நூல்கள் அறிவுத்தூண்கள்!

  • By Magazine
  • |

கே.பி.பத்மநாபன்

கம்பனது காவியம் தான் காசினியில் மாந்தக்

                கற்பனையின் கோட்டைக்குத் தூணாகிடும் காண்

அம்பலத்தில் கற்புத்தீ ஆர்த்தெழுந்த காதை

                அளித்திட்ட இளங்கோவின் சிலம்பும் நற்றூண்தான்

நம்பலமாம் நன்னெறியின் வாழ்வியலை ஈந்த

                நன்மறையாம் வள்ளுவரின் வள்ளுவமும் தூண்தான்

உம்பரும்தாம் போற்றுமுயர் துறவுரைத்த நூலாம்

                உயர்வுமணி மேகலையோ ஞானமிகு தூண்தான்!

அம்புவியில் மழலையென அவதரித்த நாளாய்

                அறிவூட்டும் நூல்களெலாம் அறந்தாங்கும் தூண்கள்

செம்புலப்பெய் நீரெனவே சேர்த்தே நாம் அணைத்தால்

                சிந்தனையின் கோட்டையெலாம் செழித்தோங்கி நிற்கும்

எம்மொழியிலானாலும் இலக்கியங்களெல்லாம்

                எழுத்தறிவு கோட்டைக்கே ஏற்றதூண்களாகும்

செம்மொழியாம் தமிழ்மொழியின் நூல்களெலாம் வாழ்வை

                செம்மையெனத் தாங்குகிற இரும்புத்தூண்கள் தாம்!

கம்பியினால் கட்டிட்டக் கற்றூண்போ லிங்கே

                கற்றமொழி தனில்காணும் புத்தகங்கள் எல்லாம்

தம்பியுன்றான் அறிவென்னும் கூரையினைத் தாங்கும்

                தங்கத்தூண் என்றுணர்ந்தே தமிழ்நூல்கள் கற்பாய்

கும்பியதன் பசிமறந்த பாரதியின் நூல்கள்

                குவலயத்தின் உச்சியிலே உனையமர்த்தும் பெரும்தூண்

எம்பியந்த ஞானமெனும் வானுயர்வை எட்ட                

எஞ்ஞான்றும் நற்றமிழ் நூல் தூண்வழிமேலேறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *