குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் கலை அறிவைப் பகிர்ந்து கொள்கிறார்.
கேள்வி: ஆசான் அவர்களே, கல்விப்புலத்தில் இவ்வளவு பட்டங்களைப் பெற்ற உங்களுக்கு, இந்த வர்ம மற்றும் தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பதில்: எனது குடும்பமே ஒரு வைத்தியப் பரம்பரை. எனது முன்னோர்கள் அடிமுறை, வர்மம், வைத்தியம் போன்றவற்றில் மகா விற்பன்னர்களாக இருந்தவர்கள். அந்தப் பாரம்பரிய இரத்தமோ என்னவோ, எனக்குத் தானாகவே இக்கலைகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சிறு வயதிலேயே நான் கற்கத் தொடங்கிய இந்தப் பயணம் இன்று வரை தொடர்கிறது.
கேள்வி: நீங்கள் யாரிடமெல்லாம் இக்கலைகளைக் கற்றீர்கள்? உங்களது குருமார்களைப் பற்றிக் கொஞ்சம் கூறுங்களேன்…
பதில்: நான் பல மகான்களிடம் சீடனாக இருந்திருக்கிறேன். முதலில் நம்பாளி பகுதியைச் சேர்ந்த எனது உறவினர் யாக்கோபு வைத்தியரிடம் தொடங்கினேன். அதன் பிறகு, எனது தாய் மாமா ஐரேனிபுரம் பாலையா ஆசான் வர்ம அடிமுறை மற்றும் வைத்தியத்தைக் கற்றுத் தந்தார். தொடர்ந்து வேங்கோடு மனுவேல் வைத்தியர், படுவூர் ஆசிர்வாதம் வைத்தியர், திக்கணங்கோடு கோலப்பன் ஆசான் ஆகியோரிடம் வைத்திய முறைகளைக் கற்றேன். நெய்யாற்றின்கரை செல்லப்பா வைத்தியரிடம் அபூர்வமான ‘நீற்று மருந்து’ முறைகளை அறிந்தேன். இப்படி பல ஆசான்களின் வழிகாட்டுதலே என்னை உருவாக்கியது.
கேள்வி: உங்கள் குருவான பாலையா ஆசான் அவர்களின் சிறப்பு என்ன?
பதில்: அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள புகழ்பெற்ற ‘நாலுகெட்டு ஆசான்மார்’ என்ற குருகுல வழிவந்தவர்களிடம் பயின்றவர். மேலும் பூவார் மரியமிக்கேல் ஆசான் மற்றும் வெங்கானூர் ஆசானிடமும் கலைகளை நுட்பமாகக் கற்றவர். அவர் மூலமாகத்தான் பல உயரிய நுட்பங்கள் எனக்குக் கிடைத்தன.
கேள்வி: நீங்கள் பல முறைகளைக் கற்றுள்ளீர்கள். குறிப்பாக ‘நடசாரி’ முறை பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே, அதன் சிறப்பு என்ன?
பதில்: உண்மைதான். வர்மானி, குஸ்தி, அடிமுறை எனப் பல கற்றாலும், நாங்கள் பிரதானமாகத் தேர்ந்தெடுத்தது ‘நடசாரி’ முறையைத்தான். இதில் நேரான சுவடுகளும், வட்டச் சுவடுகளும் உண்டு. சாதாரண களரி முறைகளில் இல்லாத பல நுணுக்கமான சண்டை முறைகள் இதில் அடக்கம். குறிப்பாக இதில் உள்ள ‘ஏறி அமத்து’ என்ற நுட்பம் மிகவும் எதிரிக்கு ஆபத்தானது. எதிரி நம்மைத் தாக்க வரும்போது, அந்தத் தாக்குதலையே தடுத்து அவரை அப்படியே நிலை”குலையச் செய்வதுதான் இதன் சிறப்பு. ஒரு வர்மானிக்கு (வர்மக் கலைஞர்) இதுதான் சிறந்த அடிமுறை.
கேள்வி: இன்றைய தற்காப்புக் கலைகளில் நீங்கள் காணும் குறைகள் என்ன?
பதில்: இன்று முறையாக ‘ஒற்றைச் சுவடு’ முறைகளைக் காண முடிவதில்லை. ‘அடிக்கு அடி 12’ என்ற அற்புதமான நுட்பம் உண்டு. அதாவது எதிரி ஒரு அடி அடித்தால், அதே வேகத்தில் நாமும் ஒரு அடி திருப்பித் தரும் வித்தை அது. இப்போதுள்ளவர்கள் இந்த ரகசியங்களைச் சரியாகச் சொல்லிக்கொடுக்க விரும்புவதில்லை. இதன் காரணமாகவே பல அரிய நுட்பங்கள் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து வருகின்றன.
கேள்வி: உங்கள் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசான்கள் பற்றி ஏதேனும் தகவல் உண்டா?
பதில்: சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாங்கரை ஆசான் என்பவர் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த பெரிய ஆசான்மார்களுக்கெல்லாம் குருவாகவும், முன்னோடியாகவும் விளங்கினார். அவரைப் போன்ற மாமேதைகள் வளர்த்த கலை இது.
கேள்வி: இப்போது நீங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறீர்களா?
பதில்: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தேன். இப்போது முதுமை காரணமாகவும், உடல் ஒத்துழைக்காததாலும் புதியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால், இந்த அருமையான கலை சிதைந்துவிடக் கூடாது என்பதே எனது ஆவல்.
ஆயுதப் பெருக்கம் முதல் ஒற்றைச் சுவடு வரை வர்மக்கலையின் ஆழம் கண்ட ஆசான் ராஜ்குமார் அவர்களின் அனுபவங்கள், வருங்காலத் தலைமுறைக்கு ஒரு பாடப்புத்தகம் என்பதில் ஐயமில்லை.
Leave a Reply