வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்
அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் மேற்கத்திய வரலாற்றில் உண்டு. அவ்வாறு பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் தாண்டி முன்னேறிய அறிவியல் தளம் மேற்கத்திய நாட்டிலிருந்து தொடங்கியதால் அந்த வழி மரபினர்களும் – அவ்வழி மரபினர் சொல்லாட்சிகளுமே இன்றுவரை அறிவியல் உலகின் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், அறிவுத்திறனும், ஆற்றலும் படைத்த கிழக்கத்திய சமூக நாகரீகம் சமயப் பிடிப்புகளிலிருந்து தன்னை பிரித்தறிய முடியாமல் இருந்ததாலும், உயர்வான சிந்தனைகள் அறிவியல் நீரோட்டத்தில் நேரடியாக கலக்கமுடியாமல் போனதாலும், இந்தியநாட்டின் ஆழ்ந்த அறிவியல் சிந்தனைகள் அனைத்தையும் வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கத்திய நாட்டவர் பல்வேறு வழிகளில் கவர்ந்துள்ளனர் என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும்.
தமிழில் அண்டம் என்பது முட்டை எனும் நீள் உருண்டை வடிவத்தைக் குறிக்கும் ஓர் பழஞ்சொல் ஆகும். இதுவே வட தமிழில் பிரபஞ்சம் என்று அழைக்கப்பட்டது. இன்றைய நவீன அறிவியல் அண்டவியலை காஸ்மாலஜி (Cosmology)) எனக் குறிப்பிடுகின்றது. இது காஸ்மாஸ் எனும் கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானதாகும். அண்டவியல் பற்றிய அறிவியல் சிந்தனைகளும், கிரேக்கநாட்டின் அணுவியல் கருத்துக்களும் அவைகளின் வேர்களும் இந்தியாவிலே உள்ளது என வில்லியம் ஃபிளமிங் போன்ற பல ஐரோப்பிய அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை அவர் தனது தத்துவ அகராதி (Dictionary of Philosophy) என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

(Some Modern scholars have expressed the view that theory of atomic structure of the universe has its origin not in Greece but in India- (Eg. William flemming dictionary of Philosophy))
இதுபோலவே கிரேக்கமண்ணின் அன்றைய அணுவியத்தின் பேரறிஞராக மதிக்கப்பட்ட லியூசிப்பஸ் (Leucippus) (கி.மு. 5-ம் நூற்றாண்டு) என்பவரும் அவரது மாணாக்கரான டெமோக்கிரிட்டஸ் (Democritus) (கி.மு. 460-கி.மு. 370) என்பவரும் ஆசிய மண்ணின் அறிவை பெற்றவர்கள். லியூசிப்பஸ் பிறந்த மிலீட்டஸ் எனும் நகரம் சின்ன ஆசியா என்று அழைக்கப்படும் துருக்கியில் உள்ளது. அந்நகரத்தின் அறிவுப்பள்ளிகள் அனைத்தும் தமிழகத்தில் வாழ்ந்த அறிவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தன. மட்டுமன்றி, அவரது சீடரான டெமோக்கிரிட்டஸ் இந்தியாவிற்கே வந்து இத்தகைய அறிவியல் கோட்பாடுகளை கற்றுச் சென்றுள்ளார் என்பதை கார்ல்மார்க்ஸ் கூறுகின்றார்.
(Some maintain that he (Democritus) also met the gymnosophists in India and set foot in Ethiopia. But while Democritus seeks to learn from Egyptian Priests, Persian Chaldeans and Indian gymnosophists, Epicurus prides himself on not having had a teacher, on being self taught). (—Karlmarkx)
இவரது அணுவியல் கருத்துக்களின் வேர்கள் அனைத்தும் தமிழர் அணுவியல் சார்ந்ததாகும். தமிழ் அணுவியத்தின் வித்தகர்களில் முன்னோடியாகக் கருதப்படுபவர் பக்குடுக்கை நன்கணியனார். இவரது காலம் கி.மு. 600-க்கும் 500-க்கும் இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி, இன்றைய புகழ்மிக்க அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தனது காலம் என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். அதாவது, “நவீன ஆய்வுகளின் ஒரே நோக்கம் முழு அண்டத்தையும் விவரிக்கின்ற ஒரே கோட்பாட்டை வழங்குவதாகும். பன்னெடுங்கால ஆய்வுகளாக பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்திருந்தாலும் இதன் தோற்றம் பற்றிய உண்மைகள் இன்றும் மானசீக இயல் அல்லது தெய்வீக இயல் சார்ந்ததாகவே இருந்துகொண்டே இருக்கிறது”.

1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபிள் எனும் அறிவியலாளர், “எங்கு நோக்கினும் தொலைதூரத் துகள்கள் நம்மை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன” என்பதை கண்டறிந்து வெளியிட்டார். இது அண்டம் விரிவடைந்து சென்றுகொண்டே இருக்கின்றது என்பதை புலப்படுத்தியது. எனில், முற்காலங்களில் பொருள்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே இருந்திருக்கும் என்பதே இதன் பொருள். “மெய்யாகவே ஏறத்தாழ பத்து அல்லது இருபது ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அப்பொருட்கள் எல்லாம் சரியாக ஒரே இடத்தில் அண்டத்தின் ஈறிலா அடர்த்தியோடு இருந்திருக்கும்படியான ஒரு காலம் இருந்தது எனத் தோன்றியது. இந்த கண்டுபிடிப்பு தான் அண்டத்தின் தொடக்கம் பற்றிய வினாவை இறுதியில் அறிவியலின் ஆட்சி எல்லைக்குள் கொண்டு சேர்த்தது.
மேலும், அண்டம் நுண் சிறு அளவும் ஈறிலா அடர்த்தி கொண்டிருந்த ஒருநேரம் இருந்ததை அவர் நோக்காய்வுகள் காட்டின. இந்நேரம் தான் மாவெடிப்பு (Big bang) எனப்படுகிறது”1. (ஸ்டீபன் ஹாக்கின்ஸ் -காலம்) இவரது ஆய்வின்படி, மாவெடிப்பே இந்த அண்டங்கள் தோன்றுவதற்கு காரணமாயிற்று என்பதே இன்றைய ஆய்வளவில் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதேக் கருத்தையே 20,000 (இருபதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவன் எனும் சித்தர் சுட்டிக்காட்டியுள்ளமையை நோக்கும்போது தமிழர்தம் பேரறிவும் பெருமையும் வியக்கத்தக்கதாக உள்ளது.
Leave a Reply