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தான்.
அட்வான்ஸ் தொகையை பாரதி கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு விதிமுறைகளை வீட்டு ஓணரே கூறினார். “இந்தாப்பா இங்க இருக்குற நாலு வீடுகளுமே என்னோடது தான். அதுல தங்கி இருக்கவங்க எல்லாமே வெளியூர்க்காரங்கதான். எல்லார் வீட்டிலும் குழந்தைங்க இருக்காங்க. நாளக்கி கொழந்தைங்கக்குள்ள சண்டை அது, இதுன்னு அப்பறம் எங்கிட்ட எதுவும் குறை சொல்லக்கூடாது பாத்துக்கோங்க. அவங்க அவங்க பாதுகாப்பாக இருந்துக்கணும்” என்று கராராகவும் அதட்டலாகவும் கூறினார். ஒரு நாள் குடிதண்ணி போடுவேன் நிரப்பிக்கோங்க. அடுத்த நாள் குளிக்க தண்ணீர் வரும் டேங்க்ல நெரப்பிக்கோங்க” என்றார். அட்வான்ஸ் தொகையை வாங்கியதும் பேச்சின் தொணியில் நிறையவே மாற்றம் இருந்ததை உணரத் தொடங்கினான் பாரதி. பாரதியிடம் யார் பேசினாலும் எதற்காக பேசினாலும் பேசுபவர்கள் அதட்டலாகவும் தேவையில்லாமல் கோபமாகவும் பேசினால் கொஞ்சம் கூட பிடிக்காது. மேலும் பேச்சை தொடர மாட்டான் அல்லது பதிலுக்கு எதிர்த்து பேசி விடுவான். தன்மேல் தவறு இல்லாத போது கொஞ்சம் கூட பயப்பட மாட்டான். அப்படி ஒரு குணம் இருந்தாலும், முதல் தடவை என்பதால் பொறுமையாக கேட்டுக் கொண்டு நின்றான். பிறகும் அவரே தொடர்ந்தார் குடிக்க, குளிக்கறதுக்கு துணி தொவைக்கிறதுக்கு ரெண்டுக்கும் வேற வேற தண்ணிதான். குடிதண்ணிக்கு இந்த இருக்குல்ல ‘பைப்பு கனெக்சன்’ என்று வீட்டின் இடது புறம் இருந்த பைப்பை காட்டினார். இதுல வரும் இந்த டியூப சொருவி இங்க எல்லாரும் தண்ணி புடிப்பாங்க, நீங்களும் வீட்டுக்குத் தேவையான தண்ணிய பிடிச்சு வச்சுக்கோங்க” என்றவர். மேல மாடியில வாட்டர் டேங்க் இருக்குல்ல என்றார். ஆமா போய் பார்த்தேன் என்றான் பாரதி.”ம்ம்ம்ம்ம்,,,, பாத்தியாப்பா அது 750 லிட்டர் டேங்க் ப்பா மோட்டார் போடும் போது அதையும் நிரப்பி வச்சுக்கோ. டேங்க்ல தண்ணி நிரம்பி கொட்டாம பாத்துக்கப்பா. எனக்கு ஒன்னும் இல்ல, இந்த பக்கத்து வீட்டுல இருக்குற இந்த பொண்ணு எப்ப பாரு டேங்க்ல தண்ணி நிரம்பி கொட்றத கவனிக்காம இருக்கும் இந்த வால்வ நிறுத்தாம தண்ணி நெரம்பி கொட்டிட்டே இருக்கும். இதோ இந்த வால்வு இருக்கே அது எதிர் வீட்டுக்காரங்களோடது.
அந்தப் பக்கம் தண்ணி தேங்கி நிக்குதுன்னு அடிக்கடி சண்டைக்கு வருவாங்க. அதனால அதயும் கவனமா பார்த்துக்கோங்கப்பா.” என சொல்லி முடித்தார் வீட்டு ஓணர் வெங்கடேசன்.” ஓகே! அண்ணா அதெல்லாம் பாத்துக்கலாம். நம்ம யார்கிட்டயும் வம்புக்கும் போறதில்ல என்றான் பாரதி. “இருக்கட்டும்ப்பா, இருந்தாலும் நான் ஒரு வார்த்த சொல்லிடுறேன்” என்றார். “மோட்டார் ஸ்விட்ச் எங்கண்ணா இருக்கு?” என்றான் பாரதி.”இங்க இருக்கிற எல்லா வீட்டுக்கும் ஒரே கணெக்சன்தான். ஸ்விட்ச் எங்க வீட்டுல இருக்கு. தண்ணி இல்லன்னு எப்போ போன் பண்ணி சொன்னாலும் உடனே போட்டு விடுறேன் தாராளமா புடிச்சு நிரப்பிடுங்க. ஒரு நாளைக்கு குடித்தண்ணீர் போடுவேன். அடுத்த நாள் குளிக்கிற தண்ணீர் போட்டு விடுவேன். பாத்துக்க, இந்தா வீட்டு சாவி” என்றார். அப்புறம் சாவியை கொடுக்காமல் கையில வச்சுக்கிட்டு “மாசம் அஞ்சு தேதிக் குள்ள வாடகை வந்துடணும், எனக்கு நெறய வேல இருக்கு. என்று சொல்லி முடித்துவிட்டு சாவியை கொடுத்தார்”.
வீட்டில் வந்து குடியிருக்க ஆரம்பிச்சதிலிருந்து தண்ணீர் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனைதான் குடிக்க, குளிக்க என எப்பவும் தண்ணீர் தீர்ந்து போச்சுன்னு போன் பண்ணி சொன்னால் தான் மோட்டார் போட்டு விடுவார். அவர் சொன்னது போல ஒரு நாள் குளிக்க தண்ணீர் ஒரு நாள் குடிதண்ணின்னு மோட்டார் போட்டதில்ல. பக்கத்து வீடுகளில் கேட்டால் யாரும் வாய் திறப்பது இல்லை. ஓணர்கிட்ட போன் பண்ணி சொல்லுங்க உடனே மோட்டார் போடுவார் என்று சொன்னார்கள். பாரதியும் அடிக்கடி போன் செய்து சொல்வதற்கு சங்கடமாக இருக்கு. ஆனால் வேறு வழி இல்லை. சொல்லி தானே ஆகணும். எப்படி பார்த்தாலும் தினமும் காலையில போன் பண்ணி சொல்றது போல ஆகிடுச்சு. இப்படியே தினம் தினம் போன் பண்றது வீட்டு ஓணருக்கும் எரிச்சல் ஆயிடுச்சு. “என்னப்பா நீ தினமும் மோட்டார் போட சொல்ற நீ கொடுக்கிற 3500 ரூபாய் வாடகை காசுக்கு என்ன தொல்ல பண்ற, டெய்லி மனுஷன தூங்க விட மாட்டேன்ற, உனக்கு ஒன்னும் தனியா மோட்டார் போட முடியாது? எல்லாருக்கும் போடும்போது புடிச்சு வச்சுக்கோன்னு கத்திட்டார்”.
சுர்ருன்னு கோபம் மண்டைக்கேற பாரதி கொஞ்சம் நிதானிச்சு “குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும், நான் குளிக்கணும், எல்லாருமே ரெடி ஆகணும், சமைக்கணும் எதுக்குமே தண்ணி இல்ல. அப்படிங்கிறத மனசுல வச்சிக்கிட்டு, சரிங்கண்ணே எல்லாருக்கும் தண்ணி எப்ப போடுவீங்கன்னு கேட்டான்?. “இன்னும் அரை மணி நேரத்துல போடுவேன் என்றார்” காலை ஏழு எப்போ ஆகி தண்ணி வந்து சமைச்சு புள்ளைகளை ரெடி பண்ணிட்டு நாம ரெடியாகி ஸ்கூல் போறது என நினைத்துக் கொண்டான். பள்ளி அலுவலக உதவியாளருக்கு போன் செய்து, அரை மணி நேரம் பர்மிஷன் சொல்லிட்டு அமர்ந்தான். அன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டிற்கு வராமல், நேரா வீட்டு ஓணர் வீட்டுக்கு சென்றான். அழைப்பு மணி அடிக்க. வீட்டு ஓணர் மனைவி வீட்டை விட்டு வெளியே வந்து,”என்னப்பா” யார் நீங்க? என்றார்.” வணக்கம், அம்மா புதுசா வாடகைக்கு வந்திருக்கோமே” என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்துகொண்டு “சொல்லுப்பா” என்றார். அண்ணன் இல்லையாம்மா” இல்லப்பா கொஞ்சம் வேலயா வெளியே போயிருக்கார், வர லேட்டாகும். என்னன்னு சொல்லுங்கப்பா என்றார், பாரதி தொடங்கினான்.
அம்மா நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருக்க பள்ளிக்கூடத்துல வாத்தியாராய் வேலை பாக்குறோம். பிள்ளைங்க ரெண்டு பேரும் அங்கதான் படிக்கிறாங்க. காலைல 8:20க்கு பள்ளிக்கூடம் போனா, மாலை 5:30 ஆகுது வீட்டுக்கு வரதுக்கு. இதுல புள்ளைங்க ஒன்னுக்கு ரெண்டுக்கு போகணுன்னா ஸ்கூல்லயே முடிச்சுக்கிறாங்க. வீட்டுக்கு வந்தா எப்பவாச்சும் போறாங்க. நாங்க தண்ணிய வேஸ்ட் பண்றது இல்ல. மோட்டார் ஸ்விட்ச் உங்ககிட்ட தான் இருக்கு. தண்ணி வேணும்னா உங்களுக்கு தான் போன் பண்ண வேண்டி இருக்கு. அட்வான்ஸ் வாங்கும்போது ஒரு நாள் குடி தண்ணீர் வரும் ஒரு நாள் குளிக்கிற தண்ணீர் வரும்ன்னு சொன்னார். அவர் சொன்னது போல ஒரு நாள் கூட தண்ணி வரலையே. நீங்களா சொன்னது போல காலையிலேயே மோட்டார் போட்டுவிட்டா, நான் ஏன் போன் பண்ண போறேன்? என்கிட்ட கோவமாக பேசுறாரு. ஏன் அப்படி பேசணும்? என்று கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைதியாக கேட்டான் பாரதி. “இல்லப்பா காலையில தோட்டத்து வேலைக்கு வர்ர பையன் அவர ஏதோ கோபப்படுத்திட்டான். அந்த நேரத்துல நீங்க போன் பன்னினதும் அந்த கோவத்துல உங்ககிட்ட எதுவும் பேசிருப்பார் போல.அத ஒன்னும் மனசுல வச்சுக்காதப்பா” என்று தன்மையாக கூறினார், வீட்டு ஓணரின் மனைவி. அந்த அம்மா சமாளித்து பேசுவது நன்றாக புரிந்தது. சரிம்மா, நான் மார்ச்சு மாசம் வரைக்கும் வீட்டில் குடியிருப்பேன். அதுவரைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பைக்கை எடுத்துட்டு வீடு வந்தான். அன்றிலிருந்து 15 நாள் வரைக்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வந்து கொண்டிருந்தது.
“வர வர நாத்தனார் கழுத போல ஆனார்” ங்கற கதயா, மீண்டும் பழைய மாதிரி தண்ணீர் சிக்கலானது. யோசிச்சு,யோசிச்சு பொறுமையை இழந்த பாரதி வீட்டு ஓணருக்கு போன் பண்ணினான்.”ஹலோ சொல்லுப்பா” என்றார் வீட்டு ஓனர் வெங்கடேசன்.”அண்ணே குடிதண்ணீர் காலி ஆயிடுச்சு கொஞ்சம் போட்டு விட முடியுமா?” என்றான் பாரதி.”ஏம்பா ஆளாளுக்கு தண்ணி போடு, தண்ணி போடுன்னா என்னப்பா செய்யறது. ரெண்டு கொடம் புடிக்கல்லாம் மோட்டார் போட முடியுமா? என்ன உன் தொல்லை தாங்க முடியல. மூன்றாவது தெருவில இருக்குற முருகன் கோயில்ல டெய்லி காலையில தண்ணி வரும் ஊரே அங்கதான் புடிக்கிறாங்க, நீயும் போய் ரெண்டு கொடம் புடிச்சுக்கப்பா. என்றார் வெங்கடேசன். பாரதிக்கு கோபம் உச்சத்துக்கு ஏற “என்னது ரெண்டு கொடமா? ஒனக்கு ரெண்டு கொடம் தண்ணியா தெரியுது, ஆனா, அத குடிச்சிட்டு நாலு உயிர் வாழ்கிறோம். எங்களுக்கு உயிரை காக்குற உயிர் நீர். எங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தான். வாழ்ற வீட்டுக்கு குடிக்க தண்ணி விட மாட்டேங்குற, உன்கிட்டல்லாம் பேசி எந்த பயனும் இல்ல. வாதம் பண்ணியும் பிரயோஜனம் இல்ல. மனுச ஜென்மமா இருந்தா புரியும். புரியாத மடையன் கிட்ட விவாதம் பண்றத விட அமைதியாக இருக்கிறது நல்லது.
