அலைமோதும் நினைவுகள்

  • By Magazine
  • |

S. அபுல் கலாம் ஆசாத்.

நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய  வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும்.

வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை  உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம்  பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக வைத்தேன் (மனைவிக்கு சிறு உதவியாக இருக்கும் என நினைத்து செய்வது).

வேளா மீனை பொறுத்தவரையில் அதை எப்படி கையாண்டாலும் அந்த நாற்றம் கைகளில் இருந்து சீக்கிரம் விட்டு போகாது.

நமது சிறு வயதுகளில் (அதாவது 5 அல்லது 6 ஆம் வகுப்பில் என நினைக்கிறேன்) குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட மீன்கள் அதிகமாக கிடைக்கும். அதிகமாக கிடைத்தால் விலை குறைந்து மலிவாக கிடைக்கும். இப்போது போன்று மீனவர்கள் ஆழ் கடல் சென்று அப்போது மீன் பிடிப்பதில்லை. சிறு வள்ளங்களில் சென்று மீன் பிடித்து வருவார்கள். அதை அன்றே விற்று  விடுவார்கள்.அன்று இன்றுபோல் பனிக்கட்டிகளில் வைத்து நீண்ட காலமாக பாதுகாக்கும் தொழில் நுட்பம் நமது பகுதியில் இல்லாமல் இருந்த காலம். அப்படி பிடித்த மீன்களை பாதுகாக்க வேண்டும் என்றால் கருவாடாகத்தான் மாற்ற வேண்டும்.

சரி.. இனி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு மாலை நேரம்.. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது உம்மாவும் குட்டிமாவும் ஒருபெரிய மீனைவெட்டுவதற்கு ஆயத்தம் ஆகி கொண்டிருந்தனர். நான் அதைப்பற்றி விசாரித்தபோது மீனவர்கள் வலையில் ஏகப்பட்ட இத்தகைய மீன்கள் பட்டதாகவும் அதில் ஒன்று குட்டியாப்பாவால் வாங்கி வரப்பட்டதாகவும் அறிந்தேன்.

வாப்பும்மாவின் வழிகாட்டுதலின் படி அந்த பெரிய மீனை அவர்கள் வெட்டுவதை பார்த்து கொண்டு  இருந்தேன். பல துண்டுகளை  பொரிப்பதற்கும் சிலதை குழம்பு வைப்பதற்கான வேலைகளும் நடந்தது. தலையும் முள்ளையும் தனியாக குழம்பு வைத்தனர்.

அன்று இரவு உணவுடன் மீன் துண்டுகள் அதிகமாக கிடைத்தது. அதன்பிறகு அந்த முள்ளும் தலையும் … அந்த சட்டியை சுற்றி இருந்து அந்த முள்ளில் ஒட்டி இருந்த அதன் சதை பகுதி மற்றும் தலைப்பகுதியை ரசித்து ருசித்து உண்டோம். இடைக்கிடையே வாப்பும்மா முள்ளு… பார்த்து சாப்பிடு என்ற கரிசன வார்தைகள் வேறு..

அந்த கூட்டு குடும்பத்தில் கிடைத்த மகிழ்வு இப்போது இல்லை.

அன்று ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு விதமான மசாலா கலவை. அதுவும் அம்மியில் தான் அரைப்பார்கள். கடலை அல்லது தேங்காய் எண்ணெயில் தான் சமையலே.. அதனால்தான் அத்தகைய சுவையை இன்றும் நாம் தேடுகிறோம். ஓரளவு அந்த சுவை அடங்கிய உணவு கிடைத்தால் சமைத்தவரை பாராட்டுகிறோம்.

மற்றொரு காலகட்டத்தில் சில நாட்கள் தொடர்ச்சியாக வாளை மீன்கள், மற்றும் சாளை ( பேய்சாளை) மீன்கள் போன்றவை மலிவாக கிடைக்கும். அந்த மீன்கள் கிடைக்கும் காலகட்டத்தில் அதற்கு ஏற்றார்போல் மசாலா கலவை சேர்த்து குழம்பு வைப்பார்கள்.

பேய்சாளை கிடைக்கும் காலகட்டத்தில்  பொரித்த மீன் நிறைய கிடைக்கும். அதுவும் மேச்சட்டி வைப்பார்கள். அதாவது மசாலாவுடன் மீனை மண் சட்டியில் வைத்து வேக வைப்பதுடன் மேல் மூடியின் மீதும் நெருப்பு துண்டுகளை வைத்து வேக வைப்பார்கள். அது பொறு பொறு என்று பொரிந்த நிலையில் சுவையாக இருக்கும். அதைப்போன்று சூரை மீன். இரண்டு மூன்று நாட்களுக்கு சேர்த்து குழம்பு செய்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சட்டி வீதம் அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றில் ( மூன்று கயிற்றை நீளவாக்கில் மேலிருந்து கீழாக கட்டி வைத்திருப்பார்கள். கீழ் முடிச்சின் மேல் ஒவ்வொரு சட்டி யாக  அடுக்குவார்கள். அதனை உறி என்று அழைப்பர்) ஒன்றன்மீது ஒன்றாக வைத்து விடுவார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டி …

அதுவும் கடைசி நாள். கடைசி சட்டி… குழம்பு.

அதன் சுவை.. இப்போது நினைத்தாலும் நாவில் எச்சி ஊறுகிறது..

:::::::;::::::::::::::::::::::::::::::::::::::::                                                                                                                  ..தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *