உதவும் உள்ளங்கள்

உதவும் உள்ளங்கள்

  • By Magazine
  • |

 திருமதி .செல்வி ஞானதாஸ்

“கடவுளே! என் பிள்ளைக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, என் கடமை முடிஞ்சிரும். அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. அவனுக்கு ஒரு துணை கிடைச்சா போதும்,” எனச் சொர்ணம்மாள் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார்.

அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சோமு சிரித்துக் கொண்டே வந்தான். “என்னம்மா… காலையிலேயே ஒரே வேண்டுதலா இருக்கு? இன்னைக்குப் பார்க்கப்போற பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவேன்னு பயமா?” என்றான்.

“ஆமாப்பா… அந்தப் பொண்ணு பாக்கியாவுக்குப் படிப்பு மட்டும் இருந்தா போதும்னு சொல்லிட்டேன். வரதட்சணை எல்லாம் எதுவும் பேசல” என்றார் அம்மா.

“அம்மா… பக்கத்து வீட்டுக்காரங்க நூறு பவுன் போட்டாங்கன்னு, எனக்கும் அதே மாதிரி எதிர்பார்ப்பது தப்பு. ஒரு பெண்ணை விலை பேசுறதுக்குச் சமம் அது. எனக்கு வரப்போற மனைவிக்கு நானே உழைச்சு நகை போட்டு அழகு பார்ப்பேன். அதுதான் எனக்குப் பெருமை,” என்றான் சோமு உறுதியாக. மகனின் நேர்மையைக் கண்டு சொர்ணம்மாளின் உள்ளம் குளிர்ந்தது.

சில மாதங்களில் சோமுவின் ஆசைப்படியே மாலாவுடன் திருமணம் நடந்தது. ஆனால், கனவு கண்டது போல அமைதி நீடிக்கவில்லை.

ஒரு நாள் காலை, “மக்களே மாலா… வாசலை கொஞ்சம் கூட்டித் தள்ளு. நான் சமையலைப் பார்க்கிறேன்,” என்றார் சொர்ணம்மாள்.

“என்னது… நான் வீடு பெருக்கணுமா? இதுக்கா நான் இவ்வளவு படிச்சேன்? எங்க அம்மா வீட்டுல என்னைக் ஒரு வேலை கூட செய்ய விட்டது இல்ல. என்னால இதெல்லாம் செய்ய முடியாது,” என மாலா கோபத்தில் கத்தினாள்.

வேலைக்குக் கிளம்பிய சோமு இதைக் கேட்டு அதிர்ந்தான். “மாலா… எங்க அம்மாவும் படிச்சவங்கதான். அவங்க செய்யாத வேலையா? குடும்பம்னா எல்லாம் சேர்ந்துதானே செய்யணும்?” என்றான். ஆனால் மாலா கேட்பதாக இல்லை. “போகப் போகச் சரியாகும்” என மகனைச் சமாதானப்படுத்தி அனுப்பினார் சொர்ணம்மாள்.

பத்தாண்டுகள் ஓடின. இரு குழந்தைகள் பிறந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். ஆனால் மாலாவின் சுபாவம் மாறவில்லை. அவள் அடிக்கடி தன் அம்மா வீட்டிற்குச் சென்று புலம்புவாள். “அம்மா… நான் சாப்பிட்ட தட்டைக் கழுவணும், காபி காய்ச்சணும்னு சொல்றாங்க. அதுமட்டுமா, உங்க பாசக்கார மாப்பிள்ளை வந்தவங்களுக்குப் போனவங்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறாரு. பக்கத்துல இருக்கிற காப்பகத்துக்கு வேற சாப்பாடு கொடுக்கப் போறாராம். இதுக்கெல்லாம் அந்தப் பழைய காலத்து மனுஷி சொர்ணம்தான் காரணம். அவங்க இருக்கிற வரை நான் நிம்மதியா இருக்க முடியாது,” என்றாள்.

மாலாவின் அம்மாவோ, “நீ கவலைப்படாத… அந்தப் பிள்ளைகள் இனி வளர்ந்தாச்சு. அந்தப் பாட்டியோட அவசியம் இனி இல்லை. அதனால் மாமியாரை எங்கையாவது விரட்டிவிடு. மாப்பிள்ளை கேட்டா ஏதாவது பொய் சொல்லிச் சமாளி,” எனத் தீ மூட்டினாள்.

வீட்டிற்கு வந்த மாலா, “எனக்கு உடம்பு முடியல, மருந்து வாங்கக் கூட்டிட்டுப் போ மாலா” எனக் கெஞ்சிய மாமியாரைப் பார்த்து எகிறினாள். “நீ இந்த வீட்ல இருந்தா நான் இருக்க மாட்டேன். என் பிள்ளைகளைக் கூட்டிட்டு நான் போயிருவேன். அப்புறம் உன் மகன் பித்துப்பிடிச்சு அலைய வேண்டியதுதான்,” என மிரட்டினாள்.

மகனின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்தில், சொர்ணம்மாள் சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். மாலாவோ சோமுவிடம், “உங்க அம்மா அவங்க அக்கா கூடப் போயிட்டாங்க. நம்ம எல்லாரையும் திட்டிட்டு, இனிமே எங்களை வந்து பார்க்காதீங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க,” எனப் பொய் கூறினாள். சோமுவும் அதை நம்பி வருத்தத்துடன் அமைதியானான்.

மூன்று ஆண்டுகள் உருண்டோடின. சோமு தனது சமூகச் சேவைகளுக்காக ஒரு விருதைப் பெற வங்கி மேலாளர் ஒருவரால் அழைக்கப்பட்டிருந்தான். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஒரு பெண்மணி கௌரவிக்கப்பட்டார். மேடையில் நின்ற அந்தப் பெண்மணியைப் பார்த்து சோமு அதிர்ச்சியில் உறைந்தான். அது அவன் தாய் சொர்ணம்மாள்!

அழுதுகொண்டே ஓடிச் சென்று தாயைக் கட்டியணைத்துக் கொண்டான். “அம்மா… இத்தனை நாளா எங்க இருந்தீங்க? பெரியம்மா வீட்டுக்குப் போகலையா?” எனக் கேட்டான்.

சொர்ணம்மாள் மென்மையாகப் பேசினார். “அன்றைக்கு உடம்பு முடியாம வீட்டை விட்டு வந்தப்போ, ஒரு மருத்துவமனையில சேர்ந்தேன். அங்க துப்புரவு வேலை பார்த்த ‘கமலா’ என்ற பெண்தான் என்னைக் கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிட்டா. அவங்க குடியிருந்த இடத்துல 60-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் இருந்தன. அங்க இருந்த குழந்தைகளுக்குக் கல்வியும், பெண்களுக்கு எனக்குத் தெரிஞ்ச கைத்தொழிலையும் சொல்லிக் கொடுத்தேன். இன்னைக்கு அவங்க எல்லாரும் சுயமாகச் சம்பாதிச்சு முன்னேறிட்டாங்க. அந்த மாற்றத்திற்காகத்தான் எனக்கு இந்த கௌரவம்,” என்றார்.

அருகில் நின்ற மாலா தலையைத் தொங்கப்போட்டு நின்றாள். “அத்தை… என்னைத் தப்பா நினைக்காதீங்க. உங்க அருமை தெரியாம நான் பொய் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிருங்க,” என அழுதுகொண்டே காலில் விழுந்தாள்.

தன் தாய் இத்தனை காலம் பட்ட கஷ்டத்தை உணர்ந்த சோமு, மாலாவைக் கோபமாகக் கண்டித்தான். “உன்னைப் போய் நம்புனேனே!” எனச் சீறினான்.

ஆனால் சொர்ணம்மாள் தடுத்தார். “விடுப்பா… நான் அங்க போனதுனாலதான் பல பேரோட கஷ்டம் எனக்குத் தெரிஞ்சது. நான் கத்துக்கிட்ட கலை மத்தவங்க வாழ்வுல ஒளியேற்றப் பயன்பட்டதுல எனக்குத் திருப்தி தான்,” என்றார்.

மாலா உண்மையான வருத்தத்துடன், “அத்தை, இனி நானும் பிள்ளைகளும் உங்க கூடவே இருந்து அந்த மக்களுக்குச் சேவை செய்வோம். எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க,” என்றாள். இறுதியில், கோபங்கள் மறைந்து ‘உதவும் உள்ளங்களாக’ அந்த முழு குடும்பமும் அந்த எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றுபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *