பேப்பர் குருவி

பேப்பர் குருவி

  • By Magazine
  • |

– அன்பாதவன்

காலம் பல ஆண்டுகளைத் தாண்டி  விட்டது.

தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன்.

 அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல அழைத்துச் சென்றது.

அவனும்  நகரங்கள்  பல மாறி வேலையிலும் வாழ்க்கையிலும் மூழ்கியிருந்தான்.

ஆனால் சில இரவுகளில், வானம் வெளுக்காமல் நிற்கும் பொழுதுகளில், அவனுக்குள் அந்த பனந்தோப்பின் காட்சி உயிர்த்தெழும் – சிட்டுக்குருவியின் சத்தம், “விர்” என்ற கல்லின் ஓசை, ராமலிங்கத்தின் அழுகை, விஜயனின் அலறல்.

அந்த நினைவுகள் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துன்புறுத்தின. அவன் தன் உள்ளம் ஆறுவதற்காக பல வழிகளை முயன்றான். ஆனால் ஒரு இரவும் அந்தச் சத்தம் அவனை விட்டுப் போகவில்லை. ஒருநாள், பழைய மரப்பெட்டியைத் திறக்கச் சென்றான். வீட்டின் மூலையில் பழைய மரப் பெட்டி ஒன்று. அதன் மேல் தூசி, சிலந்திக் கூடு.அவன் மெதுவாக திறந்தான்.

அதற்குள் சில காகிதங்கள், ஒரு பழைய நோட்டுப் புத்தகம், மற்றும் ஒரு சிறிய – மஞ்சள் நிறமாய்ப் போன பேப்பர் குருவி. அவன் அதைப் பார்த்தவுடனே இதயம் குலுங்கியது. “அண்ணா” என்று அவன் சொல்லிவிட்டான்.

அந்தப் பேப்பர் குருவியின் சிறகுகள் சுருண்டிருந்தன. அவன் அவற்றை மெதுவாக விரித்தான். அந்த நொடியில், அவன் மனத்தில் ஒரு காற்று எழுந்தது – பழைய பாவத்தின் துயர் வெளியேறுவது போல. அவன் அந்தக் குருவியை மேசையில் வைத்தான். அது வெறும் காகிதம்தான், ஆனால் அவனுக்கு அது உயிராய் இருந்தது. அவன் கண்களில் நீர் வந்தது. “இது தான் நம் பாவத்தின் முடிவு,” என்றான் தன்னிடம்.

அவன் காகிதக் குருவியை மீண்டும் மடித்தான் – மெல்லிய கவனத்தோடு, அன்போடு. சிறகை சற்று விரித்து, தலை உயர்த்தி, அவன் மனதில் ராமலிங்கத்தின் குரல் கேட்டது: “பறக்கும் டா ஆனா வானத்துல இல்ல இதயத்துல.”

அந்தச் சொல் அவனது நெஞ்சை மிரட்டியது. அவனுக்குள் ஒரு அமைதி ஊறியது.. வாசலுக்கு வந்தவனை வரவேற்றது வெளுக்காத வானம். சாம்பலும் கருமையும் கலந்து பரவிய வானம் – மழை பெய்யாதா என்று தோன்றும், ஆனால் பெய்யாத வானம். அந்த வானத்தின் கீழ் நிலம் ஈரத்தோடு மூச்செடுக்கிறது.

வாசல்முன் கிடந்த மண், வேர்களுக்குள் நுழைந்த மழைநீர், மிதந்த மண்வாசை – இவை எல்லாம் சேர்ந்து ஒரு சொல்லமுடியாத அமைதியை உருவாக்கின. அந்த அமைதியிலும், பறவைகள் விழித்திருந்தன. ஒரு பறவை மட்டுமே பாடுகிறது; மற்றவை அதைக் கேட்கின்றன.

அது ஒற்றைச் சிறகு போல; ஆனாலும் இசையில் வானத்தை முழுமையாக்குகிறது. முகங்காட்டாத செம்போத்து ஒன்று பறந்து வந்து வாசல் வாசலில் அமர்ந்தது. அதன் குரல் காற்றில் கலந்து எங்கோ தொலைவில் மறைந்தது. அந்தக் குரலை ஏதோ ஒருத் தென்னை மரம் “எசப்பாட்டு” போல பதில் சொன்னது. இயற்கைக்கு ஒரு உரையாடல் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான் தேவராஜ். பக்கத்து வீட்டு வேப்பமரம் சலனத்துடன் சிரித்தது. அதில் புல்புல் இணைகள் சீழ்க்கை அடித்து சத்தமிட்டன.

ஒரு தேன்சிட்டு தாவித்தாவி வந்து வேப்பம்பூவில் தேனருந்தி நிறுத்தியது. அந்தச் சிறு உயிர் – பறவை அல்ல, ஆனால் பறக்கும் ஆனந்தம் கொண்ட ஒன்று. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தேவராஜ் மனம் கேட்டது,

“வேம்பூவின் தேன் இனிக்குமா, கசக்குமா?” மரத்திலிருந்து ஒரு குரல் பதிலளித்தது: “மானிடரே கசப்பு, இனிப்பு என்பதெல்லாம் உமக்குத்தான். எமக்கு இது உணவு!”

அட தேன்சிட்டும் பேசுமா! தேவராஜ் சிரித்தான். அந்தச் சிரிப்பைக் கேட்டு, காட்டுவாகை மரத்திலிருந்த கல்குருவிகள் சிரித்தன போல தோன்றியது.

 வாசலில் இருந்த மஞ்சள்பூ மரம் மலர்ந்து. பெரியதொரு மஞ்சள் பூங்கொத்து போல காட்சியளித்தது.அதில் அமர்ந்திருந்த மைனா சற்றே தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தது.அது சிரித்ததா?அல்ல, சிரித்தது போலத் தோன்றியது.

மஞ்சள் நிற சட்டை, பழுப்பு நிற ஹாஃப் பாண்டு, கையில் பழைய பையில் கலைந்த புத்தகங்கள்.ஆனால் அவன் கண்ணில் ஒளி இருந்தது – உலகத்தைப் பார்க்கும் அப்பாவித்தனத்தின் ஒளி.

அவன் தெருவின் ஒவ்வொரு கல்லையும் தெரிந்தவன். வீட்டின் வாசல் முதல் ரயில்வேகாலனித் தொடங்கி பாண்டிச்சேரி வரையிலான வழியில் ஒவ்வொரு மரத்திலும் ஒரு நினைவு.

அந்த நினைவுகள் தான் அவனது சொந்தச் சிறகுகள். அந்தக் காலத்தில் விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி -ஒரு சிறிய உலகம். அங்கே வாழ்க்கை ரயிலின் நேரத்திற்கே அடிமை. காலை ஆறு மணிக்கே காலனி முழுமையாக விழித்துவிடும்.. வீட்டின் வாசலில் அம்மாக்கள் தண்ணீர் ஊற்றும் சத்தம்.

பிள்ளைகள் ஓடிச்செல்லும் சத்தம். அதற்கிடையில் விறகுக் கூடங்கள், சாம்பல், புகை – வாழ்க்கையின் வாசனை. தேவராஜ் அந்தக் காலனியில் வாழ்ந்த சிறுவன். அவன் சுற்றிலும் நண்பர்கள் கூட்டம். ராமலிங்கம், விஜயன், அருள், பிரான்சிஸ், கலியன், ரங்கசாமி, மோகன் – அவர்களின் நட்பு, ஒரு தாமரைமலரின் இதழ்கள் போல இணைந்திருந்தது. அவர்களின் உலகம் பெரியது இல்லை. ஆனால் கனவுகள் பெரியவை.

அந்தக் கனவுகள் எல்லாம் “வேட்டை”, “கபடி”, “பனம்பழம்”, “குருவி”, “சூரியன்” என்பதில்தான் தொடங்கி முடிந்தன. பள்ளி முடிந்ததும் புத்தகத்தை எடுத்து விட்டு, அவர்கள் ஓடுவது ஒரே திசை.

வெளி  உலகம்! ரயில்வே பின்புறம், பனந்தோப்பு, கருப்பண்ணசாமி கோயில் இவைதான் அவர்களின் ராஜ்யம். ராமலிங்கம் – அந்தப் பட்டாளத்தின் தலைவர். அவன் உயரமானவன், முகத்தில் சூரியன் போல ஒளி. கபடியில் கேப்டன், கால்பந்தில் கோல்கீப்பர். அவன் சுழற்றும் சிலம்பில் காற்று கூட இசை சேர்த்துக் கொள்ளும். அவன் சிரிப்பு வந்தால், எல்லா பையன்களும் உற்சாகம் அடைவார்கள். “தல,” என்று அவரைக் கூப்பிடுவார்கள்.அவன் தான் வழிகாட்டி; அவன் தான் தூண்டல்;அவன் தான் சாகசத்தின் அடையாளம். அவர்கள் செய்யும் “வேட்டை” வித்தியாசமானது.

பறவைகளைப் பறக்க விடாமல், கல்லால் வீழ்த்தி வெற்றி பெறுவது. அது அவர்களுக்குப் பெரிய வீரத்தொழில் போல. அந்த “உண்டிவில்” என்ற வில்லின் கம்பீரம் . அது கையில் இருந்தால், அவர்கள் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை. மாலை நேரங்களில்,ரயிலின் நீண்ட விசில் ஒலிக்க, அவர்கள் பனந்தோப்பின் வழியே திரும்புவார்கள்.பையில் குருவிகள், மனதில் பெருமை. வீட்டின் பின்புறத்தில்  அடுப்பு,வாணலி சூடு, மசாலா வாசம்.

அந்த வயதில் பறவையின் உயிரை உணவாகப் பார்க்கிறார்கள்.அவர்களுக்கு அது பாவம் இல்லை – விளையாட்டு.ஆனால் காலம் அதைக் கணக்கில் வைத்திருந்தது. ஒவ்வொரு விழுந்த குருவியும், ஒரு சிறு விதைபோல பாவத்தின் வேராக மாறிக் கொண்டிருந்தது.

தேவராஜ் அதற்குள் ஒரு சிறு உணர்வு பெற்றிருந்தான்.ஒவ்வொரு முறை குருவி விழும் போது,அவனுக்குள் ஏதோ ஒன்றின் சிறகுகள் துடித்தன. ஆனால் அந்த ஒலி அவன் செவிக்குக் கேட்கவில்லை. அது வானத்தின் நினைவில் மட்டும் தங்கியது.

அந்த நாட்களில் “வேட்டை” என்ற சொல்லுக்கு நாங்கள் ஒரு தனி மரியாதை வைத்திருந்தோம்.அது எங்கள் விளையாட்டு மட்டுமில்லை; எங்கள் பெருமை, எங்கள் வீரச்சின்னம்.

“வேட்டைக்கு போலாமா?” என்று ராமலிங்கம் கேட்டால், முழு குழுவும் ‘ஆம்’ என்று சொல்லாமல் கால் ஓடியே விடும். வீட்டில் சொல்லும் காரணம் ஒன்றுதான் – “நாங்கள் மைதானத்துக்குப் போறோம்.”

ஆனால் மைதானம் எங்கே, பனந்தோப்பு எங்கே! அந்த வேட்டைத் தயாரிப்பே ஒரு விழாவாக இருந்தது.

கலியன் நொச்சி மரக்கவையைக் கொண்டு ரப்பர் வில்லைக் கட்டுவான்.அவன் கையிலிருக்கும் கத்தி ஒரு தெய்வம் போல அவனிடம் அடங்கி நடக்கும்.

அதன் முனையில் மெல்லிய ரப்பர் துண்டுகள், செவ்வகத்தோல் துண்டுகள் இணைக்கப்படும்.

“கேளுடா  இப்போ இழுக்குறதுலத்தான் கலை இருக்கு” என்று கலியன் சொல்லும்போது அவன் கண்களில் ஒரு பெருமை தெரியும்.

அவன் இழுத்து காட்டும் ஒவ்வொரு தூண்டிலும் காற்று கூட ஒரு “விஸ்ஸ்” என்ற சத்தம் எழுப்பும்.அதுவே எங்களுக்கு இசை. வில்லிசை ரங்கசாமி மற்றும் மோகன் கற்கள் பொறுக்கச் செல்வார்கள்.

“கல்லு, குண்டு ரெண்டும் வேணும் சின்னக்கல் தப்பா போயிடும்,” என்று ராமலிங்கம் கற்றுக் கொடுப்பான்.அவன் குரலில் ஒரு சத்தம் இருந்தது – மரத்திலிருந்த பறவைகள் கூட பயந்து பறந்துவிடும் அளவுக்கு.

தேவராஜ் அப்போது ஜுனியர். அவன் பணி – பொறுக்கிய கற்களை பையில் சேர்த்தல், பிறகு  சீனியர் ராமலிங்கம் சொல்வதற்கேற்றாற்போல் ஒவ்வொரு கல்லையும் பரிசோதித்து தனித்தனியே பிரித்து வைக்க வேண்டும்.

அந்த உண்டிவில் – அவனது கையில் இருந்தபோது ஒரு பொம்மை மாதிரி இருந்தது, ஆனால் ராமலிங்கம் கையில் எடுத்தால் அது ஒரு ஆயுதம்.அவன் இழுக்கும் பொழுது அவன் முழு உடலும் வளைந்து ஒரு வில்லாளியாக மாறும். அது ஒரு காட்சி. சிறுவர்கள் உருவாக்கும் வீரச் சிற்பம்.

மதியத்திற்கு பின், சூரியன் தலையில் சுட ஆரம்பிக்கும்.ஆனால் அவர்கள் களி குறையாது.”போடா விஜி உன்னோட குருவி வந்திருக்கு!” ஒரு சிட்டுக்குருவி.அது பறந்து பறந்து ஒரு பனை இலைக்கீழ் அமர்ந்தது.

அதன் சிறகுகள் பளபளப்பாக நனைந்து இருந்தன.அந்தச் சின்ன உயிர் உலகத்தின் சுதந்திரம் தான். விஜயன் உண்டிவில் எடுத்து, சுண்டி பிடித்து, கண் சிமிட்டி குறி வைத்தான். ஒரு “விர்” என்ற சத்தம். பறவை கீழே விழுந்தது. ஒரு நொடி அமைதி. அந்தப் பறவை தரையில் துடித்தது. சிறகுகள் அடித்தது, குரல் எழுப்பியது. பின்னர் – அமைதி.

தேவராஜ் அந்தக் காட்சியைப் பார்த்து கல்லை கையில் பிடித்துக்கொண்டு நின்றான். அவனுக்குள் ஏதோ ஒரு திடீர் துடிப்பு.”இதெல்லாம் சரியா?” என்று ஒரு சிறு கேள்வி எழுந்தது. ஆனால் அடுத்த நொடி ராமலிங்கம் சிரித்தான்.

“வெற்றி! அப்பாடா, விஜி நீயே தல இப்போ!”அவன் கைத்தட்டி, குருவியைப் பையில் போட்டான். அந்தச் சின்ன உயிர் அவர்களுக்குப் பரிசு.

மாலை வேளை, நிழல் நீளமாகி, காற்று குறைந்தது.பனந்தோப்பின் இலைகள் சலசலத்துடன் அசைந்தன. அந்தச் சத்தம் எங்கோ தொலைவில் குரல் எழுப்பும் போல. பறவைகள் அமைதியாகப் பறந்தன.

அவர்களுக்குத் தெரியாது அந்தப் பனந்தோப்பு ஒருநாள் அவர்களின் வாழ்க்கையை மாறச்செய்யும் என்று.

அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. பள்ளி முடிந்ததும் ராமலிங்கமும் விஜயனும் தனியாகச் சென்றனர். தேவராஜ் அந்த நாள் அம்மா சொல்லியிருந்த காரணத்தால் வீட்டிலேயே இருந்தான்.

“நாங்க பனந்தோப்புக்குப் போயிட்டு வரோம்,” என்று விஜயன் சிரித்துக்கொண்டு சொன்னான்.அந்தச் சிரிப்பு தான் தேவராஜ் கடைசியாகக் கண்டது.

பனந்தோப்பின் வழி நீண்டது.கருப்பண்ணசாமி கோயில் அருகே வானம் சாம்பல் நிறத்தில் இருந்தது.பறவைகள் வீட்டிற்குத் திரும்பியிருந்தன.

மரங்களில் காற்று இசைத்தது, மண்ணில்  வெக்கை பூத்துநின்றது. ராமலிங்கம் மரத்தில் ஏறினான்.”விஜி பக்கத்துல இரு.. இப்ப பனம்பழம் பறிக்குறேன்.”

அவன் மேலே ஏறிக்கொண்டே இருந்தான். மரத்தின் மேலே ஒரு இலைக் கிளை அசைந்தது. அவன் சற்று நிலை தடுமாறினான். விஜயன் கீழே இருந்து கூவினான் “ராமா மெதுவா”

அந்தச் சொல் முடிவதற்குள் -ஒரு “பொதேர்!” என்ற சத்தம். மண்ணில் தூள் எழுந்தது. ராமலிங்கம்  மண்ணில் கிடந்தான் . விஜயன் பாய்ந்து ஓடினான். “தல! தல!” என்று அலறினான். ராமலிங்கத்தின் முகம் வெளுத்திருதிருந்தது. அவன் விழிகளால் வானத்தைப் பார்த்தான். கண்களில் பீதி..!

“விஜி  பயமாயிருக்குடா…நான் செத்துப் போய்டுவனா..? எப்படியாவது என்னையக் காப்பாத்துடா..” பயம் பூசிய விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அந்தக் கணத்தில் மேகங்கள் நிறம் மாறின. வானம் சாம்பலாகி, காற்று நின்றது. பறவைகள் எல்லாம் அமைதியாகிவிட்டன. விஜயன் அங்கேயே கத்தினான். அவன் ஓடினான் – கருப்பண்ணசாமி கோயிலுக்கு.

“கருப்புசாமியே காப்பாத்துங்க!” என்று அழுதான். அங்கு சாமிகும்பிட வந்தவர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். ராமலிங்கம் அசையவில்லை.

அவர்கள் அவனை கயிறு கட்டி தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். தேவராஜ் வீட்டிலிருந்தான். அவன் கேட்டான் -”யாருக்கு ஆம்புலன்ஸ் போச்சு?”

அம்மா பதறி -”நம்ம ராமலிங்கம், விஜயன்” என்று சொன்னாள். அவன் துடித்தான்.

அவன் ரயில்வே மருத்துவமனைக்கே ஓடினான். ரயில்வே ஹாஸ்பிடல் வடக்கு காலனியில் இருந்தது..  ஒன்றரை கீலோ மீட்டர் தூரம் ஓடினான். மூச்சு வாங்கியபடி வாசலில் நின்றான். அவனது நண்பர்கள் குழு, அருள், பிரான்சிஸ், கலியன் – எல்லோரும் அங்கேயே நின்றிருந்தார்கள்.

“வாடா இப்பத்தான் தெரிஞ்சுதா?” என்றான் அருள். “என்னாச்சு?” என்று அவன் கேட்டான். அவர்கள் அமைதியாக இருந்தனர். மருத்துவமனையின் வாசல் திறந்தது. அதிலிருந்து ஒரு நர்ஸ் வெளியில் வந்தாள். அவள் முகத்தில் வெறுமை!

“சீரியஸ்.” என்ற ஒரே சொல். அந்தச் சொல் ஒரு காற்றாக வந்து தேவராஜின் இதயத்தில் அடித்தது. அவன் பின்னால் பார்த்தான். வானம் கருமையாகி இருந்தது. மழை வரும் போல இருந்தது ஆனால் பெய்யவில்லை.

அது ஒரு வானத்தின் கண்ணீர் மாதிரி.மனிதர்கள் அழ முடியாத வலி – இயற்கையே அழுது விட்டது. மருத்துவமனையின் வாசல் முன்னால் நின்றபோது தேவராஜின் மூச்சு தடைப்பட்டது. வாசல் முழுக்க இரும்பு கதவு – அதன் பின்னால் ஒரு பயம், ஒரு அறியாமை. அவனது சிறுவயது அந்தக் கதவின் பக்கத்தில் நிறுத்தப்பட்டது போல.

“நீங்க உள்ளே போக முடியாது,” என்றாள் நர்ஸ். “உங்க அண்ணன் சீரியஸ்.”

அந்தச் சொல் ஒரு மின்னல் மாதிரி காது வழியாக நெஞ்சில் விழுந்தது.அவன் ஜன்னலின் வழியே பார்த்தான்.படுகையில் ராமலிங்கம் – முகத்தில் கட்டு, கையில் குழாய், மார்பில் இயந்திரம்.அவன் நிழல் கூட வெளிச்சம் தேடாமல் கிடந்தது.

விஜயன் பக்கத்து படுக்கையில். அவன் கண்கள் திறந்திருந்தன, ஆனால் பார்வை வெறுமை. அவன் வாயிலிருந்து ஒலிகள் வரவில்லை – சிலமுறை தலையசைக்கும், சிலமுறை சிரிப்பான். சிரிப்பா அது? இல்லை – உடைந்த மனதின் நடுக்கம்.

தேவராஜ் பார்த்தபோது அந்தச் சிறுவர்கள் விளையாடிய பனந்தோப்பின் காட்சிகள் அவனது நினைவில் மீண்டும் ஒலித்தன. சிட்டுக்குருவிகள் பறந்தன.

“விர்” என்ற கல் விழுந்தது. அந்த ஒலியே இப்போது மருத்துவமனையின் நிசப்தத்துக்குள் எதிரொலித்தது.

அந்த இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தான். மழை பெய்தது – சிறிது சிறிதாக. ஒவ்வொரு துளியும் வானத்தின் கண்ணீராக விழுந்தது. அவன் தலையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

“யண்ணா.. ஏந்திரீங்க” என்று மனதிற்குள் அழைத்தான். பதில் இல்லை. மூன்று நாட்கள் கழித்து, ராமலிங்கம் பெரம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். விஜயன் – திருச்சி பொன்மலைக்கு. அந்த இரு இடங்களுக்கிடையே தேவராஜின் சிறு வயது பிளந்தது.

பெரம்பூரில் இருந்து வந்த முதல் செய்தி. “அண்ணனுக்கு இடுப்புக்குக் கீழே உணர்ச்சி இல்லை.” விஜயனுக்காக வந்தது. “அவன் புத்திச் சிதைவில் ஆழ்ந்திருக்கிறான்.”

அந்தச் சொற்களை கேட்டதும் தேவராஜின் மனம் கண்ணாடி போல நொறுங்கியது. அவன் இரவில் உறங்க முடியவில்லை. அவன் முகத்தில் சூரியன் மறைந்தது. மாலை நேரங்களில் காலனியின் மற்ற பையன்கள் இன்னும் விளையாடுவார்கள். அவன் வாசலிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பான்.

அவர்களின் சிரிப்பு அவனுக்கு இப்போது கொஞ்சம் துன்பமாகத் தோன்றியது.

ஏனெனில் அந்தச் சிரிப்பின் பின்னால் ஒரு மரணத்தின் ஒலி அவன் கேட்கத் தொடங்கியிருந்தான்.

அவன் ஒருநாள் அம்மாவைக் கேட்டான்: “அம்மா நாம வேட்டையாடுவது பாவமா? கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு பெரியவங்க தானே சொல்லியிருக்காங்க”

அம்மா பதிலளிக்கவில்லை. அவள் பார்வை மட்டும் வானத்தை நோக்கியது. அது போதுமான பதிலாக இருந்தது. விஜயன் மனநிலை இழந்தான். அவன் வீட்டில் இரவு நேரங்களில் அலறுவான். சில நேரங்களில் சிரித்துக் கொண்டே “பறவைகள் வருது!” என்று கூப்பிடுவான்.

சில நேரங்களில் கைநீட்டி “அய்யோ  ராமா விழுந்துடுவான்!” என்று அலறுவான். அவனது தாய் தினமும் அழுவாள். அவனது அப்பா கோபத்தில் அடித்துவிடுவான்.

அந்த வீடு ஒரு திகில் நிறைந்த மண்டபமாகி விட்டது. ஒரு நாள் மழை நிற்காத இரவு வீட்டினர் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

விஜயன் வாசல் திறந்து வெளியேறிவிட்டான். அடுத்த நாள் பாண்டிச்சேரி தண்டவாளத்தில் அவன் தலை தனியே, உடல் தனியே. ரயிலின் சத்தம் மட்டும் மீதமிருந்தது. வானம் மீண்டும் வெளுக்கவில்லை.

ராமலிங்கத்தின் நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவமனையின் பில்லுகள் குவிந்தன. அவன் தாயின் காது கழுத்தில் இருந்த நகை எல்லாம் போனது.

மார்வாடி கடையில் காகிதம் கையெழுத்திட்டபோது அவள் சொன்னாள். “என்ன மகன் நிம்மதியா இருந்தா போதும்.”

தேவராஜ் ஒரே ஒரு முறை அண்ணனைப் பார்க்கப் போனான். அவன் கண்ணில் கண்ணீர். படுகையின் அருகில் ராமலிங்கம் மெதுவாகச் சொன்னான்.

“வாடா நீயாவது ஒழுங்கா படி என்னைய மாதிரி ஆகாதே.” அவனது குரல் காற்றில் கலந்து மிதந்தது. அவன் அருகில் சில வண்ணக் காகிதங்கள். கத்தரிக்கோல், பசை, மடிப்பு – அவன் கையில் ஓரிகாமி வடிவங்கள்.

“இதப்பாருடா” என்றான். அவன் ஒரு காகிதக் குருவியை கையில் பிடித்திருந்தான்.

மெதுவாக அதை மடித்து, சிறகை நீட்டி காட்டினான். அவன் முகத்தில் ஒரு சிறிய ஒளி.

“இதுக்கு பெயர் ஓரிகாமி. காகிதத்தை வெட்டாம, ஒட்டாம மடிச்சு கலை செய்யும் ஜப்பான் கலையாம். நான் கத்துக்கிட்டேன் ஆஸ்பத்திரிலிருந்தப்போ. பேப்பர்ல குருவி பூ எதுவேணும்னாலும் செய்யலாம்” தேவராஜ் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறு காகிதம் அவனது கண்களில் உயிராகத் தோன்றியது. அவன் சொன்னான். “அண்ணா இது உண்மையா பறக்குமா?” ராமலிங்கம் மெதுவாகச் சிரித்தான். “பறக்கும் டா ஆனா வானத்துல இல்ல. இதயத்துல.” அவன் அந்தக் குருவியை தேவராஜின் கையில் வைத்தான். “இது தான் நம் பாவத்துக்குப் பரிகாரம்,” என்றான் மெதுவாக. அந்தச் சொல் காற்றில் கரைந்தது. அவன் கண்களில் நீர் துளிகள். அது கண்ணீரா? இல்லை – மன்னிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *