மௌனமாய் ஒரு பயணம்!

  • By Magazine
  • |

மகேஷ் பாலகிருஷ்ணன்

ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவைப் பார்த்துக் கோபமாகத் திரும்பினார் தந்தை. “உன்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுக்குள்ள எனக்கு உயிரே போகுது!” என்றார் எரிச்சலுடன். வள்ளியம்மா பதில் சொல்லவில்லை. அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள். அதுதான் அவளது முதல் ஊமைப் பயணம்.

வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. அடுப்பங்கரையில் அப்பத்தா தம்பிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். வள்ளியம்மா தட்டை எடுத்தபோது, “தம்பி சாப்பிட்டு முடியட்டும், அப்புறமா சாப்பிடு!” என்றாள் அப்பத்தா. ஆண் பிள்ளைதான் வாரிசு என்ற அப்பத்தாவின் அதிகாரத்திற்கு முன்னால், இப்போதும் பதில் ஏதும் சொல்லவில்லை வள்ளியம்மா. அவளது பசி மௌனமாகத் தூங்கியது.

பள்ளிக்கூடம் போகும் வழியில் சக மாணவர்களின் கேலிப் பேச்சுக்கள் காதைத் துளைத்தன. “இவளுக ரெண்டு பேரும் படிச்சுதான் நாட்டைக் காப்பாத்தப் போறாளுக!” என்று ஏளனம் செய்தபோது, தலைகுனிந்து நடந்தாளே தவிர, பதில் ஏதும் சொல்லவில்லை வள்ளியம்மா.

வருடங்கள் ஓடின. வள்ளியம்மா பட்டணத்தில் மேற்படிப்பு படிக்கத் தயாரானாள். ஊர் பெரியவர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர். “பட்டணத்து பசங்க மோசம்மா… காலம் கெட்டுக் கிடக்கு. கல்யாணத்தைச் செய்யாம இவ்வளவு தூரம் போய் படிக்கணுமா?” என்று கேட்டார்கள். இப்போதும் பதில் சொல்லவில்லை வள்ளியம்மா. அவளது மௌனம் ரயிலேறிப் பட்டணம் சென்றது.

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது பெரியப்பா கேட்டார், “உன் கூட இருந்தவளுக்கெல்லாம் ரெண்டு பிள்ளைகளுக்கு தாயாகிட்டாங்க. நீ என்ன இன்னமும் புக்கும் கையுமா அலையுற?” அதற்கும் வள்ளியம்மாவிடம் பதில் இல்லை.

நிச்சயதார்த்தத்தின் போது மாமியார் கறாராகச் சொன்னார், “படிச்ச புள்ள வேணும்னுதான் பார்த்தோம். ஆனா எங்க குடும்ப கௌரவத்துக்கு வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டோம்.” அந்த நிபந்தனைக்கும் பதில் ஏதும் சொல்லவில்லை வள்ளியம்மா. திருமணத்திற்குப் பின், “வாத்திச்சி வேலைதானே… போகட்டுமே. நாலணாவானாலும் அரசாங்கச் சம்பளம் இல்லையா?” என்ற மாமனாரின் பேச்சுக்கும் அவள் அமைதியையே பதிலாகத் தந்தாள்.

சமூகமும், குடும்பமும் அவளைப் பெண் என்ற பிம்பத்திற்குள் அடைக்க முயன்ற போதெல்லாம், அவள் மௌனத்தையே ஆயுதமாக ஏந்தினாள். அவளது அமைதியைக் கண்டவர்கள் அவளுக்குச் சுயமரியாதை இல்லை என்று எண்ணினார்கள்.

ஆனால், ஒரு நாள் அந்தப் பெரிய செய்தி ஊருக்குள் வந்தது.

“உன் மகள் கல்வி அதிகாரி ஆகிட்டாளாமே… புள்ள குட்டிகளை ஒழுங்கா பார்த்துக்கிறாளா?” என்று யாரோ கேட்டபோது, வள்ளியம்மா அங்கு இல்லை. அவள் தனது உயரிய அலுவலக இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

முதன்முதலில் பள்ளிக்குச் சென்றபோது தந்தை கேட்ட எரிச்சலான கேள்வி முதல், மாமனாரின் கணக்கு வரை எதற்கும் வார்த்தைகளால் பதில் சொல்லாத வள்ளியம்மாவின் அந்த ‘மௌனபயணம்’ அதன் இலக்கை அடைந்திருந்தது.

மாநில உயர்கல்வி அதிகாரியாகப் பொறுப்பேற்ற வள்ளியம்மா, தனது முதல் கையெழுத்தைப் போட்டாள். அது “இலவச அரசுப் பெண் கலைக் கல்லூரிகளுக்கான அனுமதி ஆணை!” அவள் பேசிய மௌனங்கள் அனைத்தும் அந்த ஒற்றைக் கையெழுத்தில் பெரும் முழக்கமாய் ஒலித்தன. மௌனமாய் சாதித்த அந்த முதல் தலைமுறைப் பட்டதாரிப் பெண், தன்னை ஏளனம் செய்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அந்தப் பேனாவின் முனையால் பதில் சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *