பழனி அரங்கசாமி
தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் சொற்கள் புகுந்தன. வடமொழியின் கலப்பு தமிழ்ப் பாடல்களில் மட்டுமன்றி உரைநடையிலும் புகுந்தது. மணிப்பிரவாளம் எனும் இந்தக் கலப்புத் தமிழும் பெருகி ஒரு கட்டத்தில் வடமொழி இன்றேல் தமிழில்லை என்று சுவாமிநாத தேசிகர் போன்ற வடமொழி வாணர்கள் பேசத் தொடங்கினர். தமிழுக்கு ஏற்பட்ட இத்தகைய இழிதகவு கண்ட மறைமலையார் தனித்தமிழ் இயக்கம் எனும் அமைப்பினைத் தோற்றுவித்து தமிழின் மறுமலர்ச்சிக்கும், இலக்கியத் தமிழின் ஏற்றத்துக்கும் அரும்பணி புரிந்தார்.
அதற்குச் சற்றும் குறையாத தமிழ்ப் பற்றினால், ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தலை தூக்கி நின்ற ஆங்கிலத்தில் புழக்கத்தினால் வழக்கு மன்றங்களிலும், அரசினர் அலுவலகங்களிலும் அருந்தமிழ் சிதைவுற்று நின்ற போது அதன் தூய்மையைக் காப்பாற்றியதோடு ஆட்சி மொழித்தமிழையும் உருவாக்கினார். வடமொழி, ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளின் நுழைவினால் அருந்தமிழ்ப் பெரு மொழிக்கு ஏற்பட்ட அவலத்தை போக்கிய இந்த இரண்டு பேரறிஞர்களும் தமிழ் வரலாற்றில் இடம் பெறத் தக்கவர்கள். ஒருவர் இலக்கியத் தமிழுக்கு ஏற்றம் தந்தவர். மற்றவர் ஆட்சித்தமிழினை அரியணையில் அமர்த்தியவர். இந்த இரண்டு பேரறிஞருள் இராமலிங்கனரின் 125- ஆவது பிறந்த நாள் அண்மையில் சென்னையில் கொண்டாடப் பெற்றது. வடமொழி இலக்கணமே தமிழின் இலக்கணம் என்கிற விதண்டாவாதத்தை புறந்தள்ளி, தமிழின் தனித்தன்மையினை நிலைநாட்டியவர் மறைமலையார். இராமலிங்கனாரோ ஆங்கிலப் பெரு வெள்ளத்தில் தமிழ் அமிழ்ந்து விடுமோ என்று அஞ்சி தமிழின் உயிர்ப்பினைக் காத்து அதன் பயன்பாட்டை எல்லா அலுவலகங்களிலும் உறுதிப்படுத்தினார். தமிழில் ஆட்சிச் சொற்கள் இல்லையெனும் குறையினையும் போக்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்த இராமலிங்கனார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளியில் பயின்று பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரு தொடக்கநிலை எழுத்தராக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் 1922- ஆம் ஆண்டு தொடங்கி சிற்சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளராகப் பதவி ஏற்றார். சட்ட திட்டங்களிலும் அலுவலகக் கோப்புகளிலும் ஆங்கிலம் பரவலாகப் புகுந்து விட்டதை உணர்ந்தார். புகுந்த மொழியின் கலப்பு அளவிழந்து போகும் போது இருந்த மொழியின் இயல்புநிலை சீர்குலைந்து காலப்போக்கில் அது மறைந்து போய் விடும் அல்லது கலப்படமொழி ஒன்று புதிதாகத் தோன்றிவிடும் என்பர் மொழி இயல் அறிஞர்கள். அத்தகு அழிவு தரும் நிலைக்கு அருந்தமிழ்ப் பெருமொழி ஆட்பட்டு விடக்கூடாதே என்னும் கவலையுற்ற இராமலிங்கனார் முடிந்தவரை அலுவலகக் கோப்புகளில் பரவலாகக் கலந்து கிடந்த ஆங்கிலம் மற்றும் வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினார். அந்த இரண்டு மொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொல் இல்லையாயின், தான் உண்டு பண்ணிய புதிய (Coinages) தமிழ் சொற்களை பயன்படுத்தினார்.
இந்தியாவை இருநூறு ஆண்டுகள் ஆளுகை புரிந்த ஆங்கிலேயர் 1974- ஆம் ஆண்டு வெளியேறினாலும், அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம் அலுவலக் கோப்புகளில் மட்டுமன்றி தற்காலத்தமிழ் இலக்கியங்களிலும், கட்டுரை, புதினம் ஆகியவற்றிலும் புழக்கத்துக்கு வந்தது மட்டுமன்றி படித்தறியாப் பாமரர்களின் பேச்சு வழக்கிலும் ஏராளமான ஆங்கிலச் சொற்கள் புகுந்து விட்டன.
விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை, முனிசிபல் கமிஷனர், பிரின்ஸ்பால், கவர்னர், டெலிபோன், போலீஸ் ஸ்டேஷன் போன்ற சொற்கள் அனைத்தும் இப்போது திருமணத் திருமடல், நகராட்சி ஆணையர், கல்லூரி முதல்வர், ஆளுநர், தொலைபேசி, காவல் நிலையம் என்று தமிழாக்கம் பெற்றதற்கெல்லாம் ஆட்சி மொழிக் காவலரே முழு முதற்காரணமாக இருந்தார்.
தமிழக இல்லங்களில் நடந்த திருமணங்கள் அனைத்தும் மேல் வருணத்தார் ஆகிய அந்தணர்களால் நடத்தப் பெற்றன. அறியாதார் முன்னிலையில் புரியாத வடமொழி பேசித் திருமணங்களை நடத்திய அந்தணர்களை அப்புறப்படுத்தி விட்டு, தெய்வத் திருமறை வழிபாடு நிகழ்த்தி மணமக்களை மங்கலநாண் அணிய செய்யும் தமிழ்த் திருமணங்களை இராமலிங்கனார் நடத்தினார். பிறரும் இத்தகைய மணவிழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமெனக் கருதி தமிழ்த் திருமணம்- விளக்கமும் செய்முறையும் என்னும் நூலினை 1973-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இப்படிக் தமிழரது சமூக வாழ்விலும் தூய தமிழின் பயன்பாட்டினைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார்.
1956-ஆம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் தமிழக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பல ஆண்டுகள் முன்னரே ஆட்சித்துறைச் சொற்களை அகரவரிசையில் தொகுத்து 1940 ஆம் ஆண்டு ஆட்சிச் சொல் அகராதி ஒன்றனை வெளியிட்டார். 1958 – ஆம் ஆண்டு தமிழக அரசு அவரை ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமித்தது. அதற்குப் பின்னரே அரசின் கல்வித்துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித்துறையிலும் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்பட்டது. கீழமை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் வரத் தொடங்கின. சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் உறுப்பினராக செயலாற்றினார். அவர் தொகுத்தளித்த ஆட்சித்துறையில் தமிழ் என்னும் நூல் இன்றைய அரசு அலுவலகங்களில் நோக்கிட்டு நூலாகப் (Reference) பயன்படுகிறது.
தொழிலாளர் சட்டத் தொகுப்பினை தமிழக அரசு கேட்டுக் கொண்டவாறு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். ஆட்சி மொழித்துறை அலுவலராகப் பணிபுரிந்த காலத்தில் சென்னையில் மட்டுமேயன்றி பல்வேறு மாவட்டத் தலைநகரங்களுக்கும் நேரடியாக சென்று அரசு அலுவலர்கட்கு தமிழில் தான் இயற்றிய புதிய கலைச்சொற்களுக்கு உரிய விளக்கம் கொடுப்பதோடன்றி தமிழில் சுற்றறிக்கை எழுதுவதற்கும் பயிற்சி கொடுத்தார்.
காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய போது அலுவல் நிமித்தம் சங்கராச்சாரியாரை மடத்திற்குச் சென்று காண வேண்டியிருந்தது. மடத்தின் சில தேவைகளை நிறைவு செய்தற்கு முன், மடத்தினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஆணையர் கூறியதும் அது பற்றிய பதிலை சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தில் கூறினார். அவருடைய உதவியாளர் ஆணையருக்கு அதனைத் தமிழில் தெரிவித்தார். மடத்திலிருந்து திரும்பும் போது அந்த உதவியாளரிடம் தமிழ் நன்றாகத் தெரிந்தும் ஏன் மடத்துத்தலைவர் வடமொழியில் பேசினார் என்று கேட்டபோது பகல் 12 மணிக்கு நித்திய கால பூஜை செய்யும் வரை பெரியவாள் நீசபாஷையில் பேசமாட்டார் என்றார் உதவியாளர். தமிழ்மொழியை நீச பாஷை என்றதும் அவரை கன்னத்தில் அறைய வேண்டும் என்கிற ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன் என்று இராமலிங்கனார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.
ஆட்சிச் சொல் காவலர் அவர்கள் 1955-ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுர ஆதினத் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அங்குள்ள மாணவர் விடுதியில் உணவு உண்ணுமிடத்தில் சைவ வெள்ளாளர், சைவ முதலியார், தேசிகர் போன்ற முற்பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தனியிடத்திலும், ஏனைய பிற்பட்டோருக்கு தனியாகவும் உணவு பரிமாற்றப்பட்டது. மேல் சாதி, கீழ்சாதி எனும் இத்தகைய பாகுபாட்டை எதிர்த்து 1956-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிற்பட்ட வகுப்பு மாணவர் உண்ணாவிரதம் இருந்தனர். ஓரிரு நாட்களில் தினப் பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்தி வெளியாகியது. மாணவர்களை அதட்டி பணிய வைப்பதற்கு மடத்துப் பெருந்தலைகள் முயன்ற போது கீ.இராமலிங்கனார் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. தமது முற்போக்கு கொள்கைக்கும், அந்தணர் வயப்பட்ட சைவமடத்து நடைமுறைக்கும் ஒத்து வராதென உணர்ந்து அந்த ஆண்டின் இறுதியில் முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். ஓரிரு ஆண்டுகள் மதுரையில் பசுமலை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு நீதிநெறி மற்றும் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். ஓய்வு பெற்ற காலத்தும் ஓயாத தமிழ்த் தொண்டாற்றிய இப்பெருமகனார் அவர்கட்கு மதுரைப் பல்கலைக்கழகம் 1975- ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வர் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது. வயது முதிர்ச்சி, உடல் தளர்வு இருந்த போதிலும், தானும் தொல்லைப்படவில்லை. பிறருக்கும் தொல்லை கொடுக்காமல் தனது 87- ஆம் வயதில் இயற்கை எய்தினார். அவரது அறிவார்ந்த தூய தமிழ்ப்பற்று நம்மை வாழ்விக்கும் என்பது உறுதி.
Leave a Reply