பணியிட அழுத்தங்கள்… தொலைந்து போகும் வாழ்வும்…..மீட்கப்பட வேண்டிய ஆன்மாவும்!

  • By Magazine
  • |

– இரா. அரிகரசுதன்

“கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல்,  சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது.

ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது.

வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் வெறும் சம்பாதித்தல் அல்லது வங்கிச் சேமிப்பு அல்ல என்பதை உலகளவில் பலர் தங்கள் வாழ்வின் வழியே கண்டு உணர்த்தியுள்ளனர்.

யுவான் சூலின் (Yuan Zhulun)  சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த இவர், தனது 30-களில் அந்த வேலையைத் துறந்து, விவசாயம் செய்யச் சென்றார். “ஆயிரம் டாலர் சம்பளத்தை விட, ஒரு செடி வளர்வதைப் பார்க்கும் அமைதி பெரியது” என்றார் அவர்.

அரியானா ஹஃபிங்டன் (Arianna Huffington) ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ நிறுவனத்தின் நிறுவனர், அதிகப்படியான வேலையினால் மயங்கி விழுந்த பிறகு, தூக்கத்திற்கும் ஓய்விற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் Thrive’ என்ற இயக்கத்தையே தொடங்கினார்.

இவர்கள் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்: உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் விலையாகக் கொடுத்துப் பெறும் எந்த வெற்றியும் நிரந்தரமானது அல்ல. இதனை சம்பாதிக்க வேண்டாம் பணமே வேண்டாம் என்று தட்டையாக புரிந்து கொள்ளுதல் கூடாது. தேவையான பணம் வேண்டும். ஆனால் வாழ்வின் தேவைகளை கட்டுக்குள் வைத்தலும், தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை அருகாமையில் உருவாக்குவதன் இயற்கை தேவையையும் அறிவார்ந்த அரசியல் நடவடிக்கைகளை  செய்வதற்கான அத்தியாவசியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்நாட்டில் வாழ்வதற்கான உரிமை

“எங்கோ ஒரு அந்நிய தேசத்தில், முகம் தெரியாத மனிதர்களிடையே இயந்திரமாக ஓடுவதை விட, நம் சொந்த மண்ணில், தெரிந்த முகங்களுக்கு மத்தியில் வாழ்வது பெரும் வரம்.” வெளிநாட்டு மோகமும், பெருநகர மோகமும் இளைஞர்களைத் தங்கள் வேர்களிலிருந்து பிரிக்கின்றன. நம் ஊரிலேயே கிடைக்கும் வாய்ப்புகளைக் கண்டறிந்து, எளிய வருமானத்தில் நிறைவான வாழ்வை வாழ்வது ஒரு கலை. இது நமது உரிமையும் கூட.  இது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் நமக்கு ஒரு பாதுகாப்பைத் தருகிறது. அதற்கு தகுந்த பொருளாதர திட்டங்களை அரசு ஏற்படுத்தவும் கையாளவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உள்ளூர் வாழ்வு: வசதிக் குறைவா?

சொந்த ஊரில் வாழ்வதை ‘எதிர்காலம் இல்லாதது’ என்று கருதும்ஒரு மாயை இளைஞர்களிடம் உள்ளது. பெருநகரங்களில் கிடைக்கும் கைநிறையச் சம்பளம், அங்கிருக்கும் அதிகப்படியான வாழ்க்கைச் செலவினங்களால் (Rent, Travel, Lifestyle)  கரைந்து போகிறது.

உள்ளூரில் வசதிகள் குறைவாக இருக்கலாம்,ஆனால் அங்குதான் ‘நேரம்’எனும் பெருஞ்செல்வம் கிடைக்கிறது. அந்த நேரத்தைப் பயன்படுத்திஇணையம் வழி (Remote Work)  உலகளாவிய வேலைகளைச் செய்வது அல்லது சுயதொழில்தொடங்குவது போன்ற மாற்றுகளைச் சிந்திக்க வேண்டும். “ஊர் ஊராக அலைவதை விட, ஊருக்குள்ளேயேஒரு உலகத்தை உருவாக்குவதே” அதாவது உலகளாவிய சிந்தனை உள்ளுர் செயல்பாடு என்பதுவே அறிவுடைமை.

குடும்பம் ஒரு பாதுகாப்பு வளையம்

பெற்றோரோடு சேர்ந்து வாழ்வது என்பது வெறும் கடமை அல்ல; அது ஒரு மனோரீதியான காப்பீடு. இயந்திரத்தனமான கார்ப்பரேட் உலகில் நாம் சந்திக்கும் அவமானங்களையும், அழுத்தங்களையும் துடைக்க ‘அம்மா’வின் ஒரு கைப்பிடி உணவோ அல்லது ‘அப்பா’வின் ஒரு ஆறுதல் சொல்லோ போதுமானது. தனிமைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். கூட்டுக்குடும்பச் சிதைவுதான் இன்றைய இளைஞர்களைச் சமூக வலைதளங்களில் அழ வைக்கிறது.

பெற்றோர்களுக்கும் இளைஞர் களுக்குமான வேண்டுகோள் பணத்தை முதன்மையாகப் பார்ப்பதைத் தவிருங்கள். “என் பிள்ளை இத்தனை லட்சம் சம்பாதிக்கிறான்” என்பதை விட “என் பிள்ளை நிம்மதியாக இருக்கிறான்” என்பதில் பெருமை கொள்ளுங்கள். பிள்ளைகளையும் அதை நோக்கியே வளருங்கள். வெவ்வேறு அனுபவங்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் தன்னம்பிக்கையே நிலையானது. முதல் அடியிலேயே சிகரத்தைத் தொட நினைப்பது அதாவது ஏணியின் முதல்படியில் உச்சிப்படியின் சுமையைச் சுமப்பது என்பது எவ்வளவு கடினமானதுதானே.

பெண்கள் வேலை தேடும்போது கவனிக்க வேண்டியவை:

கார்ப்பரேட்உலகம் பெண்களை ஒரு ‘உழைப்பு இயந்திரமாகவும்’ தங்களுக்கான வியாபாரக் கவர்ச்சியாகவும் பார்க்கின்றது.  இரவோ பகலேழ பாதுகாப்பான பணிச்சூழல், பயணங்களில் நிறுவனம் வழங்கும் பாதுகாப்பு வசதிகள் போன்றவை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

மனநலச் சலுகைகள் மிகவும் அத்தியாவசியமானது மகப்பேறுவிடுப்பு (Maternity Leave)  தாண்டி, மாதவிடாய் விடுப்புமற்றும் குடும்பச் சூழலுக்குஏற்ப நெகிழ்வான வேலைநேரம் (Flexible timing)  வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமைஅளிக்க வேண்டும். இது ஆண்களுக்கு வேறுவழிகளில் அழுத்தத்தைக் குறைக்கும்.

பெப்சிகோ முன்னாள் சி.இ.ஓ இந்திரா நூயி ஒருமுறை “பெண்களால் எல்லாவற்றையும் (Work & Life) ஒரே நேரத்தில் சரியாகச்செய்ய முடியாது, ஆனால் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.” உங்கள்உடல் நலனும் குடும்பமும் சிதையாத ஒருபணியே சிறந்த பணி என்றார். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உலகளாவிய ‘விசித்திர’ முடிவுகள்:

உலகளவில் இன்று “The Great Resignation  (பெரிய அளவிலானபதவி விலகல்) என்ற போக்கு நிலவுகிறது. சீனாவின் ‘Lying Flat’ (Tang Ping) இயக்கம்:அதிகப்படியான உழைப்புக்கு எதிராக சீனஇளைஞர்கள் தொடங்கிய இந்த இயக்கம், “குறைவான நுகர்வு – அதிகப்படியான நிம்மதி”என்ற தத்துவத்தைப் பேசுகிறது.

ஜசிந்தா ஆர்டெர்ன் ((Jacinda Ardern)  நியூசிலாந்து முன்னாள் பிரதமர்,தன் பதவிக்காலம் முடியும்முன்பே, “என்னால் இனி முழுமையாகப்பங்களிக்க முடியாது, எனக்கும் குடும்பத்திற்கும்நேரம் தேவை” என்றுகூறிப் பதவியைத் துறந்தது, பதவிப் பித்தை விடப்பக்குவமே மேலானது என்பதைக் காட்டியது. ஆனால் நம் நாட்டின் நிலையோ பெரும்பான்மையான மக்கள் தங்கள் இறுதிக்காலம்வரை வறுமை காரணமாக பணிபுரிவது அல்லது தனிமை காரணமாக பணிபுரிவது என்றுதானே இருக்கின்றது.

முதியோரின் ஏக்கமும் வழிகாட்டுதலும்:

இன்று பல வீடுகளில் வயதான பெற்றோர்கள் தனிமையில் வாடுகிறார்கள். “என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான், மகள் பெங்களூரில் இருக்கிறாள்” என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், அவர்களுக்குத் தேவை தங்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் மாலை நேரங்களே.

பெற்றோரின்குரல்: “பணம் தீர்ந்துவிட்டால்உழைத்துச் சம்பாதிக்கலாம், ஆனால் உன்குழந்தைகள் வளரும் அழகைப்பார்க்கத் தவறிவிட்டால், அதை எத்தனைகோடி கொடுத்தாலும் வாங்கமுடியாது” என்பதே அனுபவம் வாய்ந்த முதியோரின் அறிவுரை. மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என ஒரு குடைக்கீழ் வாழ்வதே மன அழுத்தத்திற்கான ஆகச்சிறந்த மருந்து.

நுகர்வுக் கலாச்சாரமும் படைப்பாற்றலும்

இன்றைய கார்ப்பரேட் உலகம் நம்மை வெறும் ‘நுகர்வோராக’ (Consumers) மட்டுமே வைத்திருக்க விரும்புகிறது. காலையில் குடிக்கும் தேநீர் முதல் உடுத்தும் உடை வரை எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். தற்போது கிராமங்களும் இந்நிலையை நோக்கி நகர்கின்றது வேதனைதான்.  தன் வாழ்விற்கான எல்லாப் பொருட்களையும் விலைக்கு வாங்காமல், சிலவற்றையாவது, ஒரு சிறு தோட்டம் அமைப்பது, கைவினைப் பொருட்கள் செய்வது அல்லது நமக்கான உணவை நாமே சமைப்பது போன்ற பணிகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். எப்போது ஒரு மனிதன் எதையாவது உருவாக்குகிறானோ (சிக்ஷீமீணீtமீ), அப்போதுதான் அவன் இயந்திர நிலையிலிருந்து விடுபட்டு ‘மனிதனாக’ மாறுகிறான்.

மண்ணின் மரணம்: உள்ளூர் அழகியலும் காலனியாதிக்கச் சதியும்

இன்று இளைஞர்கள் தங்கள் ஊரை ‘வசதியற்றது’ என உதறிவிட்டுஓடுவது தற்செயலானது அல்ல;அது திட்டமிட்ட ஒருபண்பாட்டுச்சதி. காலனியாதிக்கக் கல்விமுறை (Macaulayism)  என்பது ஒருவனைஅறிவாளியாக்குவதற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக, அவனைத்தன் மண்ணிலிருந்து அந்நியப்படுத்தி,பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஒரு ‘பணிவானஊழியனாக’ (Global Clerk) மாற்றுவதற்காகவே வடிவமைக்கப்பட்டது. கல்வி தனியார்மயமாக இருப்பதுவே இதற்கான ஆதாரம்தான்.

இக்கல்வி நிலையங்கள் இன்று அறிவை ஊட்டும் இடங்களாக இருப்பதற்கு பதிலாக அவைஇளைஞர்களை ஒரு ‘பந்தாக’ உருமாற்றுகின்றன. அந்தப் பந்துதன் சொந்த மண்ணில் நிலைக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் எறியும்திசையெல்லாம் உருண்டோடப் பழக்கப்படுத்தப்படுகிறது. உயர்நிலை கல்வி நிலையங்களில் நிறுவனங்கள் கல்லூரிகளில் காத்திருந்து மாணவர்களை அவர்களுக்கான முன்தொழிலாளிகளாக பாவித்து பயிற்சிக்கொடுத்து படிப்பு முடிந்தும் முடியாமலும் கொத்திக் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு பணிகிடைத்தல் (internship) ஒரு சாதனையாகக்கூட பார்க்கப்படுகின்றது. உண்மையில் இது இளைஞரை சேணம் கட்டிய குதிரையாக மாற்றிவிடுகிறது.

புகழ்பெற்ற சிந்தனையாளர் ஜான் டெய்லர் (John Taylor Gatto)  தனது ஆய்வுகளில், “நவீனப் பள்ளிக்கல்வி என்பது குழந்தைகளைச்சுதந்திரமாகச் சிந்திக்க விடாமல், அவர்களைஒரு குறிப்பிட்ட அதிகார அமைப்பிற்குக் கட்டுப்படும்படி ((Regimentation)  மாற்றுகிறது” என்று குறிப்பிடுகிறார். இதுவே காலனியாதிக்க ஏஜென்டாகக்கல்வி நிலையங்கள் செயல்படுவதற்கான அத்தாட்சி ஆகும்.

உள்ளூர் அழகியலின் அழிப்பு: ஒவ்வொரு ஊருக்கும்ஒரு தனித்துவமான அழகியல் (Aesthetics)  உண்டு. அந்த ஊரின் கட்டிடக்கலை, அந்த மண்ணின் ருசி கொண்ட உணவு, அந்தச் சூழலோடு இணைந்த உடை என எல்லாம் சிதைக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் ஒரே மாதிரியான ‘மால்’ (Mall) கலாச்சாரம் திணிக்கப்படுகிறது. உண்மையில் மால் என்பது என்ன அது ஒரு மாயவலை. ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் அது ஒரு ‘நவீன காலனித்துவ (Modern Colonial Observatory). பழைய காலனித்துவ காலத்தில் நிலத்தை ஆக்கிரமித்தார்கள். இன்றைய ‘மால் கலாச்சாரம்’ மனிதர்களின் நேரத்தையும் மனதையும் ஆக்கிரமிக்கிறது.

·             தொடர் கண்காணிப்பு: ஒவ்வொரு அங்குலத்திலும் இருக்கும் கேமராக்கள் (CCTV)  உங்களை ஒரு நுகர்வோராக மட்டுமே பார்க்கின்றன. நீங்கள் அங்கே ஒரு சமூக மனிதனாக நுழைய முடியாது; ஒரு ‘வாடிக்கையாளராக’ மட்டுமே இருக்க முடியும்.

·அடையாள அழிப்பு: ஒவ்வொரு ஊரின் பாரம்பரியச் சந்தைகளுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ஆனால், மால் என்பது லண்டனில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். இது உள்ளூர் கலாச்சாரத்தை அழித்து, ஒரு உலகளாவிய ‘ஒரே மாதிரியான’ (Homogenized) நுகர்வுப் பண்பாட்டைத் திணிக்கிறது.

பொது வெளியின் மரணம் (The Death of Public Space)

முன்பு ஊர் மந்தைகளும், பூங்காக்கள், தெருக்களும் மனிதர்கள் தாராளமாகச் சந்திக்கும் இடங்களாக இருந்தன. அங்கே நுழைவதற்கு அனுமதி தேவையில்லை, காசு தேவையில்லை. ஆனால் மாலில் நீங்கள் நுழைய வேண்டுமெனில் சில ‘தகுதிகள்’ (நல்ல ஆடை, தோற்றம்) எதிர்பார்க்கப்படுகின்றன. ஏழை எளிய மக்கள் அங்கே நுழைய முடியாத ஒரு மெல்லிய சுவர் எழுப்பப்பட்டுள்ளது. வேட்டி, சாரம் கட்டியவர்கள் போகமுடியாது. உங்கள் வீட்டு உணவுகளைக் கொண்டுசெல்ல முடியாது. இது ஒரு மிகபுபெரிய சமூகப் பிளவு ஆகும். இது ஒரு ஊரின் மக்களை ‘மாலுக்குப் போகுபவர்கள்’ மற்றும் ‘போக முடியாதவர்கள்’ என இரண்டாகப் பிரிக்கிறது.

கலாச்சாரத் திணிப்பு (Cultural Imperialism) மால் என்பது வெறும் கட்டிடம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. உள்ளூர் உணவுகளை விட, பன்னாட்டு நிறுவனங்களின் உணவுகளே மேலானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. பருவகாலங்களுக்கு ஏற்ப மாறாமல், ‘பிராண்ட்’களுக்கு ஏற்ப மாறும் ஒரு செயற்கையான வாழ்க்கையை இது போதிக்கிறது.

