அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்

  • By Magazine
  • |

வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்

சென்ற மாத இதழின் தொடர்ச்சி…

பேரண்ட (பிரபஞ்சம்) தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்

பேரண்டத் தோற்றம் பற்றி சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை, தத்தம் கொள்கைகளுக்கேற்ப நம்பிக்கைக்குரியதாய் காணப்படுகின்றன.

1. கடவுள் எனும் ஓர் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவர் நேரடியாகவே பிரபஞ்சத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார்.

2. சூனியத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகியது.

3. இப்பிரபஞ்சம் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்களின் சேர்க்கையில் உருவானது என்பன சமயம் சார்ந்த நம்பிக்கையின் அடிப்படையாலான கருத்துக்களாகும். இதுபோன்றே பல்வேறு அறிவியல் கருத்துக்களும் நிலவுகின்றன.

5.1.1 அறிவியல் ஆய்வின்படி நிலைமாறா (Steady state cosmetology)

காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் அறிஞர்களான எச். போண்டிட்  (H. Bondit)  டி-கோல்டு (T-Gold)  எப். ஹாயில் (F. Hoyle) மூவரும் 1951-ஆம் ஆண்டு அண்டவியல் சார்ந்த புதியதோர் கொள்கை ஒன்றை வெளியிட்டனர். இதன்படி, அண்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை. காலத்தினைப் பொறுத்தும், வெளியினைப் பொறுத்தும் அண்டம் மாறுவதில்லை. இதன்படி, விலகிச் செல்லும் பால்வெளி மண்டலங்களால் குறைவுபடும் சராசரி திண்மையை ஈடுகட்டுவதற்காக அதே வேகத்தில் பொருள் தொடர்ந்து படைக்கப்படுகிறது என்ற கருதுகோள் தேவைப்படுகிறது. இவ்வாறு புதிதாகப் படைக்கப்படும் பொருள் குளிர்ந்து பால்வழி மண்டலங்களாகுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பது இதன் விளைவான கொள்கை. மரபுவழி அண்டவியற்படி, எல்லாப் பால்வழி மண்டலங்களும் ஒரே வயதினை உடையன என்றால், நிலைமாறா அண்டவியற்படி, பால்வழி மண்டலங்களின் தொகுப்பில் பல மில்லியன் ஆண்டுகள் வயது வேறுபாடுகளை உடைய பல்வேறுபட்ட வயதினைக் கொண்ட மண்டலங்கள் உள்ளன. நமது சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வழி, சாதாரண சராசரி பால்வழி மண்டலங்களின் வயதினைப் போன்று மும்மடங்கு வயதுடையது என்று கூறப்படுகிறது. ஆனால், அண்மையில் உள்ள பால்வழி மண்டலங்களைப் பற்றிக் கிடைத்துள்ள ஆய்வுப்புள்ளி விவரங்களைக் கொண்டு பார்க்கையில் மேற்கூறிய கருத்தினை உறுதிசெய்ய வழியில்லாமல் இருக்கிறது. நிலைமாறா அண்டவியல் கொள்கையினை ஏற்றுக்கொள்வோர் குறைந்து வருகின்றனர்.

பேரிடிக் கொள்கை (Big Bang Theory)

அண்டத்தின் பிறப்பு பற்றிய மற்றொரு கொள்கை பேரிடிக்கொள்கை ஆகும். இதன்படி, அண்டம் 10000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொருளாகவும், மிகச்சூடான ஆதி அணுவாகவும் (Atom) சிறிய வெளியில் குறுகி அடர்த்தியாக இருந்தது. இது வெடித்து வெளிநோக்கிப் பரவியது. இதன் பயனாக, பால்வழி மண்டலங்கள் தோன்றின. அவை இன்னும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் சென்றுகொண்டே இருப்பதால், அண்டம் விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.

ஆய்வுத்தடயங்களும், ஆய்வு முடிவுகளும் பேரிடிக்கொள்கையை வலுப்படுத்துமாறு அமைகின்றன. பேரிடிக்கொள்கையின் அடிப்படையில் அமைந்த மற்றுமொரு மாதிரியும் உள்ளது. இதன்படி, 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அண்டம் விரிவடைந்து கொண்டே சென்று ஒரு நிலையில் விரிவடைவதை நிறுத்தி சுருங்கத் தொடங்கும். இதன் இறுதிநிலையாக அது அணுவாகி வெடிக்கும். மறுபடியும் விரிவடையும். இவ்வாறு விரிந்தும் சுருங்கியும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

புதிய கருத்துகள்:

பல ஆய்வுகளினாலும், ஆராய்ச்சி முடிவுகளாலும் அண்டவியல் தத்துவங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. ஒளியின் வேகத்தினையும் மிஞ்சும் பெரும் குவாசர்கள் (Quasars) பல்சார்கள் (Pulsars) ஒளிகூட ஊடுருவாத அளவு ஈர்ப்பு சக்தியுடைய நலிந்த விண்மீன்களாகக் கருதப்படுகின்ற கருந்துளைகள் (Black holes) ஆகியன பற்றிய புதிய செய்திகள் பல கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. வேறு அண்டங்கள் இருப்பதாகவும், நமது அண்டம் ஒரு கருந்துளை என்றும் ஒரு கருத்து இருக்கிறது. அண்டவெளி முழுவதிலும் இயற்பியல் விதிகள் ஒரே மாதிரி இருக்கமுடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. (அறிவியல் களஞ்சியம் – முதல்தொகுதி – பக்.367, பி.எல்.சாமி)

1. இப்பிரபஞ்சம் தூசுகளைப் போன்ற நுண்பொருட்களின் சேர்க்கையால் உருவாகி செறிவுற்று அழுத்த மிகுதியினால் உண்டான பெருவெடிப்பிலிருந்து தோன்றியது.

