ஓஷோ
வார்த்தைகளை உண்மையிலிருந்து பிரிக்க முயற்சியுங்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையில் யாராவது நான் உன்னை வெறுக்கிறேன் என்று சொன்னால் அந்த வார்த்தையை நம்பி விடாதீர்கள். அது ஒரு கணத்தில் தோன்றியதாக இருக்கலாம். அது ஒரு அம்சமாக இருக்கலாம், வார்த்தைகளோடு செல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் வாழ்க்கைக்கே எதிரியாக விடுவீர்கள். வார்த்தைகளால் நண்பர்களை உருவாக்கிக் கொண்டது போல், வார்த்தைகளால் எதிரிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள். அந்த மனிதனுக்குள் பாருங்கள், கண்களுக்குள் பாருங்கள், முழுமையை உணருங்கள் அது ஒரு கணத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது முறை ஒரு கணத்தின் செயலாக தான் இருக்கும். ஏதாவது ஒரு செயலால் அவன் வேதனையடைந்திருக்கலாம். அதனால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று சொல்வதன் மூலம் அதை வெளிப்படுத்தியிருக்கலாம். காத்திருங்கள் முடிவு செய்துவிட வேண்டாம்.
இது என் எதிரி என்று சொல்லி விடாதீர்கள். இப்படிச் சொன்னீர்கள் என்றால் நீங்கள் அடுத்தவரின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டு விடுவதில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நீங்கள் இது என் எதிரி என்று சொல்லி விட்டால் இந்த வார்த்தை விடாப்பிடியாக இருக்கும். நாளை ஒரு வேளை அவன் மாறிவிட்டால் கூட நீங்கள் மாறுவதற்குத் தயாராயிருக்க மாட்டீர்கள். உங்களுக்குள் நீங்கள் அதைச் சுமந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் குறிப்பிட்டு விட்டதாலேயே நீங்கள் எதிரியை உருவாக்கி விடுவீர்கள். உங்கள் எதிரிகள் பொய், உங்கள் நண்பர்கள் பொய், ஏனெனில் வார்த்தைகள் உண்மையல்ல. வார்த்தைகளால் ஒன்றே ஒன்று செய்ய முடியும். அவற்றைத் திரும்ப திரும்பக் கூறினால் உண்மையின் தோற்றத்தை அவை கொடுக்கும்.
புத்திசாலி மனிதர்கள் முட்டாள்களாகவும் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் வார்த்தைகளை நம்புகிறார்கள். அதுதான் பிரச்சினை. ஜெர்மானியர்கள் அதிபுத்திசாலிகள். அதிகம் படித்தவர்கள், அதிக அளவு பேராசிரியர்களையும், தத்துவ ஞானிகளையும் கொடுத்தவர்கள் முழு நாடுமே புத்திசாலியானது. ஆனால் எப்படி அடால்ஃப் போன்ற முட்டாள் மனிதனைத் தூண்டிவிட்டு ஆதரித்தது, அவரது வாதங்கள் தர்க்க ரீதியானவை?
ஆனால் இது அங்கே நிகழ முடியும். ஏனெனில் பேராசிரியர்களின் மண்ணில், புத்திசாலிகளின், சான்றோர்களின் இடத்தில், அதிபுத்திசாலிகள் என்று அழைக்கப்படுவோரிடம் வார்த்தை அடிமைத்தனம் இருக்கிறது. நீங்கள் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்ப கூறினால் மீண்டும் மீண்டும் அடித்துச் சொன்னால் மக்கள் கவனிப்பார்கள். திரும்ப திரும்ப சொல்லப்படும் போது இதுதான் உண்மை என்று உணரத் தொடங்கி விடுவார்கள். தொடர்ந்து பொய்களைச் சொல்லி கொண்டிருந்தால் அது உண்மையாகி விடும்.
திரும்ப திரும்ப சொல்லுதல் ஒரு பொய்யை உண்மையாக மாற்றும் ஒரு வழியாகும். ஆனால் உங்களால் பொய்யை உண்மையாக மாற்ற முடியுமா? வெளித்தோற்றத்திற்கு முடியும். முயற்சி செய்யுங்கள். எதையாவது ஒன்றைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருங்கள், அதை நம்ப தொடங்கி விடுவீர்கள். நீங்கள் நினைப்பது போல் அத்தனை துன்ப மயமாய் நீங்கள் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் நீங்கள் திரும்ப திரும்ப நான் துன்பத்திலிருக்கிறேன் நான் துன்பத்திலிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், கூடிய விரைவில் நீங்கள் துன்பத்திலிருப்பதைப் போலவே தோற்றம் அளிப்பீர்கள்.
Leave a Reply