ஆக எவ்வளவு நுட்பமாக நீங்கள் உருமாற்றப்படுகின்றீர்கள் அல்லவா. மனதளவிலேயே உள்நாட்டு வாழ் வெளிநாட்டு குடியாக உருமாறுதல் என்பதை புரிந்துகொள்கிறீர்களா. இது உங்களை அதிக நுகர்வுக்கும் அதுநோக்கியப் பணத்தேவைக்கு விரட்டாதா என்ன?

சூழலியல் சிதைவு: உள்ளூர் நீர்நிலைகளையும்,காடுகளையும், பாரம்பரிய விவசாயத்தையும் ‘பின்தங்கியவை’என முத்திரை குத்தி,பன்னாட்டு நுகர்வுப் பொருட்களை (FMCG) நம்மீது திணிப்பதே இந்தச்சதியின் நோக்கம்.

· உள்ளூரில்இருக்கும் இளைஞன் தன்ஊரின் வளத்தைப் பெருக்கினால், அந்த ஊர் தற்சார்பு (Self-sufficiency) அடைந்துவிடும்.அப்படி நடந்தால் பன்னாட்டுநிறுவனங்களின் லாபம் குறையும். அதனால்தான், “உள்ளூரில் எதிர்காலம் இல்லை”என்ற பொய்ப் பிரசாரத்தைக் கல்வி வழியாக விதைத்து, இளைஞர்களை வெளியேற்றுகிறார்கள். இணைவை அழிக்கும் நுகர்வு:இயற்கையோடும், சுற்றத்தோடும் நமக்கு இருந்த’இணைவை’ (Connection) அழித்து விட்டு, நம்மைத் தனிமனிதர்களாக (Isolated Individuals) மாற்றுவதே இந்த நுகர்வுப் பண்பாடு.

· தன்வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கறியைவிட, பல்பொருள் அங்காடியில்நெகிழிப் பையில் அடைக்கப்பட்ட காய்கறியே உயர்ந்தது எனக் கருதவைப்பது ஒருவகை ‘மனஅடிமைத்தனம்’.

· இந்தவெளியேற்றம் (Migration)  என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அதுநம் முன்னோர்கள் நமக்காகவிட்டுச் சென்ற சுற்றுச்சூழல் தயவையும், வாழ்வாதார அறிவையும் கைவிட்டுவிட்டு, ஏதோ ஒரு பன்னாட்டுநிறுவனத்தின் லாபத்திற்காக நம் ஆயுளைத் தாரை வார்ப்பதாகும். தீர்வாக இளைஞர்கள் உள்ளூரிலேயே தங்கி, அங்குள்ள வளங்களை நவீனத் தொழில் நுட்பத்தோடு இணைத்து மேம்படுத்தினால் மட்டுமே, காலனியாதிக்கத்தின் இந்த எஞ்சிய மிச்சங்களிலிருந்து நாம் விடுதலை பெற முடியும். உள்ளூர் வளரும் போதுதான், அங்கு அழகியலும் அதிகாரமும் மீண்டும் மலரும்.

 சச்சரவுகளைத் தாண்டிய தற்சார்பு:

இன்று இந்தியா போன்ற நாடுகளில்நிலவும் சாதி, மதப்பூசல்களையும், ஊழலையும் முன்னிறுத்தியே ஒரு ‘வெளியேற்ற அரசியல்’ (Politics of Migration)  கட்டமைக்கப்படுகிறது. “இங்கு முன்னேறமுடியாது, எல்லாம் சீரழிந்து கிடக்கிறது”என்கிற பிம்பத்தை இளைஞர்கள்மத்தியில் உருவாக்கி, அவர்களைப் பன்னாட்டுநிறுவனங்களின் கனிவான அடிமைகளாக மாற்றுவதே இந்தச் சதியின் அடிப்படை. மேற்கத்திய நாடுகளில்நிறவெறியோ (Racism),  துப்பாக்கிக் கலாச்சாரமோ அல்லது தனிமனிதப் பாதுகாப்பின்மையோ இல்லையா? அங்குள்ள சவால்களை மறைத்துவிட்டு, இந்தியாவைக் குறைகளின் கூடாரமாகமட்டுமே காட்டுவது ஒருவகையான ‘காலனியாதிக்கக் உளவியல்’ (Colonial Hangover). இங்கே இருக்கும் லஞ்சத்தையும், சாதிப் பாகுபாட்டையும் களைய வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்குப் பயந்துவெளியே ஓடுவது என்பது, வீட்டிற்கு வெள்ளை அடிக்கவழியில்லை என்பதற்காக வீட்டை விற்றுவிட்டுவாடகைக்குச் செல்வதற்குச் சமம்.

உள்ளூர் அதிகாரம் – தீர்வின் ஊற்றுக்கண்: சாதி, மதம்போன்ற சச்சரவுகளுக்குப் பின்னால்இருக்கும் ஒரு முக்கியமானகாரணி ‘வளப் பற்றாக்குறை’மற்றும் ‘அதிகாரக் குவிப்பு’.

இளைஞர்கள் உள்ளூரிலேயே தங்கி, அங்குள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதும், உள்ளூர் சந்தையை உருவாக்குவதும் சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும். எப்போது ஒரு சமூகம் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைகிறதோ, அப்போது பிளவுபடுத்தும் அரசியலின் வேர் அறுபடும்.

ஊழலைத் தவிர்க்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூர் நிர்வாகத்தைவெளிப்படையானதாக மாற்றுவது இன்றைய இளைஞர்களால் முடியும். இது வெளியே ஓடுவதை விடப் பெரியபுரட்சி.

மண்ணின் நீதி (Soil’s Justice): பன்னாட்டு நிறுவனங்களில் நுழையும்போது உங்கள் சாதியோ, மதமோ கேட்கப்படாமல் இருக்கலாம். ஆனால், அங்கு நீங்கள் வெறும் ஒரு ‘ஐடி எண்’ (Employee ID) மட்டுமே. உங்கள் அடையாளத்தையும், பண்பாட்டையும் அந்த ஏசி அறைகள் முழுமையாக விழுங்கிவிடும். மாறாக, உங்கள் மண்ணில் நீங்கள் ஒருசிறு மாற்றத்தைச் செய்தாலும், அது பல தலைமுறைகளுக்கான அடையாளமாக மாறும்.

தற்சார்பு வாழ்வியலே லஞ்சத்திற்கான மருந்து: தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், உள்ளூர் அழகியலை மீட்டெடுப்பதும் ஒருவனை லஞ்ச ஊழலில்இருந்து விடுவிக்கும். ஆடம்பர நுகர்வுக்காகவும், கடன் தவணைகளுக்காகவும் ஓடும் இளைஞனே லஞ்சத்திற்கு அடிமையாகிறான். “எனக்கான உணவை என்மண் தரும், எனக்கானஅழகியலை என் பண்பாடுதரும்” என்று வாழும் ஒருவரை எந்த லஞ்சத்தாலும், சச்சரவாலும் அசைக்க முடியாது.

இடப்பெயர்ச்சி அரசியல்: தமிழ்நாட்டின் வெற்றிடமும் மாற்றான் வருகையும்

தமிழ்நாட்டு இளைஞர்கள் “படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இங்கில்லை”என்றோ அல்லது “பெருநிறுவனமோகத்திலோ” வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வெளியேறுவது ஒரு ‘அமைதியான இடப்பெயர்ச்சியாக’ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இயற்கை ஒருபோதும்வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை.

வெற்றிடத்தை நிரப்பும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்: தமிழ்நாடு இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் (GSDP)  இங்குள்ள குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs)  கட்டுமானம் மற்றும் சேவைத்துறையில் ஏற்படும் உழைப்புத் தேவையை, பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்மற்றும் ஒடிசா மாநிலஇளைஞர்கள் நிரப்புகிறார்கள்.

அதிகாரப்பூர்வமற்ற கணக்கீடுகளின்படி, தமிழ்நாட்டில் சுமார் 35 முதல் 40 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாகக் கட்டுமானம் மற்றும் உற்பத்தித்துறையில் 80% உழைப்பு இவர்களுடையதாகவே மாறிவிட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் முரண்பாடு: தமிழ்நாடு இந்தியாவின் ‘உயர்கல்வி தலைநகரம்’ (GER 47% க்கும்மேல்). இங்குள்ள இளைஞர்கள்அனைவரும் ‘வெள்ளை காலர்’

(White Collar) வேலைகளை மட்டுமே தேடுவதால், அடிப்படைத்தொழில் துறைகளில் மிகப்பெரியஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

நம் இளைஞர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிய, நம் ஊர் விவசாய நிலங்களிலும், ஆலைகளிலும் வடமாநில இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். இது நீண்டகாலத்தில் நிலத்தின் மீதான உரிமையையும், அதிகாரத்தையும் மெல்ல மாற்றியமைக்கும். இவர்கள் உலக குடிமக்களாக மாறுவார்கள் என்பார்கள். ஆனால் உண்மை என்ன சொந்த நாட்டின் உரிமை பறிபோகும். நிலமற்ற, ஆனால் பணம்கொண்ட அகதிகள்.

மூலதன வெளியேற்றம்: தமிழ்நாட்டில் உழைத்துச் சம்பாதிக்கும்பணத்தின் பெரும் பகுதி

(Remittance) பிற மாநிலங்களுக்குச் செல்கிறது. இது உள்ளூர்சுழற்சிப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும் உள்ளூர் அழகியல் சிதைவதற்குஇதுவும் ஒரு காரணம்.பணியிடங்களில் தமிழ் மொழிமெல்லப் புறந்தள்ளப்பட்டு, ஆங்கிலம் மட்டுமே அல்லது இந்தி ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகிறது.

அதிகாரப் பகிர்வு: உழைக்கும் வர்க்கமே ஒரு நிலத்தின் அரசியலைத் தீர்மானிக்கும். எதிர்காலத்தில் வாக்கு வங்கி அரசியலிலும் இது பெரியமாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்தியாவின் பிறமாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சிவிகிதம் குறைந்து (Replacement level fertility -க்கு கீழே). இளைஞர்கள் வெளியேறிக்கொண்டே இருந்தால், இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு ‘முதியோர்களின் மாநிலமாக’மாறும் அபாயம் உள்ளது. அந்தச் சூழலில் முழுமையான அதிகாரமும், பொருளாதாரமும் உழைக்கும் வர்க்கமாக உள்ள பிற மாநிலத்தவர் வசமே இருக்கும்.

கௌரவமான உழைப்பு (Dignity of Labour): இந்தச் சூழலைமாற்ற வேண்டுமானால், தமிழ் இளைஞர்கள் ‘வேலை’ குறித்தபார்வையை மாற்ற வேண்டும். சொந்தமண்ணில் விவசாயம் செய்வதோஅல்லது சிறு தொழில் தொடங்குவதோ ‘தாழ்வானது’ என்ற எண்ணம் காலனியாதிக்கக் கல்வி நமக்குக் கொடுத்த சாபம். உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட Value Added’  தொழில்களில் இளைஞர்கள் இறங்கவேண்டும்.

உதாரணமாக, ஒரு பொறியாளர்தன் ஊர் விளைபொருளைச் சந்தைப்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கினால், அவர் வெளியேற வேண்டிய அவசியமில்லை; மாறாகப் பலருக்கு வேலை கொடுக்கமுடியும். உலகத்தை உங்கள் ஊர் நோக்கித்திருப்புங்கள்: நாம் ஏன் எப்போதும் லண்டனையும், நியூயார்க்கையும் தேடி ஓட வேண்டும்? நம் ஊரின் தொன்மத்தை, நம் ஊரின் தனித்துவமான கலைகளை,வி ளைபொருட்களை ஏன் உலகம் தேடி வரும்படி செய்யக்கூடாது? இன்று ‘புவிசார்குறியீடு’ (Geographical Indication) பெற்ற பொருட்கள் உலகளவில் பெரும்மதிப்பு பெறுகின்றன.

ஒருசிறு கிராமத்தின் கைவினைப்பொருளை உலகத்தரம் வாய்ந்த சந்தைப்படுத்தல் (Marketing) மூலம் உலகத்தையே வியக்க வைப்பதே உண்மையான கல்வி. ஜே.சி. குமரப்பா போன்ற பொருளியல் அறிஞர்கள் முன்வைத்த ‘நிலைத்தப் பொருளாதாரம்’ என்பது இதுதான். நம் கல்வி என்பது நம்மை அடிமையாக்குவதற்குப் பதில்,நம் மண்ணின் எஜமானர்களாக மாற்ற வேண்டும்.

உலகளாவிய சிந்தனை – உள்ளூர் செயல்பாடு: கற்கை நன்றே!

“உள்ளூரில் இருந்தால் உலகம் தெரியாமல் போய்விடுமே? நாம் கற்கவேண்டாமா?” என்ற கேள்வி எழலாம். இது மிகவும் தட்டையான, மேலோட்டமான புரிதல். நாம்சொல்வது கல்வியைத் துறப்பதல்ல; கல்வியை ஆயுதமாக்கி நம்மண்ணை உலகத் தரத்திற்கு உயர்த்துவது.

நன்றாகக் கற்க வேண்டும், ஆனால், அந்தக்கற்றல் என்பது உங்களை வெளியேற்றுவதற்கான ‘விசா’ (Visa)  ஆக இருக்கக் கூடாது; உங்கள் ஊரின் வளங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லும் ‘பாலமாக’இருக்க வேண்டும். அதற்கு அரசியல் கல்வி மிக மிக முக்கியம். அதுதான் உலகை  அதன் உண்மைத்தன்மையோடு ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும்.

கல்வியின் நோக்கம் ‘தகுதி’ அல்ல, ‘திறன்’: காலனியாதிக்கக் கல்வி உங்களைஒரு நிறுவனத்திற்கு ‘தகுதியானவராக’ (Qualified) மாற்றுகிறது. ஆனால் உண்மையானக ல்வி உங்களை எதையும்உருவாக்கும் ‘திறன்’ (Skilled) கொண்டவராக மாற்றும்.

· நீங்கள்கற்ற தொழில்நுட்பம் உங்கள்ஊர் ஏரியைத் தூர்வாரப்பயன்பட வேண்டும்.

· நீங்கள்கற்ற மேலாண்மை உங்கள்ஊர் விவசாயிகளின் விளை பொருளுக்குச்சரியான விலை பெற்றுத்தரப் பயன்பட வேண்டும். அப்போதுதான் உலகம் உங்களைத்திரும்பிப் பார்க்கும்.

தமிழ்நாட்டின் சவால்:

தமிழ் இளைஞர்கள் வெளியேறுவதை நிறுத்தவில்லை என்றால், நம் நிலம் நமக்கானதாக இருக்காது. பிற மாநிலத்தவர் வருகை என்பது உழைப்பு சார்ந்த தேவை என்பதைத்தாண்டி, ஒரு இனத்தின் வாழ்வாதார உரிமை சார்ந்தசிக்கலாக மாறும். நம் இளைஞர்கள் அந்நியநாட்டில் ‘இரண்டாம் தரக் குடிமக்களாக’வாழ, நம் நிலத்தில் நாம் ‘சிறுபான்மையினராக’ மாறும்அபாயம் உள்ளது.

கல்வி என்பது ஒருவனைத்தன் வேர்களிலிருந்து பிரிக்கும்கோடரி அல்ல; அதுவேர்களுக்கு நீர் பாய்ச்சும் கலம். உலகளாவிய அறிவைத்தேடுவோம், அதை நம்உள்ளூர் அழகியலை மீட்டெடுக்கப் பயன்படுத்துவோம். நம் ஊரைஉலகம் தேடி வரும்படிச் செய்வதே ஒரு தமிழனின் உண்மையான வெற்றி! வாழ்க்கை என்பது ஓடிமுடிப்பதற்கான பந்தயமல்ல; அது ரசித்துநடப்பதற்கான பாதை. உயிரைக் காவு வாங்கும் நுகர்வுக்கலாச்சாரத்தையும், கார்ப்பரேட் அழுத்தத்தையும் கேள்விக் கேட்பதன் மூலம் இளையதலைமுறைக்கு நன்மை செய்வோம். நிம்மதி இல்லாத செல்வம், செல்லாத காசுக்குச் சமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *