விழுதுகள்

விழுதுகள்

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

ஆட்டோவை விட்டிறங்கி கேட்டைத்திறந்து உள்ளே வந்தனர் ராமகிருஷ்ணனும் பத்மாவும். தோட்டம் முழுதும் இலைகளும், புல்லும் வளர்ந்திருந்தன. ஒரு மாசம் ஆச்சு வீட்டை விட்டு போய் வேற எப்படி இருக்கும் என நினைத்தப்படியே கதவை திறந்தாள். அடுத்த வீட்டில் இருந்து அக்கா வந்தீட்டீங்களா என்ற குரல் கேட்டது ஆமா மீனா என குரல் கொடுத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தாள். பயணப்பைகளை உள்ளே எடுத்து வைத்தார் ராமகிருஷ்ணன். பைக் சாவியைக் கையில் எடுத்தபடி பத்மா முதலில் பாலும் வாங்கி இட்லியும் வாங்கிட்டு வர்றேன். காப்பி போட்டு குடிச்சி காலை உணவை முடித்த பிறகு வேற வேலைகளை செய்யலாம் என்றபடி வெளியே வந்தான். இரண்டு மூன்று நாளுக்கு ஒரு தடவை வந்து கேட்டைத் திறந்து செடி கொடிகளுக்கு தண்ணீர் விட்டு பைக்கையும் ஸ்டார்ட் பண்ணி வைடா என்று தம்பி கண்ணனிடம் சொல்லியிருந்தாள். அதனால் தான் வண்டியும் உடனே ஸ்டார்ட் ஆகிடுச்சி.

நாற்காலியில் நன்றாக முதுகை சாய்த்தபடி உட்கார்ந்த பத்மாவின் நினைவுகளை முப்பது வருடத்துக்கு முன்னாடி சென்றது. சாதாரண ஜவுளிக்கடை கணக்கரரான ராமகிருஷ்ணனை திருமணம் செய்து ஒரு வாடகை வீட்டில் குடியேறியதும், கணவருக்கு பின் மூன்று தம்பிகள் ஒரு தங்கை மாமனார், மாமியார், கணவரின் பாட்டி என எட்டு பேர் உள்ள குடும்பத்தில் ஒன்பதாக தான் வந்ததும், பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிய போது இந்த நாலுபிள்ளைகளுக்கும் இரண்டாவது அம்மாவா மகராசியா இரு என பாட்டி ஆசீர்வதித்தது ஞாபகத்திற்கு வந்தது.

கடின உழைப்பாளியான கணவனுக்கு அரசு வேலை கிடைத்ததும் இந்த குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு கட்டியதும் கனவு போல இருந்தது. தம்பிகள் பள்ளி இறுதி படிப்போடு படிப்பை நிறுத்தி வேலைக்கு இரண்டு பேர் சென்றனர். இளையவனும், பெண் குழந்தையும் கல்லூரிக்கு சென்றனர். மாமாவும் அத்தையும் பொறுப்பாக குடும்பத்தை கவனித்தனர். மாமா சாதாரண கூலி தொழிலாளி தான். இதற்கிடையில் எங்களுக்கும் அகில், ஆர்த்தி என்று இரண்டு குழந்தைகள். கூட்டுக்குடும்பம் தான், எப்போதும் கலகல என்று இருக்கும். எனக்கும் அது பிடித்திருந்தது. சிறுவயதில் தாயை இழந்த நான் இந்த உறவுகளுக்காக ஏங்கியிருந்தவள். என்னைப் பற்றி தெரிந்த என் அண்ணன் இந்த குடும்பத்தை சரியாக தான் தேர்வு செய்திருந்தார்.

எப்போதும் வீட்டில் மைனி, மைனி என்ற குரல் தான். என் குழந்தைகளின் குரலை விட இந்த குரல் தான் ஓங்கி ஒலிக்கும். என் நாத்தனார் என்னை ஒட்டிகிட்டே இருப்பாள். உறவுக்காரர்கள் வந்தால் என்ன மாய மந்திரம் போட்டாய் எல்லோரும் சுத்தி சுத்தி வாறாங்க என்பார்கள். அவர்கள் போன பின்பு பாட்டி சொல்வார்கள். அடியே கிருஷ்ணம்மா எல்லோருக்குமே திருஷ்டி சுத்தி போடுடி. எல்லா கண்ணும் நம்ம பிள்ளைங்க மேலே தான் என்பார். அத்தையும் சுத்திப் போடுவார்கள். பெரிய கொளுந்தனுக்கு திருமணமாகி தனிக்குடித்தனம் வைத்தோம். அவளும் நல்லப் பெண் தான். விருப்பமின்றி தான் சென்றாள். பக்கத்தில் தான் வாடகை வீடு. அவன் வேலைக்கு சென்றவுடன் இங்கே வந்து விடுவாள். இங்கே தான் மதிய சாப்பாடு. அடுத்த நாத்தனாருக்கு நல்ல வரன் வந்தது. சென்னையில் வேலை… அவளும் சென்னை சென்று விட்டாள். பாட்டி காலமாகி விட்டார்கள். மாமனார் வேலைக்குப் போக முடியாமல் ஆகி விட்டார். வீட்டிலே பேரப்பிள்ளைகளோடு தான். கொழுந்தனுக்கு இரண்டு பிள்ளைகள். நாத்தனார் லெட்சுமிக்கு இரண்டு குழந்தைகள்… வீடே கலகலவென இருக்கும். விசேஷ நாட்களில் திடீரென ஒருநாள் அத்தை நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே இறந்துட்டாங்க. ஆலமரம் சரிந்தது… வீடே சோகமாகி போச்சு… மகிழ்ச்சி மறைஞ்சு போச்சு… காலங்கள் ஓடியது.

இரண்டாவது கொழுந்தன் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றான். இளையவன் தேர்வு எழுதி வெளியூரில் வேலை கிடைத்தது.  மாமனாரும் தவறி விட்டார். இளையவனுக்கும் திருமணம் செய்து வைத்தோம். அவனும் குடும்பத்தோடு வெளியூரில். எங்கள் பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிட்டாங்க. பையன் இஞ்சினீயரிங் படித்து பெங்களுரில் வேலை பார்க்கிறான். மகள் கல்லூரிப் படிப்பை முடித்தாள். நல்ல வரன் வந்தது. அவளும் திருமணம் ஆகி கோயம்புத்துரில் இருக்கிறாள். மகன் திருமணமாகி பெங்களூரில். மூத்த கொழுந்தன் பக்கத்தில் நாலு தெரு தள்ளி வீடுவாங்கி குடியிருக்கிறான். எப்போதாவது வருவாங்க. எனக்கும் பேரப்பிள்ளைகள் வந்தாச்சு. கணவருக்கும் ரிட்டையர்மென்ட் ஆயாச்சு. இப்போ ஒரு மாதம் பெங்களூர்… ஒரு மாதம் இந்த ஊரில்… அடுத்த மாதம் கோயம்புத்தூர் இதுதான் வாழ்க்கை ஆகிப் போச்சு. இங்கே இருந்தால் ஊரிலே உறவிலே உள்ள குடும்ப விசேஷங்களில் கலந்துக்கிறது. இல்லையென்றால் ஊருக்கு வந்த பிறகு அவங்க அவங்க வீட்டிலே போய் பாக்கிறத்துன்னு ஆகிப் போச்சு.

எப்படியிருந்த வீடு… எப்போதும் அம்மா, மைனி என்ற குரலோடு பத்மா பத்மா என்ற அத்தை மாமாவின் குரல்கள் எல்லாம் கனவாகிப் போச்சு. இதுதான் காலசக்கரத்தின் சுழற்சி போலும். பெருமூச்சு விட்டாள். கடைக்கு சென்ற கணவன் வந்தான். என்ன பத்மா இருந்த இடத்திலேயே இருக்கே. வழியிலே பார்த்தவங்கக்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு நானே நேரமாச்சு என்று வாறேன் என்றான். ஏங்க நான் இருந்த இடத்திலேயே இருந்து முப்பது வருஷத்தை கடந்து வந்திருக்கின்றேன் என்றாள் பத்மா.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *