– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்)
எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது.
ஆசையாக ஒரு பூனையை களவாடி விட்டு தன்னுடைய வீட்டினுள்ளே பூட்டி வைத்திருந்தான்.
அதன் பெயர் மியா!
நாள்தோறும் மீன்பிடி தொழிலென, நாளுக்கு ஒன்று மட்டுமே பிடித்து வருவான். பிடித்தமீனை உயிருடன் தொட்டியினுள் போட்டுவிட்டு அதற்கு காவலாக மியாவை விட்டுச் சென்றான்.
வேறெங்குச் செல்வான் அவன் இருக்கும் ஊரின் அருகில் வள்ளலார் நிறுவிய தருமசாலை தான் அது.
மூன்று நேரமும் தவறாமல் உணவுக் கிடைத்துவிடும். அதனால் தான் என்னவோ? படும் சோம்பேறியாகி விட்டான் போல! இரவு உணவை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தான்.
மியாவை காணவில்லை வீடெங்கும் தேடியபின் நான்கு தெரு தள்ளியிருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பனான அரிச்சந்திரன் வீட்டிற்குச் சென்று அரி…. அரி…. என்று அழைத்தான்.
அவனோ மன்னனை விட ஒருபடி மேல்! அவன் வாயில் இருந்து மறந்தும் கூட ஒரு உண்மை வந்திடாது.
வாடா…. மன்னா! எங்க இந்த பக்கம்? ஒரு வேலையா இந்தபக்கம் வந்தேன்… சரி ‘ உன்ன பாத்துட்டு போலாம்னு…..என்றான் மன்னன்.
நல்ல வேலையா இந்த நேரத்துல வந்த! அப்படியா? ஏன்டா என்ன விஷயம்…. ஒன்னும் இல்ல மன்னா நல்ல வேலையா? னு கேட்டேன்…. ஓ சரி சரி என்று கூறி மன்னன் வீட்டை சுற்றி முற்றி பார்த்தான்.
மன்னனுக்கு அரிச்சந்திரனைப் பற்றி நன்றாகத் தெரியும்! ஆமா… உங்க வீட்ல பூனைக்குட்டி இருந்துச்சில அது எங்க? என்று கேட்டான்.
அதுவா? அந்த புலிக்குட்டி உள்ள தான் இருக்கு… அதுக்கென்ன நேரநேரத்துக்கு பால், சோறு, எல்லாம் போட்டுத்தான் வளக்குறேன்… தின்னுட்டு தூங்குது!
அதுசரி. உன்தொழில் எப்படி போகுது என்றான்… அரிச்சந்திரன். ம்ம்…… போகுது என்று பெருமூச்சி விட்டான்….
எங்க புலிக்குட்டிக்கு மீனுனா உசுரு நாளைக்கு ரெண்டு மூன்று கொண்டுவா… என்றான்.
சரிடா… சந்திரா என்று கூறிவிடைபெற்றுச் சென்றான்.
வீடு செல்லும் வழியில் மன்னனுக்கு ஒரே சிந்தனை! நமக்குள்ளும் ஒரு சிந்தனைத் தோன்றியிருக்க வேண்டுமே?
ஆமாங்க மன்னன், அரிச்சந்திரன் வீட்டிற்கு செல்வதற்கான காரணம், அங்க இருந்துதான் பயபுள்ள களவாடிட்டு வந்துருக்கு….
அதான் மியாவை காணாமல் போனதும் உடனே அங்கபோய் நோட்டமிட்டுட்டு வந்திருக்கிறான். அரிச்சந்திரன் புலிக்குட்டி உள்ளதான் இருக்குனு சொன்னதுமே மன்னன் புரிந்து கொண்டான்!
மியா அங்கு இல்லையென்று. ஒருவழியாக வீடு வந்துச் சேர்ந்தான் மன்னன்.
வீட்டில் நுழைந்ததும் மன்னனுக்கு பேரதிர்ச்சி! தொட்டியில் இருந்த மீனைக் காணவில்லை.
அரிச்சந்திரன் புலிக்குட்டிக்கு மீனுனா உசுரு என்று சொன்னவார்த்தை நியாபகம் வந்தது.
திரும்பி பார்த்ததும் நாற்காலிக்கு அடியில் மியா தலையைத் தூக்கி மன்னனைப் பார்த்துக் கொண்டிருந்தது பேசமுடியாத மியாவிடம் எங்கே? இங்கிருந்த மீன் என்று கோபமாக கேட்டான்.
முறைத்தபடி பார்த்த மியாவின் மனநிலை மன்னனுக்கு புரிந்தது.
அரிச்சந்திரன் பொய் கூறுபவன் தான். ஆனால் உயிர்களை மதிப்பவன் தேவையான உணவைக் கொடுத்து வளர்த்தான்.
மன்னனோ கஞ்சன். மியாவிற்கு உணவேதும் கொடுக்காமலே வளர்த்து வந்தான்.
எனவே மியா தன்கொள்கையை மாற்றி மீனை சாப்பிட்டு விட்டது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூட நல்லவராக இருப்பதும் தீயனவாக இருப்பதும் அவரவர் வளர்ப்பினிலே.
Leave a Reply