பூ.வ.தமிழ்க்கனல்
இந்தியவரைபடத்தில் ஒருபுள்ளிபோலத் தென்கோடியில்தீவாகக் காட்சியளிக்கும் குட்டிநாடு, இலங்கை. இதன் மொத்தப் பரப்பளவு 62,610.2 சதுரகிலோமீட்டர் மட்டுமே. தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 சதுரகிலோமீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் பாதிதான் இலங்கை. இக்குட்டி நாட்டில்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிக்கல்கள் காலந்தோறும் வரிசை கட்டி நிற்கின்றன. ஈழத் தமிழர்களை அரசியல் சார்ந்தும் ஆயுதவழியில் உளவியல் தொல்லைகள் கொடுத்தும் ஒடுக்கும் பணியைச் சிங்களப் பேரினவாத அரசுகள் காலந்தோறும் செய்து வருகின்றன. அந்த வகையில், அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் மூலம் ஒடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது இலங்கை அரசு.
இலங்கை வரலாற்றில்……
இலங்கையின் வரலாற்றில் தமிழர்களை ஒடுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை அறிவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தைத் தெரிந்து கொள்ளலாம். இலங்கையும் தமிழ்நாடும் ஒருகாலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்ததும் அந்நிலப்பரப்பில் வாழ்ந்த இனம் தமிழினம் என்பதும் பின்னாளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட போது, இரண்டு நிலப்பரப்புகள் தோன்றின என்பதும் வரலாறு. எனவே, தமிழர்கள் தொன்று தொட்டு இலங்கையில் வாழ்கின்றனர்.
பின்னாளில், ஒரே காலகட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததால், இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்யத் தமிழ்நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் தான் மலையகத் தமிழர்கள்.
இச் சூழலில்தான் 1948- ஆம் ஆண்டு இலங்கை விடுதலை பெற்றது. விடுதலை பெற்றதும் 1948-ஆம் ஆண்டு அமைந்த சிங்களப் பேரினவாத அரசு, இலங்கைக் குடியுரிமைச் சட்டம் என்று ஒரு சட்டத்தை இயற்றியது. இச் சட்டப்படி இலங்கை நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அவர்களின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாவிட்டாலோ அல்லது அவர்களின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்களாக இல்லையென்றாலோ அவர்கள் இலங்கைக் குடியுரிமை பெற இயலாது. இதனால் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடற்ற அகதிகளாக மாற்றப்பட்டனர்.
அடுத்ததாக 1956-ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தை இயற்றியது இலங்கை. இச்சட்டம் அதுவரை அலுவல் மொழியாக இருந்த ஆங்கிலத்தை அகற்றி விட்டு, ஆங்கிலத்திற்கு மாற்றாகச் சிங்கள மொழியை மட்டுமே அலுவல் மொழியாக மாற்றியது. இச்சட்டமானது அரசு அலுவலகங்களிலும் கல்விப் புலத்திலும் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இலங்கை அரசமைப்பின் 6- ஆவது திருத்தம் ஈழத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கை குறித்த விவாதத்தையே குற்றமாகக் கருதியது. 1983-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தனிநாடு கோரிக்கையைக் கைவிட வேண்டும் அல்லது தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்ற நிலையை உருவாக்கியது.
1979-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், விசாரணை இன்றித் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களைத் தடுத்து வைக்க தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
இப்படியாக, காலம் தோறும் தமிழர்களை அடக்கியும் ஒடுக்கியும் வந்த சிங்களப் பேரினவாதம் தற்போது ஓர் அரசியலமைப்புச் சட்ட வரைவை முன் மொழிந்துள்ளது. இது இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தந்துள்ள நிலையில், அவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து தமிழர்களுக்கு ஆதரவுக் குரல்களைத் தேடுகின்றனர். அவ்வகையில் தமிழ்நாடு முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக, தமிழ்நாடு முதல்வரே இந்திய முதன்மை அமைச்சருக்கு எழுதிய அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இலங்கையில் வாழும் தமிழர்களின் மீது அக்கறை கொண்டவர்களுக்கும் கவலைகள் எழுவதில் காரணம் இல்லாமல் இல்லை. தமிழ்நாடு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட இனப் பாகுபாடு, வன்முறை மற்றும் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர் கொண்டு வந்துள்ளனர். இதை ஓர் இனத்துக்கு எதிரான இனப் படுகொலை என வரையறுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இலங்கையின் விடுதலைக்குப் பின், ஒற்றைச் சிங்களப் பேரினவாத ஆட்சியை நோக்கியே அனைத்து அரசுகளும் நகர்ந்தன. இலங்கையில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் நாடாளுமன்றத்தில் சிங்களர்களின் 63 தொகுதிகள் 77 ஆக உயர்த்தப்பட்டன. தமிழர்களின் தொகுதிகளோ 20 இருந்து 11 ஆகக் குறைக்கப்பட்டன.
அரசுப் பதவிகளில் தமிழர்கள் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டனர். சிங்கள இராணுவத்திலும் தமிழர்களின் சேர்ப்பு மறுக்கப்பட்டது. அஞ்சல், இரயில்வே, சுங்கம் மற்றும் மருத்துவமனைகளிலும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்புகளில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி, தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் ஈழத் தந்தை செல்வா தலைமையில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் தமிழர்கள் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அறவழிப் போராட்டங்கள் எப்பயனையும் தராத சூழலில்தான், 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழரசுக் கட்சி கூடி, தனித் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்தது. இக்கோரிக்கையைத் தடுப்பதற்காகவும் அறவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது சிங்களப் பேரினவாதஅரசு.
1981-இல் யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது ஈழத் தமிழர் சிக்கலில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981-ஆம் ஆண்டு, சூன் 1-ஆம் நாள் இரவு சிங்கள வன்முறையாளர்களால் நடந்தேறியது. 1981, மே யாழ்ப்பாண நகரிலுள்ள முக்கியச் சந்தை,வணிக நிறுவனங்கள்,‘ஈழ நாடு” இதழின் அலுவலகம், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.
இந்நிகழ்வு 20-ஆம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒருமிகப் பெரிய வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலக்கட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஏறத்தாழ 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந் நூலக எரிப்பு வன்முறைக் கும்பலில் இலங்கை அமைச்சர்கள் காமினி திசநாயகா, சிறில்மேத்தியூ உட்பட வேறு பல சிங்களத் தலைவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூலகம் எரிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் 1982-இல் யாழ் நூலக வாரம் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழச் சமூகம் முன்னெடுத்தது. இதன் மூலம் மக்களிடமிருந்து ஏராளமான நூல்கள் வாங்கப்பட்டன. கட்டடத்தைச் சீரமைக்கும் வேலைகள் தொடங்கின. அதே வேளையில் தமிழருக்கு எதிரான 1983, கருப்பு சூலை வன்முறைகள் தென் இலங்கையில் தொடங்கின.
1984-இல் நூலகக் கட்டடம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ஈழம்-இலங்கைப் போரினால் கட்டிடம் எரிகணைகளாலும் துப்பாக்கிச் சூடுகளாலும் சிதிலம் அடையத் தொடங்கியது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்தது. இதனால் நூலகம் நிரந்தரமாக மூடப்பட்டது. ஓர் இனத்தைச் சட்டத்தின் மூலம் மட்டும் ஒடுக்காமல், பண்பாட்டின் அடிப்படையிலும் முடக்குவதன் மூலமும் இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது சிங்களப் பேரினவாத அரசு என்பதற்கு இது ஓர் எடுத்துகாட்டு.
1956,1977,1981,1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான இனப்படு கொலைகளும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுதலும் நிகழ்த்தப்பட்டன. 1983-ஆம் ஆண்டு விடுதலை நாள் அன்று, அன்றைய முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசியபோது, ‘இலங்கையில் நடைபெறுவது இனப் படுகொலை ஆகும். இதை இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது” என எச்சரித்தார். இந்தியாவின் முதன்மை அமைச்சரால் ‘இனப் படுகொலை”என்ற சொற்றொடர் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் அன்றைய முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி இலங்கைச் சிக்கல் குறித்துச் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டபோது, செயவர்த்தனா மனம் கொதித்துப் போய், ‘இந்திய அரசு எங்கள் மீது படை எடுக்க விரும்பினால், 24 மணிநேரத்தில் இலங்கையைக் கைப்பற்றி, என்னையும் கைது செய்யமுடியும். ஆனால், அதற்குள்ளாகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களமக்களால் அடியோடு தீர்த்துக் கட்டப்படுவார்கள்” என எச்சரித்தார்.
2009-ஆம் ஆண்டு நடந்த போரில், ஐ.நா.பேரவையால் தடை செய்யப்பட்ட கொத்துக் கொண்டுகள், நச்சுவாயுக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் மற்றும் கொடூரமான ஆயுதங்களைச் சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது. மேலும் மருத்துவமனைகள் மற்றும் சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட போரற்ற அமைதி மண்டலங்கள் ஆகியபகுதிகளில் இருந்தவர்கள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தியது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்குநாடுகள் சிங்கள அரசின் இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய போது, சீனா உதவியுடன் இலங்கை அதனை முறியடித்தது.
இவ்வாறு வரலாறு முழுக்கத் தமிழர்கள் என்ற தேசிய இனத்தை அழித்து ஒழிப்பதில் சிங்களப் பேரினவாதம் ஈடுபட்டு வருகிறது. இப்போது அதன் நீட்சியாக, அடுத்த அரசமைப்புச் சட்டவரைவை முன் மொழிந்து, தமிழர்களை அச்சுறுத்தும் வேலையைத் தொடங்கியிருக்கிறது. தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி யாதெனில், இந்தியாவும் சீனாவும் எதிரெதிர் நாடுகள். ஆனால் தமிழர்களை அழிப்பதில் ஒன்று சேர்வர்.
இந்துத்துவா பேசி, இந்துக்கள் என்னும் போர்வையில் மக்களை மயக்கும் பா.ச.கவுக்கு ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பது தெரியவில்லை. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குக் கடைசி வரை துணை நின்றது காங்கிரசு. காங்கிரசின் பரம எதிரியான பா.ச.க. ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை எந்த விதத்திலும் ஏற்கவில்லை.
தமிழரின் உரிமைகளைத் தமிழர்களேவென்றெடுக்க வேண்டும். உலகளாவிய தமிழர்களின் ஒற்றுமையும் போராட்டங்களுமே அரசுகளின் கவனத்தைத் தமிழர்களின் உரிமைகள் பக்கம் ஈர்க்கும்.
தமிழர்களே ஒன்று சேர்வோம்! போராடுவோம்! ஈழத் தமிழரின் உரிமைகளை உறுதிசெய்வோம்!!
Leave a Reply