2. அவ்வப்போது ஏற்பட்ட சிறு வெடிப்புகளால் தோன்றியது.

3. மாறாத நிலையான இயக்கத்தால் உண்டானது என்பவைகள் ஆகும்.

இவ்வாறு வெவ்வேறு கருத்துக்கள் சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் காணப்படினும், இவை இரண்டு முக்கிய ஆய்வுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று கடவுள் உலகத்தைப் படைத்தார் என்பது. மற்றொன்று, தானாகவே உலகம் தோன்றியது என்பது. தானாகவே ஒன்று தோன்றும் என்பது எளிதில் நம்பக்கூடிய ஒன்றாக தோன்றாவிடினும், அறிவியல் ஆய்வுகளின்படி, அதுவே சாத்தியம் என்பதே இன்றைய ஆய்வுகள் வரை உள்ள தெளிவாகும்.

                அறிவியலின் பேராய்வுகள் படி, பேரண்டம் என்பது எல்லையற்ற விரிவினைக் கொண்ட ஒரு கோளமாகும். கண்ணுக்குப் புலப்படாத மிக மிக நுண்ணிய அணுத்துகள்களையும் (Tiniest sub atomic particles), கோடிக்கணக்கான நட்சத்திர தொகுப்புகளையும் (Galactic super clusters) தன்னகத்தே கொண்டுள்ள – இப்பேரண்டத்தின் (Universe) அளவினையோ, விரிவினையோ இன்று வரை எவரும் துல்லியமாக கணக்கிட்டு அறிந்ததில்லை. ஆனால் இப்பேரண்டம் தன்னகத்தே  சராசரியாக சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்களையும், 125 பில்லியன் பால்வீதிகளையும் (125 Billion galaxies) கொண்டிருக்கலாம் என விண்வெளி அறிஞர்கள் (Astronomours)  கணக்கிட்டுள்ளனர். எனினும் இப்பேரண்டத் தோற்றம் பற்றி பல்வேறு அறிவியல் கருத்துக்கள் நிலவுகின்றன. சுமார் 10 முதல் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் நடந்த பெருவெடிப்பு (The Big Bang) எனும் ஒரு நிகழ்விலிருந்தே இச்சிற்றண்டத் தொகுப்புகளாகப் பிரிவடைந்து இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்பதே பெருவாரியான விண்ணியல் ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளப்படுகிற உண்மையாகும்.

                இப்பேரண்டம் வெடித்து சிதறிய நொடிப்பொழுதில் அது மிகுந்த வெப்பமாகவும், சிறு சிறு துண்டுகளாக வீசி எறியப்பட்ட எரிபந்துகளைப் போலவும் விரிந்துகொண்டே (Expanding) சென்றது. பின்னர், படிப்படியாக குளிர்ச்சியடைந்து எரிந்து கொண்டே இருந்த வாயுநிலையிலிருந்து மாற்றம் அடைந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த மாற்றங்கள் சுமார் பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு செறிவுநிலை மிஞ்சிய முதன்நிலை தொகுப்புகளாக (Photo galaxies) மாறியுள்ளன. தொடர்ந்து செறிவடைந்து கொண்டே வந்த தொகுப்புகளிலிருந்து சுமார் ஐந்து பில்லியன் (ஐந்து இலட்சம் கோடி) ஆண்டுகளுக்குப்பின் நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன. கோடிக்கணக்கான ஆண்டுகளாகவே விரிவடையத் தொடங்கிய இந்த பிரபஞ்சம் இன்றும் விரிவடைந்துகொண்டே செல்வதாக விண்ணியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.                 வான்வெளியில் எரிந்து குளிர்ச்சியடைந்த எரிபந்துகள் போன்ற அமைப்பு கோள்களாக மாறின என்பதே அவர்தம் கருதுகோளாகும். இதுபோன்று எரிந்து முடிவுற்ற கோளங்களே நம் சூரிய குடும்பத்தில் இன்று காணப்படும் ஒன்பது கோள்களாகும். இதில் மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவைகள் வாழ்வதற்கு ஏதுவான தட்பவெப்ப நிலையைக் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ள ஒரே கோள் பூமி ஆகும். இதுபோன்று வேறு கோள்கள் உள்ளனவா எனும் ஆய்வில் இன்றுவரை திட்டவட்டமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. நமது சூரியன் ஒரு பெரிய பால்வீதியில் உள்ள கோடிக் கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றாகும். இது தன் ஆயுள்காலத்தில் பாதி தூரத்தைக் கடந்துவிட்டதாகவும் இன்னும் பாதி ஆயுளே இருப்பதாகவும், இஃது எரிந்து முடிந்தபின் அடுத்து இதுபோன்ற சூரியன் தொடர்ந்து உதயமாகும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பால்வீதியை தமிழர்கள் “வான் கங்கைகள் (Galaxies) என்று அழைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *