விளம்பரம்

விளம்பரம்

  • By Magazine
  • |

– கிருஷ்ணகோபால்

அவன்   கருப்பு கலர் கால் குழாய் அணிந்துக் கொண்டு  தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெள்ளை நிறமாகத் தோன்றும் இளம் மஞ்சள் நிற பாலிஸ்டர் சர்ட்டுமாக ஒரு வக்கீலின் தோற்றத்தோடும்; அரசியல் கட்சியின் இளம் பிரமுகர் ஒருவரைபோலும்   பேருந்து நிலைய சுரங்க வாசலின்  வலது ஓரமாக  நின்றுக் கொண்டிருப்பதைப் பார்பவர்களுக்கு கல்லூரி விட்டு வரும் மாணவிகளை சைட் அடிப்பதற்காக  நிற்பதாகத்தான் தோன்றும் .

பள்ளி மாணவ மாணவிகள் கும்பலாக பேருந்து நிலையத்துக்குள் நுழையும்  சுரங்கப் பாதை அருகே இருந்த ஒரு பெட்டிக்  கடையில் ஒரு’ டீ’ சொல்லிவிட்டு குறுக்கும் நெடுக்குமாக ஹார்ன் அடித்த படி ஒழுங்கற்று நகரும் சிற்றுந்துகள்  மற்றும் அரசு பேருந்துகளை வேடிக்கைப் பார்த்தப்படி நின்றிருந்தான்.

கையில் ஆயிரம் எண்ணிக்கையுள்ள  ஜவுளிக்கடை விளம்பர நோட்டீஸ் இருந்தது.இதனை முழுவதும் பேருந்து நிறுத்தத்திற்குள் நுழைந்து வெளியேறும் ஆண்கள் மற்றும் பெண்கள் கையில் கொடுத்து முடிக்க வேண்டும் என்பதுதான் அவனது திட்டம். ஜவுளிக்கடை விளம்பரம் அடங்கிய  ரோஸ் கலர் பெரிய கம்பு பையில்  நோட்டிசை எடுத்து வந்திருந்தான். அதில் பாதியை  கையில் எடுத்துக் கொண்டான். மீதியை டீக்கடையில் கொடுத்து வைத்திருந்தான். இதை விறுவிறுவென ஒருமணி நேரத்திற்குள்ளாக விநியோகித்து முடிக்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.

பக்கத்தில் டீக் குடித்துக் கொண்டிருந்தவனிடம் மணி என்னவென்றுக் கேட்டான்.. நான்கு  மணி ஆக பத்து நிமிடம் இருப்பதாகச் சொன்னான்.. பிறகு டீக்கு சொல்லிவிட்டு அரக்கப்பரக்க பார்த்துக் கொண்டிருந்தான்.

கல்லூரி விட இன்னும் அரைமணி நேரமிருக்கிறது என நினைத்தபடியே நின்றிருந்தவன் டீ க்கு வந்துச் சேர்ந்ததும் நிதானமாக நடந்துச் சென்று பயணிகள் இருக்கை ஒன்றில்  சென்று அமர்ந்து ஆற அமர ரசித்து டீக் குடிக்க ஆரம்பித்தான். இரண்டு மடக்கு தான் குடித்திருப்பான். அதனிடையில்  கல்லூரி மாணவியர்கள் கண்ணில் தட்டுப் பட ஆரம்பித்தனர்.

அவனுடைய இலக்கு என்பதே பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும்  வேலையிலிருந்து  திரும்புவர்களும் தான் தன் பார்வையில் தெரியும் ஒருவன் டீ யை ஊதி ஊதி வேகமாகக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் டீயை இவ்வளவு வேகமாக குடிப்பதை பார்த்ததும் இவன் எரிச்சலடைந்தான் .

இவன் பார்வையில் தெரிந்த  ஒன்றிரெண்டு மாணவியர்கள் கடந்துப் போனப் பிறகு இப்போது கும்பலாக மாணவியர்கள் பேசியும் சிரித்தும் அவன் முன்னே கடந்துச் சென்றார்கள். அதுவரைக்கும் இயல்பாக டீக்குடித்துக் கொண்டிருந்தவனின் வேகம் கூடியது.அவன் எழும்பி நின்று ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான் .டீக்கடை நோக்கி நடந்துக் கொண்டே டீக் குடித்துச் சென்றான்.

 சற்று நேரத்துக்கு முன்னே எதிரே வேகமாக டீக்குடித்துக் கொண்டிருந்தவனை பார்த்து எரிச்சலடைந்தவன் இப்போது  தன்னைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டான்… பொது இடத்தில் டீக்குடித்துக் கொள்பவர்கள் ஏதேனும் நெருக்கடியில்தான் இருப்பார்கள்  போலும்..

