சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர் பி. விஜயகுமார்

முஸ்லீம் கணவரது இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படமாட்டாது!

முஸ்லீம் மத வழக்கப்படி கணவர் நான்கு மனைவி வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வரைமுறை உள்ளது. இருப்பினும் தற்போது கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தில் கணவர் இரண்டாவது திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய செல்லும் போது சார்பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது. முதல் மனைவியை இங்கு கூட்டி வந்து அவர் ஒப்புதல் தந்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படும் என கணவரையும், 2-ம் மனைவியையும் திருப்பி அனுப்பி விட்டனர்.

சம்பவம் என்னவென்றால் கேரளாவில் இளைஞர் ஒருவர் ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடனும் தமது இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் பணி செய்த இடத்தில் இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஆகி அக்கணவர் அப்பெண்ணை மணந்து அத்திருமணத்தை பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்குக் கூட்டிச் சென்றார். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இத்திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

முஸ்லீம் வழக்கப்படி நான்கு மனைவி வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்றிருந்தாலும் நான்கு மனைவியரும் ஒருவருக்கொருவர் மறு திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்க வேண்டும்.

இங்கும் இதையேத்தான் சார்பதிவாளர் அலுவலகமும் அக்கணவரிடம் முறையிட்டது. முதல் மனைவிக்கு 2-ம் மனைவி குறித்த விபரம் தெரிய வேண்டும் என்றது. மேலும் முதல் மனைவி 2-வது திருமணத்தை பதிவு செய்வதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அத்திருமணம் பதிவு செய்யப்பட மாட்டாது. முதல் மனைவி 2-ம் திருமணத்திற்கு மறுப்பு தெவித்தால் கணவர் நீதிமன்றத்துக்குச் சென்று பரிகாரம் தேடிக் கொள்ளலாமேத் தவிர சார்பதிவாளர் அலுவலகத்தை 2-ம் திருமணத்தை பதிவு செய்ய வற்புறுத்த முடியாது.

Muslim women (Protection of rights on marriage) Act  – 2019 கூறுவது என்னவென்றால் “தலாக், தலாக், தலாக்” என்று ஒரே நேரத்தில் கூறி திருமணத்தை உடனடியாக கலைப்பது சட்ட விரோதம் என்கிறது.  Triple talak கூறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கலாம் என்கிறது இச்சட்டம். முத்தலாக் கூறிய கணவன் மீது மனைவி புகார் செய்தால் போலீஸ் FIR பதிவு செய்யலாம்.  இது ஜாமீனில் வர முடியாத குற்றமாகும்.

ஓஷோ தமது உரையில் இவ்வாறு கூறுகிறார். 1600 ஆண்டுகளுக்கு முன்பாக வளைகுடா நாடுகளில் தொடர் போரின் காரணமாக ஏராளமான ஆண்கள் இறந்து விட்டனர். இதன் காரணமாக ஆண்கள் எண்ணிக்கை மிகக் குறைந்தும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் அங்கு இருந்தது. ஒரு ஆணுக்கு நான்கு பெண்கள் என்ற விகிதச்சாரம் இருந்தது. ஆதலால் ஆண் ஒருவர் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்டால் மற்ற மூவர் வாழாவெட்டியாகவே இருக்க வேண்டி வந்தது. இதனால் தான் ஒரு கணவர் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முறை கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஆண்களும் பெண்களும் எல்லா மதத்திலும் சம விகிதமாக இருக்கின்றனர். ஆதலால் ஒரு கணவன் ஒரு மனைவி முறை இக்காலக்கட்டத்தில் சாத்தியமே. மேலும் இக்காலகட்டத்தில் பெண்கள் அதிகம் படித்தவர்கள். ஆணுக்கு நிகராக எல்லா விஷயங்களையும் அறிந்தவர்கள். அவர்களை ஆண்கள் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *