விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா

விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா

  • By Magazine
  • |

கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கமலேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஞானஜெபின் மற்றும் கவுன்சிலர்கள் கிரிஜா, பவித்ரா, விஜயலெட்சுமி, ஜேக்கப் ஜெயராஜ், சதீஸ்ணகுமாரி, சுதாபாய், கவிதா, நியமன உறுப்பினர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீன வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டிடத்தைப் பேரூராட்சித் தலைவர் திரு. ஜெ.சி. பில்கான் அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மங்கல நிகழ்வில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெயசுதர்சன், பா.ஜ.க. நிர்வாகிகள் திரு. மணி, திரு. செல்வகுமார் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திரு. மேசியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய வர்ம அறிவியல் மறுமலர்ச்சியின் தந்தை மூலச்சல் டாக்டர் த.இராஜேந்திரன் அவர்கள், பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகளையும் மக்கள் நலனில் தலைவர் காட்டும் அக்கறையையும் வெகுவாகப் பாராட்டினார். அவரைத் தொடர்ந்து ஒயிட் மெமோரியல் கல்விக் குழுமத் தலைவர் திருமதி. லீலாபாய் ராஜேந்திரன், நிம்ஸ் மெடிசிட்டி பொதுமேலாளர் திரு. சஜூ, கப்பியறை பேரூராட்சித் தலைவர் அனிஷா கிளாடிஸ், மணவாளகுறிச்சி பேரூராட்சித் தலைவர் குட்டி ராஜன் ஆகியோர் உரையாற்றினர். மேலும் தனியார் பள்ளித் தாளாளர் பால்சன் சாலமன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீலன், அழகி நிறுவன நிர்வாக இயக்குநர் விஜி, டாக்டர் தங்கராஜா மற்றும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஷியா, தனலட்சுமி, லாரன்ஸ், ஸ்ரீ ஜோதி ஆகியோர் பேரூராட்சியின் கல்வி மற்றும் சமூகப் பணிகளை வாழ்த்திப் பேசினர்.

விழாவின் சிகர நிகழ்வாக, பேரூராட்சித் தலைவரின் சொந்தச் செலவில் சமூகத்தின் பல்வேறு தளங்களில் சாதனை படைத்தவர்களுக்கும், உழைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று கல்வியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள், விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்த வீரர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சிறந்த முறையில் பணியாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாகப் பேரூராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தங்களது நிலங்களைத் தானமாக வழங்கிய கொடையாளர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் போற்றப்பட்டனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தலைவரின் சார்பில் இலவச வேஷ்டி மற்றும் சேலைகளும் வழங்கப்பட்டன.

முன்னதாக கவுன்சிலர் ஜூட்ஸ் பெர்லின் அனைவரையும் வரவேற்றுப் பேச, நிறைவாக கவுன்சிலர் ஜெப மெர்லின் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் பினுலால் சிங், கட்டிட ஒப்பந்ததாரர் பென் ராஜசிங், ஊர் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் எனப் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட பணியாளர்கள் குழுவினர் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *