டாக்டர் த. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு மலரைப் பெற்றுக்கொண்டார்
சமூகத்தின் கண்களாகச் செயல்படும் பத்திரிகையாளர்கள், தங்களின் பணி ஓய்வுக்காலத்திலும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நிறுவப்பட்ட ‘தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின்’ நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவிற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. பி.ஆர். சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி, சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, சங்கத்தின் துணைத் தலைவர் திரு. பி. நெல்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் கடந்த கால சாதனைகள் குறித்த அறிக்கையைச் செயலாளர் திரு. எஸ். பழனியாபிள்ளை வாசித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சங்கத்தின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ‘சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டது. சங்கத்தின் நிறுவனர் திரு. ஜி.கே. ஸ்டாலின் முன்னிலை வகித்து மலரை வெளியிட, அதன் முதல் பிரதியை தக்கலைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், வர்ம அறிவியல் மறுமலர்ச்சியின் தந்தையுமான டாக்டர் த.இராஜேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மலர் வெளியீட்டிற்குப் பின் வாழ்த்துரை வழங்கிய டாக்டர் டி. ராஜேந்திரன், பத்திரிகையாளர்கள் சமூக மாற்றத்திற்காக ஆற்றிய பணிகளைப் போற்றியதோடு, ஓய்வூதியப் பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இத்தகைய சங்கங்களின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் பல்வேறு கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு க.அப்பாவு அவர்களுக்குச் சங்கத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கச் செயலாளர் திரு. எஸ். பழனியாபிள்ளை அவர்கள், சட்டப்பேரவைத் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
பத்திரிகையாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் விதமாக, சங்கத் தலைவர் திரு. பி.ஆர். சுப்பிரமணி அவர்களின் ஏற்பாட்டில், சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரத்த அழுத்தத்தின் அளவைக் கண்டறியும் (Blood Pressure Monitor) மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாகச் சங்கப் பொருளாளர் திரு. டி.எஸ். ஞானக்குமார் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
Leave a Reply