– முனைவர் முல்லைத்தமிழ்
கோச்சக்காலம்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைமுட்டு வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கோச்சக்காலம் பற்றி அறிவோம்.
கைமுட்டின் உட்புறக்கண்ணில் மேல் அருகு பற்றி ஒரு இறையில் கோச்சக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கோச்சல்காலம், கோச்சைக்காலம், கோச்சு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.
“மயங்கும் முட்டின்கண் சார்பில்
கோச்சைக்காலம்”.
– வர்ம குருநூல்
“கைமுட்டின் உள் கண்ணின் மேலருகு
பற்றி கோச்சுவர்மம்”.
– வர்ம கலைக்களஞ்சியம்
என குறிப்பிடுகிறது.
“மயங்கும் முட்டின் கண் சார்பில் கோச்சக்காலம்
மாத்திரையோரிறை சார்பில் மடங்கும் கைதான்
தயங்கு மடக்கோராயத்திறையீரூடாய்
தாவி நிற்கும் பனிசக்தி கோச்சல் காய்ச்சல்
கயங்கில் நரம்புலர்ந்து குன்னி வாதகாசம்
காலமது கடருமானால் சன்னி வாதம்
பயங்கரமாய் வரும் கண்கள் சிவந்து சுழற்றி
பரதாப மேல்நோக்கல் பறக்கும் ஜீவன்”.
– வர்ம குருநூல்
“பறக்காமலிருக்க ஒரு உபாயமுண்டு
பதட்டமின்றி பத்துதலம் ஒத்தனுக்கி
விறக்க வருமுட்சூத்திரம் புறச்சூத்திரம்
விதமான கூட்டடங்கலுள்ளனுக்கி
திறக்க ஒரு தடவதனால் கீழ் இறக்கி
திகழுமந்த சுழியதை பெருவிரலால்
மறக்க ஒருவழியின்றி தானிருத்த
மறலியின்றி விடைபகருமறிந்துபாரே”.
– வர்ம குருநூல்
எனவும் குறிப்பிடுகிறது. மேலும்,
அகமுட்டாம் தொடரிசைவில் கோச்சையெனும் காலம்
புகத்தட்டி விட்டிடிலோ விள்ளெனவிளங்காதாகும் கை
முகம்சுழிக்கும் வலிக்கும் கோச்சலுடன் காய்ச்சலுமாம்
நகந்தொட்டழுத்திடிலோ மனமயங்கும் காண் என்னே!
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கையின் அகமுட்டின் மேல்புறப் பள்ளத்தில் கோச்சைக்காலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் மாத்திரையாய் தட்டிவிட்டால் வேகமாக கை தளர்ந்து போகும். வேதனையால் முகம் சுழிக்கும், விரலில் கோச்சல் உண்டாகி உடல் சூடு அதிகரிக்கும். மாத்திரை மிஞ்சி தாக்கம் கொண்டால் மயக்கமும் உண்டாகும் என்பதாம்.
என்னுறும் கோச்சக்காலம் பின்னுறும் பிணிகள் கேட்கின்
பன்னுறும் பதட்டம் மிஞ்சும் பதறியே படபடப்பதிகமாகும்
வன்னுறும் வாதம் மிஞ்சும் வலித்துமே பிடிக்கும் கையும்
மன்னுறும் மருந்தால் தீரும் முறும்பிணிச்சுரமுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கோச்சக்காலத்தில் தாக்கம் கொண்டு சரிவர மருந்து செய்யாது விட்டுவிட்டால் பதட்டம், படபடப்பு, வாதம், கைகால் பிடிப்பு போன்றவைகள் பின்னாட்களில் உண்டாகும். எனினும் இவைகள் மருந்துகளால் தீரும் என்பதாகும்.
கோச்சுறும் காலங்கொண்டு கொழுத்துடன்குத்தல்காணில்
மாச்சுறும் அடங்கல் பூச்சும் மகத்துவமாம் தடவல் தானும்
போச்சுறும் அமிர்துநன்னாரி சிறுகடலாடி உழிஞைபாளை
தீச்சுறும் முப்புரம் எரித்தான்மூலி மூதண்டம் கூடச்சேரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கோச்சக்காலம் தாக்கம் கொண்டு கொழுத்து குத்தல் உண்டாகில் அடங்கல்களை தூண்டி, பூச்சுமருந்துகளைப் பூசி, தடவுமுறையும் செய்துவர சுகமுண்டாகும். மேலும், அமிர்துவள்ளி, நன்னாரி, சிறுகடலாடி, உழிஞை, ஆடுதீண்டாப்பாளை, கெருடக்கொடி, மூதண்டம் இவற்றுடன்,
சேரே நீ வழுதலை வேர் ஆடாதோடை விளாத்தியின்பட்டை
காரே நீ கருவிலாஞ்சி கறுத்தசுண்டை கறுவாயின்பட்டையும்
கூரே நீ கூவிளவேர் குறுந்தட்டி குமிளின் வேராமணக்கும்
பாரே நீ பதமாக வகையது தான் கழஞ்சி மூன்றே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
வழுதலைவேர், ஆடாதோடை, விளாம்பட்டை, கருவிலாஞ்சி, கறுத்த சுண்டை, கறுவாப்பட்டை, வில்வவேர், குறுந்தொட்டி, குமிள்வேர், ஆமணக்கு இவை வகைக்கு மூன்று கழஞ்சியாகும்.
மூன்றான மேன்மருந்து சிவனின்வேம்பு கருஞ்சூரை
ஆன்றான ஆலின்பட்டையொடு அரசின்பட்டையும்
கான்றான கடைமருந்து கடுகு பலை சாதி மூன்றும்
ஈன்றான இருசீரம் அரியாறு அமுக்கூரம் பாவுமாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேல்மருந்து மூன்று கழஞ்சியுடன் சிவனார்வேம்பு, கருஞ்சூரை, ஆலம்பட்டை, அரசம்பட்டையும், அதனுடன் கடைமருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் தோடு, நெல்லிக்காய் தோடு, தான்றிக்காய் தோடு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கிராம்பு, நல்சீரகம், கருஞ்சீரகம், அரிசிவகை ஆறு, அமுக்கூரம், பறங்கிப்பட்டையும்
ஆமென்னும் சிறுதேக்கு பூவத்தும் கடுக்காய் பூவும்
மாவென்னும் மாசிக்காய் தகரமொடு கொட்டமதும்
போமென்னும் பொன்குறண்டுபொன்னாவரைபூவும்
தாமென்னும் தக்கோலம் வகை கழஞ்சி நான்கே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
சிறுதேக்கு, பூவத்து, கடுக்காய்பூ, மாசிக்காய், தகரம், கொட்டம், பொன்குறண்டி, பொன்னாவரை பூ, தக்கோலம் இவை வகைக்கு கழஞ்சி நான்காகும்.
மருந்துவகை ஒவ்வொன்றும் களங்கம் நீக்கி கணக்காக
திருந்துவகை செய்தொன்றாய் சதைத்து இணக்கமாக்கி
இருந்துவகை கரகமதில் கலந்ததனை குணக்கமாக்கி
குருந்துவகை வற்றியெடு குணமாம் பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மருந்துகளை நன்றாக சுத்தம்செய்து இடித்து சதைத்து எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீரில் கலந்து அளவாக வற்றக்காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டால் நற்குணமாம் பாரே.
பார்த்தெடுத்து அந்தி சந்தி பதறாமல் பருகி நீ வருகும்போது
சேர்த்தொன்றாய் போக்குமடா கோச்சல் சுளுக்கோடேவலிகள்
கோர்த்தொன்றாய் ஓடுமடா சடலம்விட்டு அடவாய்நின்றபிணி
வார்த்தொன்றாய் வேலைபுக்கும் விடிவதனை விரைந்து பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இக்கஷாயத்தினை காலை, மாலை அருந்திவர கோச்சல், சுளுக்கு, வலிகள் போன்ற அனைத்துப் பிணிகளோடு உடலில் பற்றிநின்ற பல்வேறு பிணிகளும் உடலைவிட்டு விரைவாய் ஓடி ஒன்றாக கடலில் சென்று புகுந்துவிடும் என்பதாம்.
பாரென்ற தலந்தன்னை பதமறிந்து அணைக்கும்போது
வேரென்ற வலி சுழுக்கு வர்மம்வலிப்பும் போக்குமிஃது
காரென்றகணக்கறிந்து செய்திடவேவாதமுடன்வீக்கமும்
வீரென்று ஓடுமடா உடலை விட்டு உண்மை தானே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
கோச்சக்கால வர்மதலத்தை மெதுவாக தூண்டிவர வலி, சுளுக்கு, வர்மம் போன்றவை குணமாகும். இவ்வர்மத்தில் மாத்திரை அறிந்து தூண்டிவர வாதம், வீக்கம் போன்ற நோய்கள் அனைத்தும் உடனே நீங்கிவிடும் என்பது உண்மையாகும் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் பாதிப்படைந்தவரின் கைக்கு கோச்சலும், தாங்கொணா தரிப்பும் உண்டாகி கை செயலிழக்கும். குளிர் பனியுடன் சுரம் தோன்றும். கை விரல்கள் ஒருபுறமாக கோட்டி வலித்துக்கொள்ளும். அப்போது வலியும், தரிப்பும் அதிகமாகும். சிலருக்கு சரநிலையில் கொண்டால் அதிவியர்வையும், அசதியும், படபடப்பும், மயக்கமும் உண்டாகும். இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை தடவி, அடங்கல்களை அனுக்கி, அமத்தடங்கல் செய்துவிட இளகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு பிற்காலத்தில் பாதிக்கப்பட்ட கரத்தில் தளர்ச்சையும், உடலில் எப்போதும் சுரம் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். கையில் கோச்சல் உண்டாகி பலம் குறைதல், நரம்பு உலர்தல், வாதகாசம், பரதாபம், அடிக்கடி பனிசுரம், படபடப்பு, ஜன்னி போன்ற பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ உண்டாக வாய்ப்புண்டு என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை சூண்டுவிரல், பெருவிரல், நடுவிரல் போன்றவைகளைக் கொண்டு செய்யும் தூண்டல், அழுத்தல், அனுக்கல் போன்ற தூண்டுமுறை நுட்பங்களால் தூண்டி வர, இழுத்துக் குத்தும் வலி, கை, கால், விறைப்பு, கை மதமதப்பு, கண்நோய்கள், மேல்வயிற்றுவலி, கழுத்துவலி, கைவலி, விரல்வலி, கையின் தசைவலி போன்ற நோய்கள் குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
Leave a Reply