நா.சுயம்பு
வலிந்து வருவது புன்னகை அல்ல;
உன்னுள் வழிந்து வருவதே புன்னகை!
கனிந்து
ஊற்றெடுக்கும்
கனியின் சாறு போல்
உவந்து ஊற்று எடுப்பதே
உள்ளத்தின் புன்னகை!
மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை;
தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை!
அமுதமாய் இனிப்பது
அம்மாவின் புன்னகை ;
அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை!
வெற்றியில் குளிப்பது வீரத்தின்
புன்னகை ;
வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை!
மொழியில் மலர்வது
கவிதையின் புன்னகை;
விழியில் மலர்வது காதலின் புன்னகை!
கடிகாரம் காட்டுவது
காலத்தின் புன்னகை;
கட்டழகு கூட்டுவது
இளமையின் புன்னகை!
மதுக்கோப்பையில் பிறப்பது குடிகாரனின் புன்னகை;
மனக்குப்பையில் பிறப்பது வஞ்சகர் புன்னகை!
நிலவில் ஒளிர்வது
சூரியன் புன்னகை;
நின்று நின்று ஒளிர்வது ஏழையின் புன்னகை!
மலராய் சிரிப்பது மண்மகள் புன்னகை;
மழலையாய் சிரிப்பது ஆண்டவன் புன்னகை!
Leave a Reply