வர்மம் எனும்  மர்மக்கலை!

வர்மம் எனும்  மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

கூட்டுக்காலம்

சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம்.

கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை உடையதாகும்.

“ஒத்த கமுக்குழியாம் கூட்டுக்காலம்

கூறரிய கூத்துநிலை மெத்தவுண்டு”.

                                                                                கால வர்மநூல்

“ஓவினையாம் கச்சம் தன்னில் ஓங்கிவரும்

கூட்டுக்காலம் உற்றவழி அறிந்து நல்

பாவினையாம் அமிர்தமதின் ஒன்பாம் தானம்

உதகம் வற்றி உலர்ச்சையாகும் உள்ளுக்குள்ளே

செய்வினையால் கூட்டடக்கம் என்றுமாகி

செயலாக வினையாற்றும் இந்தவர்மம்

போவினையால் பொல்லாத பிணிதீர்க்கும் என்று

முன்னோர் உள்புறச்சூத்திரமாய் இருக்கும் பாரே”.

                                                                                                                                வர்ம குருநூல்

என குறிப்பிடுகிறது.

“நித்தமுடன் இக்காலம் கொண்டிடுகில்

கொத்திவரும் தரிப்புளைச்சல் கோச்சல்வலி

செத்த சவமாகிடலாமெனவும் காந்தும்

சத்தியுடன் கை தனையும் தூக்காதாகும்

மெத்ததொரு அக்கினியால் சுட்டதுபோல்

அழலெடுத்து அனலாய் காந்தும் காந்தும்

மொத்தமொரு உடல் தளர்ந்து மேனி சாயும்

      சித்தமதும் கலங்கியங்கே குழப்பமாமே”.                 

                                                                                                 – கால வர்மநூல்

கூட்டுக்காலம் கைப்பூச்சி விழுந்ததானால்

                மதிமயங்கும் பன்னிரெண்டு சென்றால்

                பிழைத்திடவே சாத்தியத்தின் குணமேயாகும்

                வேண்டியதோர் பரிகாரங்கள் செய்து

                அணைத்திடவே தீர்ந்துபோகும்.

                                                                                                                பீரங்கி சாஸ்திரம்

தழைத்த கைக்கூட்டு காலமதின் செய்கை

                                தப்பாமல் யிருபுஜங்கள் விழுந்துதாழும்

                வளைந்திட்டு அந்த நரம்புகளை சுருக்கிப்போகும்

                                வசைவுகளை நெருக்கியே குறுகப்பண்ணும்

                குழைத்திட்ட பன்னிரண்டு நாளுக்குள்ளே

                                கூறை உயிர்பறிக்க வழிபார்க்குமய்யா

                தூளை நல் காலமது தூண்டுமானால்

                                திகழாமல் தீருமெடா சூக்ஷம் தானமாமே.

                                                                                                                  – வர்ம கருவிநூல்-500

“காந்துகின்ற இவ்வர்மம் தீருதற்கு

கனமான உள் வெளிச்சூத்திரமாம்

மாந்துகின்ற மன்மதனின் அடக்கமதும்

மாநிலத்தோர் மீளுதற்காய்

சாந்துகின்ற சரநிலையில்

சகல குண மருந்துகளுமீந்துவர

ஏந்துகின்ற கணக்கெல்லாம் மாறி

ஏலவழிக்கேகிவிடும் கண்டுபாரே”.

                                                                                                 – கால வர்மநூல்

எனவும் குறிப்பிடுகிறது.

                புனலுறுமூக்கம் புலந்துறு மித்தலமொன்பான் என்ப

                அனலுறும் நாடியகத்துறுமுறவால் கனத்துறும் என்ப

                கனலும் புனலும் கலந்துறுமுறவான் கூட்டதும்என்ப

                அனலுறும் புனலும் அகத்துறும் விளைவாம்.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

புனல் எனும் ஆற்றல் விரைவுபெறும் இத்தலம் அமுத இயக்கத்தின் ஒன்பதாவது தலமாகும். இத்தலத்தில் அக்கினி ஆற்றல் நிறைந்த காந்தாரி நாடி, அகச்சூத்திர புறச்சூத்திர நாடிகளின் ஆற்றலும் நிலைபெற்றுள்ளதால் நீரும் நெருப்பும் இணைந்து செயல்படும் கூட்டுக்காலம் எனப்படுகிறது. இத்தலத்தில் தாக்கம் கொள்ளும்போது உடல் வீக்கம், எரிச்சல் போன்ற குணங்கள் காயத்தின் விளைவாக உண்டாகும் என்பதாம்.

                ஆமெனும் கூட்டில் அறிந்துறும் காயமழித்துறும்

                நாமெனும் எரிச்சல்காந்தல் கடுப்புறும் மூச்சடைப்பும்

                தாமெனும் தரிப்புடனுழைச்சல் அழைச்சல் உள்ளுற

                வாமெனும் வலியும் மிஞ்சியேக் குத்துழைவு என்பதாம்.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இக்கூட்டுக்காலத்தில் காயம் கொண்டால் காயமே அழிந்து போகுமளவிற்கு காந்தல், எரிச்சல், கடுப்புழைவு, தரிப்பு அழைச்சல், உழைச்சல் வலியுமிஞ்சி குத்தெடுக்கும் என்பதாம்.

                என்பானித்தலம் எழில்பிணி பல தீர்த்திடுமஃது

                ஒன்பானென்பதான் உறுவலி நவிரங்கண்டம்

                தின்பானென்ப முதிர்சூலை வாதவலிகளும்

                வன்பானிஃதறிந்து கையிதம் செய்தலான்.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கூட்டுக்காலம் எனும் இத்தலமானது பல சிறந்த பிணிகளை தீர்த்துவிடும். அது அமுத இயக்கத்தின் ஒன்பதாவது நிலை என்பதால் கண்டம்-தலை இவைகளின் வலிகளைத் தீர்க்கப் பயன்படுவதோடு வாதம், சூலை வலிகளையும் போக்கும் என்பதை அறிந்து பக்குவமாகக் கையாள வேண்டும் என்பதாம்.

                கட்டி வீக்கம் போக்குங் காண் கனமாயறிந்து செய்திடவே

                சுட்டிசுருக்கும் மயக்கமுடன் சுகமாய் மனதை ஆக்குங்காண்

                தட்டி பறிக்கும் விடம் போக்கும் தானாய் வந்து சுகமாக்கும்

                எட்டிப் பிடித்தித்தலத்தை எழிலாய் கூட்டிச் செய்யே.

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கூட்டுக்காலத்தின் முழுதன்மைகளையும் அறிந்து செய்து வந்தால், கட்டி, வீக்கம், மயக்கம் இவைகளைப் போக்கி மனதிற்கு இதத்தையும், சுகத்தையும் தருவதோடு உயிரையே மாய்த்துவிடும். உடலில் பரவும் விசத்தன்மையைப் போக்கி சுகத்தையும் தரும் என்பதாம்.

                வன்மமிஃது கூட்டுங்காண் வலியபிணிகள் பலபலவாய்

                தன்மமிஃது தானறிந்து தணிக்கும் மருந்துசெய்யாட்டால்

                பன்மமிஃது பனிக்குங்காண் படிப்படியாய் தரிப்பெடுக்கும்

                குன்மமஃது வந்தாற்போல் கூட்டில் வலியாம் காண்பீரே.

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

இந்த வர்மத்தின் காயத்திற்கு தக்க மருந்து செய்யாமல் விட்டுவிட்டால் பனி எனும்  சுரமுண்டாகி உடலில் படிப்படியாய் தரிப்புழைச்சல் தோன்றி குன்மவலியைப் போல் உடலில் வலிகள் என பலபல பிணிகளும் உண்டாகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தில் தாக்கம்கொண்டால் கையில் தரிப்பும், உளைச்சலும் உண்டாகி கையை மேலே தூக்க முடியாது. மேலும், கைகோச்சலும், வலியும் உண்டாகி தீயினால் சுட்டதுபோல் காந்தலும் எரிச்சலும் ஏற்படும். அதிக வியர்வையும், தளர்ச்சையும் உண்டாகும். இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் கழுத்துறை வழியே கை வரை தடவி, உள்சூத்திர அடங்கல், புறச்சூத்திர அடங்கல், செவிக்குற்றி அடங்கல், சிப்பிச்சக்கர அடங்கல், நட்டெல் அடங்கல்களைத் தூண்டி தடவி, தொடர்ந்து கழுத்துறை வழி முன்னும் பின்னும் கத்தரிக்கோல் மாறலாக மார்பு, முதுகு தடவி, மேல்நோக்கி ஏற்றி தடவி, இதமாக செய்து, சிறந்த அகமருந்துகளையும், புறமருந்தாக பற்று, ஒற்றல் போன்றவைகளையும் செய்துவர சுகம் உண்டாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் உடலில் காந்தல், நோய் எதிர்ப்புத்திறன் குறைதல், கைதரிப்பு, உளைச்சல், வலிமை குறைவு, விரல்கள் சோர்தல், காதுமந்தம் போன்ற பின்விளைவுகளில் ஒன்றோ பலவோ உண்டாகக் கூடும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், மூவிரல், உள்ளங்கை, மொழிக்கூட்டு,  போன்றவைகளாலான தூண்டல், அழுத்தல், அனுக்கல், தட்டல், அதிர்த்தல், அமத்தல் தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர கழுத்துவலி, இதயவலி, கைமுட்டுவலி, வாதவலி, நிணநீர் கட்டிகள், காச கழலைகள், நெஞ்சுவலி, மயக்கம், தலைவலி குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *