அகிலா கிருஷ்ணமூர்த்தி
மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு அது கூடாரமாக இருந்தது. இரண்டு இலைகளை உருவி வாயில் போடுவதும், ஒரு கொத்து தலையில் வைத்துக் கொள்வதும் என அவர்களுக்கு நெருக்கமான மரமாக நின்றிருந்தது. அதன் அருகாமையில் தான் அந்த வார்டு இருந்தது. மருத்துவமனையின் எந்த வார்டுகளுக்குப் போனாலும் வலி பொறுக்க முடியாமல் நோயாளிகளின் அலறலோ, முனகல் சப்தமோ கேட்கும். ஏன் இந்த வார்டில் எந்த ஆரவாரமும் இல்லை? சசிவதனத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் செவிலியர் உதவியாளராக பணிக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகின்றன. இந்த வார்டுக்கு இதுதான் முதல் பணி.
வித்யாவும் அப்படித்தான். செவிலியர் பயிற்சியின் முதல் ஆண்டு முழுக்க மருத்துவக் கல்லூரியில் பயிற்சி எடுத்தாள். இப்போது இந்த பெரிய ஆஸ்பத்திரி வார்டிற்கு புதிதாக வந்திருக்கிறாள். இருவருக்குமே இந்த சூழல் புது அனுபவமாக இருந்தது.
சசிவதனத்தைப் போல் வித்யாவுக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. மனநோயாளிகள் வார்டு பக்கம் போகிறோம் என்றதுமே பயத்தில் அவள் ஏற்கெனவே பணிபுரிந்தவர்களிடம் விசாரித்து வைத்திருந்தாள். பயிற்சி காலத்தில் யாருக்கு இந்த வார்டு போட்டாலும் கொஞ்சம் அச்சமாகவே இருக்கும்.
“மற்ற வார்டு மாதிரி ஏதாவது சத்தம் இருந்தா கூட தேவலாம் போல இருக்கு சிஸ்டர்” சசிவதனாவின் முகம் வெளிறியதை வித்யா கவனித்தாள்.
வார்டின் உள் பகுதியில் இ.சி.டி.அறை இருந்தது. மூளையும் மனதும் ஒன்று தான் போல. நோயாளிகளின் நெற்றிப் பொட்டில் கருவிகளைப் பொருத்தி அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த சசிக்கு இன்னும் அச்சமாக இருந்தது.
“இதெல்லாம் பார்த்தாலே பைத்தியம் பிடிச்சிரும் போல. டியூட்டி மாத்திக்க முடியாதா?” சசி சோகமாகக் கேட்டாள்.
“அதெல்லாம் வாய்ப்பில்ல. உனக்கு மொத்தமா வேலை போயிடும் பரவாயில்லையா?
“போகப் போக பழகிடுமோ என்னவோ. சமாளிச்சிக்கிறேன் சிஸ்டர்.
“சைக்கியாட்ரிக் வார்டு பார்க்குறத்துக்கு பொறுமையும் கனிவும் இருக்கணும் சசி. மூளைக்குப் போற நியூரான்களில் ஒரு முடிச்சி இடம் மாறினாலும் போதும். எம்புட்டு பணக்காரனா இருந்தாலும் சேத்து வச்ச சொத்து சொகமெல்லாம் மறந்துரும். இவங்ககிட்ட உக்காந்து பேசு. வாழ்க்கைங்கறது ஈசல் தத்துவம். அதுக்குள்ள நாமல்லாம் எவ்வளவு படபடக்குறோங்குறது புரியும்.”
“தத்துவமா? என்ன சிஸ்டர் என்ன என்னவோ பேசி நீங்களும் பயமுறுத்துறீங்க”
“நான் பயமுறுத்தல. பழகிப் பாருன்னு சொன்னேன். இவங்கெல்லாம் நோயாளிகள் இல்லங்குறத நீயே புரிஞ்சிப்ப.
“வெளியில இருக்குற மனுஷங்கள கத்தியின்றி, சொற்களின்றி அழ வைக்குறது ஈசி தெரியுமா”?
“அதெப்படி முடியும். மனசு நோகுற மாதிரி திட்டணும். இல்லன்னா உடம்புல வலி வர்ற மாதிரி காயத்த உண்டாக்கணும்”
“சே.சே அதெல்லாம் தேவையில்ல. அவங்க முகமூடிய கொஞ்சம் வாடகைக்கு கேட்டுப்பாரு. ரகசியம் தெரிஞ்சிடும்னு கதறிடுவாங்க. வித்யா குறும்பாகச் சிரித்தாள்.”
“நீங்க சொல்றது எனக்கு எதுவும் புரியல”
“நல்லது தான். வா. எதிர்த்தாப்ல செல் இருக்கு. அங்க அட்மிஷன் ஆகியிருக்காங்களா பார்ப்போம்” என்று சசியை நான்கு தனித்தனி அறைகள் கொண்ட பக்கம் வித்யா அழைத்துப் போனாள். அதில் இரண்டு பேர் மட்டும் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். செல் என்பது மனநிலை தீவிரமாக பாதிக்கப்பட்டு, கடுமையாக நடந்து கொள்பவர்கள் இருக்கும் பகுதி. ஏறக்குறைய கயிறு அல்லது சங்கிலியால் கூட கட்டி அடைத்து வைத்திருப்பார்கள்.
சசிக்கு உடல் நடுங்கியது. அதற்குக் காரணம் இரண்டாவது அறையில் இருந்த சந்தான மூர்த்தியின் சப்தம். மயான அமைதிக்குள் மறைவிடமாக ஒரு மிருகம் காட்டின் இருப்பை சொல்வதுபோல் சிம்மக் குரலாக இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டால் மனிதர்கள் இப்படியெல்லாம் ஆகிவிடுவார்களா? அந்த வார்டின் பொது நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் வரிசையாகப் படுக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். யாரும் யாருடனும் பேசுவதில்லை. ஏதோ யோசனையோடு வெறித்துப் பார்க்கிறார்கள். இருளான தனி அறைகளில் இருப்பவர்கள், எதிர்ப்பக்கம் யாரும் இல்லாமல் யாரோ இருப்பதுபோல் இடைவிடாத உரையாடல் நிகழ்த்துகிறார்கள். ஒருபக்கம் நிசப்தம் மற்றொரு பக்கம் இரைச்சல். இவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?
மனநிலை சரியில்லாதவர்கள் எல்லாம் ஒன்றுகூடிப் பேசினால், இயல்பாக இருக்கிறோம் என்று நம்பிக் கொண்டு இருப்பவர்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவார்கள்? இவர்கள் உலகமே வேறாக இருக்கிறது. வன்மம் இல்லா பேதமில்லா உலகம். குழந்தைகளைப் போல் அன்புக்கு ஏங்குகிறார்கள். சசிக்கு மெல்ல மெல்ல இவர்களைப் பிடித்துப் போனது. யாரும் நெருங்கப் பயப்படும் சந்தான மூர்த்தியை கவனித்துக் கொள்வதென முடிவெடுத்தாள்.
அவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். ஆள் நல்ல உயரமாக, திடகாத்திரமாக இருந்தார். அழகான முகம். தலை முடி சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது. சசியும் வித்யாவும் அறையின் ஜன்னல் கம்பிகள் வழியே கூர்ந்து பார்த்தார்கள். உள்ளே அரை இருள். கம்பி வழியாக உட்புகும் வெளிச்சத்தில் அவர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடிந்தது. இந்த உலகத்தில் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கின்றனவா? காதுகள் கூசும் அளவிற்கு விரசமாகத் திட்டிக் கொண்டிருந்தார். மனம் பாதிக்கப்பட்டு சாலைகளில் தனியாகப் பேசும் மனிதர்கள், தகாத வார்த்தைகளால் ஏன் யாரையோ சாபமிட்டுக் கொண்டே செல்கிறார்கள்? சாபம் வாங்குகிற அளவிற்கு வஞ்சகம் நிறைந்த மனிதர்களும் இருக்கிறார்கள்.
“நம்ப ஊர்ல ஆயா கொட்டுன வார்த்தைகளைத் தான் கூட்ட முடியாது. அம்புட்டும் கவுச்சிம்பாங்க. அதை மிஞ்சிரும் போல இருக்கு இவரோட பேச்சு” சசிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பீதியோடு அவரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்த்தரப்பில் பல பேர் நிற்பது போல் பாவணை செய்து அவர்களை அடிப்பதற்கும் உதைப்பதற்குமான வேகத்தோடு சந்தானம் முந்திக் கொண்டிருந்தார். கால் கட்டப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அவரால் எழும்ப முடியவில்லை. அதைக்கூட அறியாமல் பத்து நபர்கள் பின்னால் நின்று தடுப்பதுபோல் நினைத்துக்கொண்டு, “டேய் விடுங்கடா. என்னை என்ன சிம்பத்தாடின்னு நெனச்சீங்களா? அவனுங்கள பொலி போட்டுற்றேன்” ஆவேசமாகக் கத்தினார்.
வெளியில் நின்று கொண்டிருந்த சசியும் வித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.” சிஸ்டர் நாம உள்ள போனா ரிஸ்க் ஆயிடும். இருக்குற வேகத்துல கொன்னு போட்ருவாரு. போய் ஸ்டாஃபையும் எம்.என்.ஏ. சங்கரையும் கூப்பிடுவோமா?
“அவருக்கு நான் எப்படியாவது தினமும் மாத்திரை குடுக்கணும் சசி. அப்போ தான் அவர் மனசு அமைதியாகி கொஞ்சம் தூங்குவாரு”
வித்யாவுக்கு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவர் தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்து இந்த மாத்திரகளை விழுங்கச் செய்து அமைதி படுத்திவிட மாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது.
சசி ஓடிப்போய் ஆண் செவிலிய உதவியாளர் சங்கரை உதவிக்கு அழைத்து வந்தாள். சங்கர் கடுமையான கோபத்தில் இருந்தான். “சிஸ்டர் உங்க ரெண்டு பேரையும் இந்தப் பக்கம் தனியா வராதீங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். இந்த மாதிரி நோயாளிகளுக்கு உடல் பலம் அதிகமாக இருக்கும். எந்த நேரம் எப்படி மாறுவாங்கன்னு சொல்ல முடியாது. தாக்க ஆரம்பிச்சிடுவாங்க. மாத்திரையை என்கிட்ட குடுங்க. நான் பாத்துக்குறேன்” எரிச்சலாக அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டுவது போல் பேசினான்.
“இல்ல சங்கர். அவர் பாவம். அட்டென்டர்ஸ் யாருமே வந்து பார்க்குறது இல்ல. யாரோ வந்து இங்க சேர்த்து விட்டுட்டு போயிட்டாங்க. நாமதானே அவருக்கு இருக்கோம்”
சசி முடிப்பதற்குள் “ஏங்க பாவம் பார்க்குற எடமா இது. எவ்வளவு தான் சொல்றது. விபரீதம் புரிய மாட்டேங்குது. கௌம்புங்க மொதல்ல”
இருவரும் சந்தான மூர்த்தியை விட்டுப் போவதாக இல்லை. வித்யா மாத்திரைகளை சங்கரின் கைகளில் பிரித்துக் கொடுத்தாள். அறையின் கதவைத் திறந்த சங்கர் சாவியினால் கதவை மெல்ல தட்டினான்.
“என்ன சந்தானம்” சங்கரின் குரலைக் கேட்ட சந்தான மூர்த்தியின் கண்களில் மிரட்சி இருந்தது. நகர்ந்து சுவரின் மூலையில் உட்கார்ந்து கொண்டார். சசியும் வித்யாவும் சங்கரின் பின்னாலேயே உள்ளே வந்தனர். மூத்திரமும் மலமும் பலநாள் குளிக்காத அவரின் உடல் வாடையும் சேர்ந்து அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அருகே போகாமல் தூரத்தில் இருந்தபடியே தட்டில் சோறு வைத்து சாப்பிடச் சொன்னதும் சங்கரின் பின்னால் சந்தான மூர்த்தியின் கண்கள் நோக்கின. சங்கரும் பின்னால் திரும்பி அவர்களைப் பார்த்தான்
“என்ன சிஸ்டர். சொன்னா கேக்க மாட்டீங்களா? பேஷண்ட் கடிச்சிக் குதறுனா தான் உங்களுக்கு புத்திவரும். போய் தொலைங்க மொதல்ல”
கோவப்படாதீங்க பிரதர். டேப்லட் சாப்பிட்டாரா என்று பார்க்க வந்தேன்”
“அதெல்லாம் சோத்தோட கலந்து வச்சாச்சு. சாப்பிடுவாரு வாங்க” வித்யாவின் பேச்சை அலட்சியப்படுத்தியதோடு இருவரையும் வெளியில் தள்ளி அறையை பூட்டி விட்டு சங்கர் வேகமாகச் சென்றான். அவன் தங்களுடைய பாதுகாப்புக்காகத் தான் இவ்வளவு கோபப்படுகிறான் என்று புரிந்தது. ஆனாலும் அவர்களுக்கு மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
சந்தான மூர்த்தி இருக்கும் அறையை முதலில் சுத்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சசிக்கு வந்தது. எப்போதாவது ஆண்கள் குழுவாக வந்து தனி அறைகளை சுத்தம் செய்வார்கள். சங்கர் என்ன சொல்லி வைத்தானோ தெரியவில்லை. மனநோயாளிகள் பிரிவின் பொறுப்பு செவிலியர், இவர்கள் இருவரையும் செல் பக்கம் அனுப்பாமல் பார்த்துக் கொண்டார். செவிலியருக்கு பணி நேரம் மாறும் போதெல்லாம் ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே நின்று சசிவதனம், சந்தானத்தோடு உரையாட ஆரம்பித்தாள்.
“ஐயா இங்க பாருங்க? என் பேரு சசி. நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? நான் உங்களுக்கு பணிவிடை செய்ய வந்துருக்கேன்.”
விவிலிய வாசகம் போல் சந்தானத்தின் காதுகளில் விழும்படி சொல்லிக்கொண்டே இருந்தாள். இதுவரை பத்து நாட்கள் ஆகிவிட்டன. அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. வித்யாவுக்கு அவரைப் பார்க்க தவிப்பாக இருந்தது. அவருக்கு இ.சி.டி. (எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரப்பி) கொடுக்கும் போது பார்த்தது. செவிலியர் பயிற்சி மாணவி என்பதால் செவிலியரின் கண்டிப்பை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சசி மட்டும் தன் செயல்பாடுகளை வித்யாவிடம் சொல்லுவாள். எடுத்த காரியம் நல்லதாக இருந்து, விடா முயற்சியோடு இருந்தால் வெற்றி பெறுவது உண்மைதான். அடுத்த பதினைந்து நாட்களுக்கு சங்கர் விடுமுறை எடுத்திருப்பதாக செவிலியர் கூறினார்.
“ஆபத்துக்கு பாவமில்ல. சங்கர் பார்த்த வேலைய நீ பாரு சசி. நீயும் வித்யாவும் செல்லுல உள்ள பேஷண்டுகள கவனிச்சுக்குங்க. ஆனால், கவனமா இருந்துக்கணும். பட்டுன்னு அடிச்சிருவாங்க” என்று செவிலியர் சொன்னதும் “சரி ஸ்டாப்” என்று சசி, வித்யாவிடம் ஓடிவந்தாள்.
“சிஸ்டர் வாங்க. சந்தான மூர்த்தி பேஷண்ட்ட பார்க்கப் போவோம்” சாவியோடு சசி உற்சாகமாக வித்யாவை அழைத்துக் கொண்டு போனாள்.
“என்ன சசி? இவ்வளவு சந்தோஷமா இருக்க. திடுதிப்புன்னு அவர் குணமாகிட்டாரா? நீ பேசுறது பேஷன்டுக்கு புரியுதா?
“நீங்க வாங்க சிஸ்டர். அவருக்கு புரிஞ்சா என்ன புரியலைன்னா என்ன. நாமதான் அவருக்கு உறவுக்காரங்க. சங்கர் வர பதினைஞ்சு நாளாகுமாம்”
எடுத்தவுடன் சசி அறையைத் திறக்கவில்லை. சங்கர்போல் கதவைத் தட்டவும் இல்லை. பழையபடி ஜன்னல் கம்பி வழியாக சந்தானத்தோடு உரையாடினாள். மையக் கதவு அல்லாமல் அவர் கவனிப்பை ஜன்னல் வழியாகக் குவிக்க சசி அவரைப் பழக்கியிருந்தாள். இந்தமுறை கூடுதலாக ஒரு வரி சேர்த்துக் கொண்டாள்.” ஐயா இவங்க வித்யா சிஸ்டர். நாங்க ரெண்டுபேரும் தான் உங்கள இனி பார்த்துக்கப் போறோம். சிரித்துக்கொண்டே சொன்னாள். அவளுக்குத் தெரியும். சமீபமாக சந்தானம், சசியின் குரலுக்கு செவி சாய்க்கிறார் என்று.
இப்போதும் அவரிடம் எந்த பதிலும் இல்லை. இப்போதெல்லாம் அவர் யாரையும் திட்டுவதில்லை. மனநல மருத்துவரின் பார்வை நேரத்தில், சந்தானத்திற்கு மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாகக் கூறினாராம் வித்யா, சசியிடம் சொன்ன போது, “ஓ அப்படியா! நல்லதுதானே” சசி சந்தோசப்பட்டாள். அந்த மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பானது. அவர் அமைதியாக இருப்பதை உறுதி செய்த பிறகு, இருவரும் அந்த அறைக்குள் சென்றார்கள். நாள்பட்ட மூத்திர வாடை சகிக்க முடியாததாக இருந்தது. அந்த வார்டுக்காக நியமிக்கப்பட்ட துப்புரவுப் பணி செய்யும் லக்ஷ்மியை அழைத்துக் கொண்டார்கள்.
“அக்கா இன்னக்கி ஹோர்ஸ் பைப் போட்டு சுத்தமா அலசி விட்ரலாமுக்கா. போகப் போக வாளியை பயன்படுத்திக்கலாம். சென்ட்டட் பினாயில் இருந்தா தரைக்கு ஊத்திடுவோம் “சசியின் கரிசனத்தை விரும்பிய லக்ஷ்மி, “சரிம்மா” என்று மூன்று பெண்களும் சேர்ந்து அந்த அறையை தேய்த்து சுத்தமாகக் கழுவி விட்டார்கள்.
சசி தவிர மற்ற இருவருக்கும் பயம்தான். சசி மெல்ல சந்தான மூர்த்தியின் அருகில் சென்றாள். என்ன பேசுவது? ஆனால் அவரோடு பேசவேண்டும். “ஐயா அறை சுத்தமா இருக்கா? வாசமா இருக்கா?” சந்தானம் மலங்க மலங்க விழித்தார். அவர் பார்வை மெல்ல கனிந்திருந்தது. “தெனமும் குளிச்சீங்கன்னா சீலைப்பேன் புடிக்காது”.
“அக்கா ஹோர்ஸ் பைப்ப என்ட்ட குடுங்க” சசி அவர் காலில் இருந்த சங்கிலியை அவிழ்த்தாள்.
“பார்த்து சசி. ஆர்வக்கோளாறா எதாவது பண்ணி வைக்காத. நீ ரிஸ்க் எடுக்குற” சொல்லிக் கொண்டே வித்யா, சசியை பின்னுக்கு இழுத்தாள். சசி கொஞ்சம் கொஞ்சமாக சந்தானத்தின் காலில் தண்ணீரை ஊற்றினாள். அவர் வெடுக்கென்று இழுத்துக் கொண்டார்.
“ஐய்யய்யோ. வேண்டாம்மா வாங்க” என்று பணியாளரும் கவனப்படுத்தினார். அவள் மீண்டும் அவர் கால்களில் நீரை ஊற்றினாள். இப்போது கால்களை இழுத்துக் கொள்ளாமல் வசமாக நீட்டினார். சசி சிரித்தாள். சுவரில் ஒடுங்கி உட்கார்ந்திருந்த சந்தானம் நகர்ந்து நகர்ந்து அறையின் மையத்திற்கு வந்தார்.அவரை மூவரும் சூழ்ந்து கொண்டார்கள். தலை, கைகள், கால்கள் என தேய்த்து குளிக்க வைத்தார்கள். மீண்டும் அறையில் இருந்த தண்ணீரை வழுக்கி விடாமல் வெளியே தள்ளி துடைத்தார்கள். சசி மருத்துவமனையில் கொடுத்த மதிய உணவை அவருக்கு ஊட்டி விட்டாள். வித்யா மாத்திரைகளை அவர் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கச் செய்தார். மாத்திரை தொண்டைக்குழி தாண்டி இறங்கியதை பார்த்த பிறகு, வித்யாவும் பணியாளரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சசி அந்தச் சங்கிலியை எடுத்தாள். அதை மாட்டுவதற்கு வாக்காக சந்தானம் கால்களைக் கொடுத்தார். நான்கு பேருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரு சொல் கூட அங்கு தேவைப்படாமல் இருந்தது.
இரண்டு வார்டுகளை சேர்த்து பார்க்கும் பொறுப்பு தலைமைச் செவிலியருக்கு இருந்ததால். ரவுண்ட்ஸ், டியூஸ் என்று இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தார். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியாமல் போனது. இவர்களுக்கு அது வசதியாகவும் இருந்தது. மூவரும் இதை ஒரு தவம்போல் தினமும் செய்து கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் சந்தானம் தூங்குகிறார். அவர் இயல்புக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. விடுமுறை முடித்து சங்கர் வந்தான். நடந்தவைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். சங்கரையும் சேர்த்து சந்தானத்தின் உறவுகளில், ஒன்று கூடுதலாகி நான்காக மாறின.
ஓரளவு குணமாகிக்கொண்டே வந்தார். ஒரு மாதத்திற்குப் பின் நான்கு பேருமே வேறு வேறு வார்டுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. மாதத்தின் இறுதிநாள், மாலை மூன்று பெண்களும் சந்தானத்தைக் காண அவரது அறைக்கு வந்தார்கள். மூவரும் ஜன்னல் அருகே வந்து நின்றார்கள். மதியம் இவர்கள் ஊற்றிக் கழுவிய எலுமிச்சை திரவத்தின் வாசம் மனதிற்கு ஒருவித அமைதியைக் கொடுத்தது.
வித்யா, சசியிடம் “நீ பேசு” என்பது போல் தலையசைத்தாள். “ஐயா நாங்கெல்லாம் பணி செய்ய வேற வேற இடங்களுக்குப் போறோம். ஒரு மாசம் முடிஞ்சிருச்சுல்ல. வேற சிஸ்டருங்க வருவாங்க. அவங்களும் நல்லாப் பார்த்துக்குவாங்க. அவங்கள்ட்ட சொல்லிட்டு போறோம். அப்பப்போ வந்து உங்கள பாக்குறோம்”. சசி முடிக்கும்முன் அழுதேவிட்டாள். மூன்று பேரும் கண்களைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். சந்தானம் நெடுநேரம் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிரியப் போகிறார்கள். இந்த உறவும் நம்மைவிட்டுப் போகப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். இப்போதும் அவர் எதுவும் பேசவில்லை.
அந்த அறையை விட்டு மூன்று பேரும் வெளியேறினார்கள். முதல் அறையைக் கடந்து முதன்மை வார்டுக்கு செல்லும் வழியில் நுழைய ஆயத்தமானபோது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. அறைக்குள் இருந்து விம்மி விம்மி அழும் சப்தம் கேட்டது. அந்த நேரம் அதிவிரைவாகச் செல்லும் வாகனத்தை சட்டென்று நிறுத்தும் தடுப்பானை அழுத்தியது போல் பட்டென்று சசிவதனம் அப்படியே நின்றாள். இன்னும் கூர்மையாகக் கேட்டாள். சந்தானமூர்த்தியின் அழுகை. ஆமாம். அவரேதான். முதன் முறையாகஅழுகிறார். “மீண்டும் அவரைப் போய் பார்க்கலாமா? வேண்டாம். அவர் அழுகையை தாங்கும் சக்தி எனக்கில்லை”. கைவிடப்பட்ட குலதெய்வத்தின் குளம்படிச் சப்தம் அவளை நெருங்கி வருவது போல் இருந்தது. அந்த சலங்கை ஒலி கணீர் கணீரென்று அவள் நியூரான்களை அதிரச் செய்தது. நாற்பதடி தூரத்தில் நின்று கொண்டிருந்த வித்யாவும் லட்சுமியும் “ஏன் நிக்கிற? வா வா”என்று அழைத்தார்கள். சந்தானமூர்த்தி அறையையும், அவர்களையும் சசி மாறி மாறிப் பார்த்தாள். மூளைக்குள் பாரம் ஏறியதுபோல் திம்மென்று இருந்தது. விண்விண்ணென்று தாங்க முடியாத வலி. தலைதெறிக்க ஓடினாள். எங்கு ஓடுகிறாள்? மனிதர்களால் கணிக்க முடியாதது. மனப்பிறழ்வு கொண்டவர்களின் மகாத்மியம்.
Leave a Reply