– கை. செல்லத்தங்கம்
நகரின் மையப்பகுதியில் செயல்படும் ஒரு பிரபல இதயநோய் மருத்துவமனை உள்ளது. மாடியில் தான் மருத்துவர் அறை. அங்குள்ள ஹாலில் தான் வெளிநோயாளிகள் காத்திருக்க வேண்டும். மருத்துவரோ வளர்ந்து வரும் இதயநோய் சிறப்பு மருத்துவர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிறப்பு ஆலோசனைக்காகவும், அறுவை சிகிச்சைக்காகவும் சென்று விடுவார். பார்வை நேரம் என்பது பிற்பகல் தான். மூன்று மணி என்று நேரப்பலகையில் போட்டு இருந்தாலும் இரவு வரை காத்திருக்க வேண்டும். அவரது தேவை பல மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டது. காத்திருப்பு அறையில் மருத்துவசேவையில் காத்திருப்பது தவிர்க்க முடியாதது என்றும் ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருக்கும்.
நான் எனக்கு தெரிந்த சகோதரி ஒருவரின் மருத்துவ ஆலோசனைக்காக சென்றிருந்தேன். அங்கே காத்திருந்தவர்களால் அறை நிறைந்திருந்தது. பல்வேறு விதமான கைபேசி குரலைகள் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கைபேசியுடனேயே லயித்திருந்தனர். நான் வெளியே வந்து சாலையை பார்ப்போமே என்று பார்த்தால் ஒரே பரபரப்பு . பல்வேறு வாகனங்களின் இரைச்சல். மாறி மாறி ஒரே விளக்குகள். மருத்துவமனைக்கு நேரெதிரில் சாலைக்கு அந்த பக்கம் பிரபலமான ஒரு மாலை உணவுக்கடை சுருக்கமாக சொன்னால் புரோட்டா கடை. ஒரே பரபரபப்பு கூட்டம். கடைக்கு வெளியே பலர் காத்திருக்கின்றனர். இரு சக்கர வாகனத்தில் உணவை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் விற்பனைப் பிரதிநிதிகள். வண்டியின் பின்புறம் மிகப்பெரிய கூண்டுப்பை. அவரவர் பணி செய்யும் நிறுவனப் பெயரோடு கையில் பார்சலோடு பலர் வெளியே வருகிறார்கள். பலர் உள்ளே செல்கிறார்கள். அந்த சமையலின் நெடி மூக்கைத் துளைக்கிறது. அசைவப்பிரியர்கள் அதைத் தாண்டி செல்வது சற்று சிரமம் தான். ஏன் இந்த கூட்டம்? ஏன் இந்த அவசரம்.
இருபது வருடங்களுக்கு முன்னால் உள்ள நிலைமையை யோசித்தேன். அப்போதும் ரோட்டோர புரோட்டா கடைகள் அதிகம் தான். ஆனால் இந்த அளவு கூட்டம் இல்லை. குடிமகன்கள் தான் கடையை ஆக்கிரமித்திருப்பார்கள். சிலர் வாங்கி செல்வார்கள். ஆனாலும் வெறிச்சோடி இருப்பதில்லை. எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். நான் பணிபுரிந்த நிறுவனம் சார்ந்து இருவர் கோவை மாவட்டத்தை சார்ந்தவர். குமரியில் குடும்பத்தோடு தங்கியிருந்தார். சகஜமாக பேசி பழகக் கூடியவர்கள். வந்த புதிதில் ஏனுங்க உங்க ஊரிலே பெண்கள் வீட்டிலே சமைக்கிறதில்லையா? ராத்திரியானா எவ்வளவு புரோட்டாக் கடைகள் என்னா கூட்டம். ஹோட்டலில் கூட்டம் என ஆச்சரியத்தோடு கேட்டார்.
நானும் எனது சக தோழியான பணியாளரும் சார் எங்க ஊர் ஆணுங்க மனைவியை சமைக்க விடுகிறதில்லைங்க… ஏன்னா அவர்களும் வேலைக்கு போய்க்கிட்டு சோர்வா தானே வீட்டுக்கு வருவாங்க ன்னு கேலியாக கூறி சிரித்தோம். அவர் இப்போது பார்த்தால் என்ன சொல்வார் என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்தது. கூடவே சோகமும் வந்தது. ஏனெனில் அவர் ஒரு விபத்தில் வீட்டிலிருந்த ஒரு மகனைத் தவிர குடும்பத்தோடு இறந்து விட்டார்.
இன்றைக்கு உணவு விடுதிகள் அதிகம். உணவு விற்பனை சார்ந்த தொழில் தொடங்கி தரமானதாக உணவு வழங்கினால் தோல்வி ஏற்படுவதில்லை. மேலும் வயதானவர்கள், நோயாளிகள், சமைக்க துணையில்லாமல் தனிமையில் இருப்பவர்கள் என அனைவருக்குமே இல்லம் தேடியே அந்தந்த வேளைக்கு சூடாக விரும்பும் உணவு விற்பனை பிரதிநிதிகள் மூலம் வருகிறது. துட்டு மட்டும் இருந்தால் போதும் கைபேசியில் ஒரு தட்டு, பத்து நிமிடத்தில் தட்டில் சாப்பாடு. கடைக்கு சென்றால் கூட காத்திருக்க வேண்டும். இந்த உணவு விநியோகம் பலருக்கு வரப்பிரசாதம். பல இளைஞர் முதல் நடுத்தர வயதினருக்கு வேலைவாய்ப்பு, மனதிற்குள் நினைவலைகள் … மருத்துவர் வந்து விட்டார். திரும்பி வந்து இருக்கையில் காத்திருந்தேன். நேரமானால் எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சப்பாத்தி ஆர்டர் பண்ண வேண்டியது தான்.
Leave a Reply