முருகன் கோயில்ல தண்ணீர் வருதுன்னு எனக்கும் தெரியும். அத போய் பிடிச்சுக்கிறதுக்கும் எனக்கு தெரியும். அத நீ சொல்ல வேணாம். இந்த ஊர்ல குடிதண்ணீர் புடிக்க நான் வரி கட்டல. உங்களுக்கு கொடுக்கிற வாடகைல தான் தண்ணி காசு தண்ணி காசுன்னு மாசம் மாசம் வாங்கி கொட்டிக்கிற. அந்த காசை அவிச்சி குடும்பத்தோட ஒக்காந்து தின்னு. அப்புறம் அட்வான்ஸ் வாங்கும்போது சொல்லிருந்தா நான் ஏன் இந்த வீட்டுக்கு வரப்போறேன்? என்று பொரிந்து தள்ளி விட்டான் பாரதி. வீட்டு ஓணர் பதில் எதுவும் பேசாம வாயடைச்சு அமைதியா இருந்தார். வாடகை வீட்டுக்குன்னு அரசாங்கம் சொல்லிருக்கிற ரூல்ஸ்ல்லாம் எனக்கும் தெரியும் நான் கோர்ட்டுக்கு போனேன்னா அவ்ளோதான்னு சொல்லிட்டு போன் கட் பண்ணிட்டான்.
வீட்டு ஓணர் என்ன நெனச்சாரோ தெரியல, அன்றிலிருந்து தினமும் மோட்டார் போட்டு விடுகிறார்.
எல்லாரும் தண்ணீர் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் அந்த தண்ணீரை பிடிப்பதில்லை.
மனைவி கீதாவை கூட்டிட்டு ரெண்டு கொடத்தை எடுத்துட்டு மூணு தெரு தள்ளி இருக்கிற முருகன் கோவிலுக்கு கிளம்பினான் பாரதி. போகுற வழி நெடுக வீட்டு ஓணரை வாய்விட்டு திட்டிக்கொண்டே சென்றான். கொஞ்சம் கூச்சமா தான் இருந்துச்சு, கொஞ்சம் அல்ல நிறையவே இருந்துச்சு. பாரதி வெட்கப்படுவதை பார்த்தும், அவன் தயக்கத்தையும் கவனித்த கீதா” நாம என்ன குடிக்கறதுக்கு தண்ணிதானே புடிக்க போறோம். டாஸ்மாக்குக்கு போறவன் எல்லாம் வெக்கப்படாம போறான். எதுக்கு வெட்கப்படணும்? அப்படின்னு கேட்டா? அதுவும் சரியாதான் பட்டுச்சு. குழாய் அடியில் நிற்கிற யாவருக்கும் பாரதியும் கீதாவும் புதிதாக தெரிந்தனர். இவர்களை யாருமே பார்த்து இருக்கவும் வாய்ப்பு ரொம்ப குறைவு. அப்படியே பார்த்திருந்தாலும் பேசியிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இருவரும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருப்பதையும் பார்த்தபடி, தண்ணீர் பிடித்த வண்ணம் இருக்கின்றனர். முகம் தெரியாத ஊருக்குள்ள இத்தனை மாசமா ஆசிரியராக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தவர்கள். இன்று தண்ணீர் பிடிப்பதற்கு வந்திருக்கிறார்கள். தண்ணீர் பிடிப்பது ஒன்றும் கௌரவ குறைவான செயல் இல்லை. இருந்தாலும் வீட்டு ஓணர் பேசியதையே நினைத்து, மனித தன்மையற்ற மிருகத்தை நினைத்து, நின்று கொண்டிருக்க “சார் தண்ணி புடிக்க வந்தீங்களா? என்ற குரல் கேட்க, சுயநிலைக்கு வந்தான் பாரதி. ”ஆமாம்மா” என்றான் “சார் மேடம் கொடத்த குடுங்க”என்று பதிலுக்கு எதிர்ப்பாராமல் கொடத்தை வாங்கிய நித்திஸ்ரீ தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த அவங்க அம்மாவிடம் கொடுத்து பிடிக்கச் சொன்னாள்.”இருடி நம்ம கொடம் நெரம்பறதுக்குள்ள கொண்டு வந்து நீட்ற, யார் டீ அவுங்க” என்றாள் அம்மா. அம்மாவின் கேள்விக்கு “அம்மா இவங்க தான் ஈவினிங்ல ஃப்ரீயா டியூஷன் சொல்லி தராங்களே, நாங்கல்லாம் அவங்க வீட்ல போய் படிச்சிட்டு வருவமே அந்த சாரும் மேடமும் இவங்கதான் “என்று பதில் சொன்னாள் நித்திஸ்ரீ. அம்மாவின் கனிந்த பார்வையில் நன்றி பெருக நிரம்பி வழிந்தது குடம்.
Leave a Reply