சரியான இரைகள் இவர்கள்தான் .ஏன் இன்றுப் பதிவில்லாத முன்வரவு.அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.

‘அடடே இண்ணைக்கு என்ன ஆச்சி எல்லாரும் சீக்கிரமா வர ஆரம்பிச்சிட்டாங்களே…’ என நினைத்துக் கொண்டு களத்தில் குதிக்க தயாரானான்.

மழைவருவதற்கான அறிகுறிகள் இருப்பதால் முன்கூட்டியே கல்லூரி விட்டிருப்பார்களாக இருக்கலாம்.

டீக் கிளாசை வைக்கும் போதுதான் மாலை இதழ்  ஒன்றில்  தொங்கிக் கிடந்த  முக்கியச் செய்தி அறிவிப்பில் ‘பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இன்றும் நாளையும் கடுமழை இருக்கும் என்ற செய்தியை வாசித்தான்.

சடாரென நெஞ்சில் இடி இறங்கியது. பகல் முழுவதும் வெட்டிப் பிளந்த சூடு தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கிய போதும் ஏனோ அவனுக்கு நேற்று மாதிரியான உற்சாகம் இன்று இல்லை.தினமும் ஒரே மாதிரியான வேலையைச் செய்வதால் கூட அலுப்புத் தட்டி உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்..பேருந்து நிலையத்தில் தெரிந்த  சாயங்கால வானத்தின் வடகிழக்கில் வானவில் வளைந்துக் கிடந்தது.எங்கோ மழை பெய்கிறது எனப் புரிந்துக் கொண்டான்.

அவசரம் அவசரமாக வருகிறவர்களிடமும் போகிறவர்களிடமும் நோட்டீசை கொடுக்க ஆரம்பித்தான். ஒரு கையில் செல்போன் பேசிக் கொண்டு வருகிறவர்கள் மறுகையால் வாங்கி  அது என்னவென்று பார்க்காமல்  சற்று தள்ளிச் சென்று கசக்கி தரையில் போட்டு விட்டு கடந்துச் சென்றார்கள்.சிலர்  வாங்காமல் விலகிச் சென்றனர்.சில வாங்கிய வேகத்திலேயே அவன் முன்னே அப்படியேப்  போட்டுவிட்டுச் சென்றனர்.சிலர் மட்டுமே வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டனர்.

இதையெல்லாம் அவன் பொருட்படுத்துவதில்லை .நோட்டீசு அவன் கையை விட்டுப் போக வேண்டும் அவ்வளவுதான்…! அதன் பிறகு அதற்கு என்ன நடந்தாலும் சரி…பெரும்பாலும் அவன் நின்ற இடத்திலே நோட்டீஸ் குப்பைப் போல் குவிந்துக் கிடக்கும்.நாளை வந்தால் இதில் எந்த சுவடும் தெரியாது.நகராட்சி தூய்மை பணியாளர்கள் வாரியெடுத்து குப்பை வண்டியில் போட்டு வலம்புரி குப்பை கிடங்கில் கொண்டு தட்டியிருப்பார்கள்.

 தாயும் மகளும் நடந்துச் செல்லும் போது மகளிடம் நோட்டீஸை நீட்டியவனிடம் அதை வாங்காமல் வருவதைப் பார்த்து  மறுபக்கம் சென்ற தாய் சொல்வாள் “ வாங்குட்டி … கெழவி  சமோசாவா ஒழுங்காக  மடக்கி தரல.. சமோசா மடக்கதுக்கு ஆவும்”என்றதும் மறுபடியும் திரும்பிப் போய் அவனிடம் நோட்டீசை மகள் வாங்கி வந்தாள். இப்படி விளம்பர நோட்டீஸ் எதற்கெல்லாமோ பயன்பட்டது.

அவன் இந்த சிறுநகரத்திற்கு வந்து இரண்டு மாதமாகிறது.புதிய வேலை ஒன்று கிடைப்பது வரையிலும் விளம்பர நோட்டீஸ் வேலைக்கு தற்காலிகமாக வந்து சேர்ந்தவனுக்கு தினமும் இதுவே வேலையாகிப் போனது. உள்ளூர் காரங்களுக்கு இருக்கும் தயக்கம் இவனுக்கு தேவையில்லை என்பதால் பெரும்பாலும்  ஏதாவது டெஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை, மொபைல் போன் கடை  திறப்பு விழா, ,அரசியல் நிகழ்ச்சி என எல்லா விளம்பர நோட்டீஸ் கொடுப்பவர்களும்  இவனை நோக்கியே வந்தார்கள்… வேலைக்கு குறைவில்லை.மிஞ்சிப் போனால் சாயங்காலம் மூன்று மணி நேரம் மட்டுமே வேலை. ஆனால் சம்பளம்தான் குறைவு .

காலைநேரங்களில் வேலைக்குப் போற அவசரத்தில் எல்லோரும் இருப்பதால் நோட்டீசை வாங்க நேரமின்றி வேகமாகச் செல்வதால் அவனுடைய வேலை தோல்வியடைந்திருந்தது….

யாரிடம் எந்த நோட்டீசை கொடுக்கணும் யாரிடம் எந்த நோட்டீசைக் கொடுக்கக் கூடாது என்றத் தெளிவு அவனுக்கு பிடிபடவில்லை.

ஊரிலிருந்து பேன்ட் சர்ட்டோடு வந்தவன்.உதிரி நேரங்களில் நகரத்து வீதியிலும் பேருந்து நிலையத்தினுள்ளும் சகவரம் செய்யப்படாத முகத்தோடும் அழுக்கடைந்த சாரம் சட்டையோடுதான் அலைந்து திரிவான்.

ஒருமுறை இதே கோலத்தோடு கையிலிருந்த நோட்டீசை எல்லாம் கொடுத்து விட்டு தங்குமிடம்  திரும்பும் போது ஒரு பேருந்து முன் போலீஸ்காரர்கள் சிலர் நின்றிருந்தனர். ஒரு பெண்ணிடம் செயின் பறிப்புச் செய்து விட்டு தப்பியோட எத்தனித்த பெண்கள் இருவரை பொதுமக்களான பேருந்து பயணிகள்  பிடித்து போலீசிடம் ஒப்படைந்திருந்தனர். அங்கு என்ன நடக்கிறது எனப் பார்ப்பதற்காக தலை நீட்டியவனை அவன் தாடியோடு இருந்தக் கோலம் பார்த்து  பெண்களோடு இவனையும் ஜீப்பில் பிடித்துப் போட்டு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் கொண்டுச் சென்று நையப் புடைத்தனர். பிறகு அவன் தங்கியிருக்கும் உரிமையாளக்குச் தகவல் கொடுக்கப்பட்டு பிறகு ஜாமினில்  வெளியே வந்தான்

அதன் பிறகு பேருந்து நிலையத்திற்குள் வரும் போது நேர்த்தியாக முகம் ஷேவிங் செய்யப்பட்டு   பேன்ட் சர்ட் அணிந்துதான் வருவான்.

இன்னும் சிறிது நேரத்தில் மழைத்துளி விழ ஆரம்பித்து பெருமழைப் பெய்யப் போகிறது எனத் தெரிந்தபடியால் நோட்டீசை வேகமாகக் கொடுக்க ஆரம்பித்தான்….மழைத்துளி விழ ஆரம்பித்து மழைப் பெய்து ஓய ஒரு மணிநேரமாவது ஆகும்.நோட்டீசை கொடுக்காமல் எப்படி இன்றைய வரும்படிக் கிடைக்கும்..டாஸ்மாக் மூட பத்துமணி ஆகுமென்றாலும் முன்கூட்டியே சென்றால் நிதானமாக உள்ளே இறக்கலாம் அல்லவா..

 வழக்கமாக வரும் போலீஸ் வேன் ஒன்று பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. சாயங்கால வேளையில்  மாணவிகளை கேலிப்பேசி வம்பிழுக்கும் இளைஞர்களை எச்சரிக்கும்படியாகவே போலீஸ்காரர்கள் பேருந்து நிலையத்தை சுற்றி வருவார்கள் என்றாலும் பெரும்பாலும் பிச்சைக்காரர்களுக்கிடையே நடக்கும் சண்டையை சமரசம் செய்து விட்டுச் திரும்புவது தான் வாடிக்கையாக இருந்து வருவதை அவன் கவனித்தான். இப்போதெல்லாம் வேடிக்கைப் பார்ப்பதற்காக கூட போலீசின் நடவடிக்கைகளை  எட்டிப் பார்ப்பதில்லை

சிலநாள் அதிகார கிறுக்கு தலைக்கேறிய போலீஸ்காரர்களில் சிலர் நேர்த்தியற்று நெடுநேரம் பேருந்துக்கு காத்திருப்பவனை அணுகி விசாரணைச் செய்து   சென்னி வாக்கில் ஒன்று போட்டு அனுப்பி விட்டு கல்லூரி மாணவிகளின் வருகைக் குறையும் போது போலீஸ் வேனில் ஏறி செல்வார்கள்…இப்படிப்பட்ட வேளைகளில் வேடிக்கை பார்க்க தலையை நுழைக்காமல்   தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு நிற்பான். அப்போதெல்லாம் அஜித்குமாரின் நினைவே முன் வந்து நிற்கும்.

நோட்டீஸ் கொடுக்கும் வேகத்தை முன்பை விடவும் வேகப்படுத்தினான். நிரம்பி நிற்கும் பேருந்துகளில் ஏறி உட்கார்ந்திருந்தவர்கள கையில் திணித்தான். சும்மா தானே கிடைக்கிறது என எல்லோரும் வாங்கி வைத்து கொண்டனர். ஆனாலும் நோட்டீஸ் குறைந்தபாடில்லை. மழைத் துளி போட ஆரம்பித்து மழையின் வேகம் கூடியது .அவன் மழையில் நனைந்தபடி பேருந்து நிலையத்தின் குறுக்கே கடந்துச் சென்று மக்கள்  குழுமி நிற்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தான்.. மழை ஓங்கிப் பெய்யத் தொடங்கியப் பிறகு  பேருந்து நிலையத்தின் உள்ளே மக்கள் வரத்துப் போக்குக் குறைந்தது. குடைப்பிடித்துச் சிலர் குறுக்கு மறுக்கேச்  சென்றனர். பேருந்து நிலையத்தில்  மக்கள் ஒதுங்கி நிற்க வேண்டி நீண்டுச் செல்லும் தகரக்கூரையில் விழுந்த பெரும்மழை  இரைச்சலாக ஒருவர்கொருவர் பேசுவது கேட்காதபடி பொத்து பொத்தென்று விழுந்தது. குழுமி நிற்கும் மக்களிடமிருந்து வெளிவரும் இரைச்சலை  ஊடுருவி அவன்   நோட்டீஸ் கொடுக்க ஆரம்பித்தான் .அனேகமாக எல்லோரும் வாங்கினர்.

பேருந்து நிலையம் கொடுத்த மங்கிய மஞ்சள் நிற வெளிச்சத்தில் என்ன வென்றுப் பார்த்தனர். அவர்களுக்கு வெளியே அத்து மீறிச் செல்லமுடியாததால் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கு  நோட்டீசை பார்த்தபடி   நின்றுக் கொண்டிருந்தனர். இந்த கலவரத்திற்கிடையில் அவன் நோட்டீஸ் கொடுக்கும் போது அவனைக் கடந்துச் செல்லும் பிச்சைக்கார சிறுவன் அவனது பிச்சைப்பாத்திரத்தில் முருகன்படம் வைத்துப் பிச்சை எடுத்துச் சென்றதைக் கவனித்தான். அவனுடைய பிச்சை பாத்திரத்தில் சில்லறைகள் வந்து விழுந்து நிறைந்தது. அவன் நோட்டீஸ் கொடுத்து விட்டு மறுகரையிலிருந்து திரும்பும் போது பிச்சைக்காரச் சிறுவன் தன் கோலத்தை சற்று மாற்றியமைத்து பிச்சைப் பாத்திரத்தில் இயேசுநாதர் இரத்தம் வடிந்த முகத்தோடு சிலுவையை சுமந்துச் செல்லும் படத்தை சுமந்து பிச்சை எடுத்தான் .

அதன்பிறகு  சற்று நேரம் கழித்து  அந்த சிறுவனை கூர்ந்துப் பார்க்க ஆரம்பித்தப் போது .பிறையினுள் 786 எண் கொண்ட சிறிய படத்தை வைத்து பிச்சை எடுத்தான்.. இப்போது இவ்வளவு வளர்ந்த பின்னும் இரண்டு மாதங்களாகியும் தொழில்  நுட்பம் புதிய வெளிச்சம் இந்த பிச்சை எடுக்கும் சிறுவனிடமிருந்து  கிடைத்தது. இரண்டு மாதகாலமும் ஒரே பேருந்து நிலையம் ஒரே போன்ற மக்கள் ஏன் என்ற கேள்வியை எழுப்பியவாறு ஸ்டெல்லா டெக்ஸ்டைல்ஸ் விளம்பர நோட்டீசைக் கொண்டு அருகில்   தேவாலய திருவிழா நடக்கும் ஊருக்குச் செல்லும் பேருந்தை தேடினான்..மழை பொடித் துறல் போட்டது. இன்னும் சற்று நேரத்தில் மழை விட்டுவிடும்.. மீதமிருந்த நோட்டீசை டீக்கடையிலிருந்து வாங்கிக் கொண்டவன் குழந்த ஏசு தேவாலயம் வழிச் செல்லும் பேருந்தில் ஸ்டெல்லா டெக்ஸ்டைல்ஸ் விளம்பர நோட்டீசை எடுத்துக் கொண்டு  நம்பிக்கையோடு ஏறி உட்கார்ந்தவன்; வலது கையில் கிடந்த செம்பு வளையத்தை மெதுவாக கழற்றி பேன்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக்  கொண்டு பேருந்தின் இருக்கையில் தன்னை வசதியாக சாய்த்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *