விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்

விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்

  • By Magazine
  • |

– காளீஸ்வர்

நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் அந்த அனைத்து புகைப்படங்களையும் உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கோ, புத்தகங்களுக்கோ, அவ்வளவு ஏன் பள்ளிக்கூட செயல்பாடுகளுக்கு கூட நேரடியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டவை.

                ஆனால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிப்பீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் நீங்கள் புகைப்படங்களை இணைக்க முடியும். கட்டுரைகளை எழுத முடியும். ஆதாரப்பூர்வ தகவல்களை வழங்க முடியும். தமிழில் விக்கிப்பீடியா செழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். விக்கிபீடியா எழுத்தாளர்களுக்கு அவ்வப்போது விக்கிபீடியா அறக்கட்டளையானது பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

                அதேபோல விக்கிபீடியாவில் புகைப்படங்களையும் உங்களால் கிடைக்க முடியும். ஒரு சிலர் விக்கிபீடியாவில் 10, 20 புகைப்படங்களை இணைத்து விட்டு சென்று விடுவார்கள். சிலர் அதிகபட்சமாக 100 புகைப்படங்களை இணைப்பார்கள். ஆனால் கடந்த 11 வருடமாக தமிழகத்தை சேர்ந்த பிரபல அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்கள் தற்பொழுது வரை சுமார் 24000 + புகைப்படங்களை விக்கிபீடியாவில் இணைத்திருக்கிறார்.

                இவ்வாறு புகைப்படங்களை இணைப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஒவ்வொரு புகைப்படத்திற்குமான முறையான தகவல்களை நாம் வழங்க வேண்டும். உதாரணமாக, ஒரு தாவரத்தின் புகைப்படத்தை நீங்கள் விக்கிபீடியாவை இணைக்கும் போது, அந்தத் தாவரத்தின் சிற்றினம், பேரினம், வகைப்பாடு, புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ஆகிய தகவல்களை இணைக்க வேண்டும்.

                சிலர் ஏற்கனவே இருக்கக்கூடிய படங்களை அதே தகவல்களை வைத்து மீண்டும் மீண்டும் இணைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏற்காடு இளங்கோ அவர்கள் இதுவரை விக்கிப்பீடியாவில் இணைக்கப்படாத பல தாவரங்களை இணைத்து இருக்கிறார். மத்திய அரசின் தாவரவியல் மதிப்பாய்வுத் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், தாவரங்களை அடையாளம் காண்பதில் தனி அனுபவம் கொண்டவர்.

                தன்னுடைய சொந்த செலவில் வாங்கி இருக்கும் கேமரா, பல இடங்களுக்கும் பல மணி நேரத்தை செலவிட்டு பயணித்து அரிய வகை தாவரங்கள், விலங்குகள், வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்ட அவற்றை புகைப்படம் எடுத்து இணையத்தில் இலவசமாக இணைத்து வருகிறார். இவரது புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளில் இலவசமாக பயன்படுத்த முடியும். இவ்விதம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் பல ஆய்வுக்கு கட்டுரைகளிலும் ஏற்காடு இளங்கோ அவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

                மேலும், இத்தகைய புகைப்படங்களை இணைக்கும் போது பல்வேறு புதிய இனங்களையும் அடையாளம் கண்டு இருக்கிறார். என்னிடம் ஒருநாள் பேசும் போது, ஒவ்வொரு புகைப்படத்தை இணைப்பதற்கும் சுமார் பத்து நிமிடத்திற்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொள்வதாக சொன்னார். மேலும், ஒரு ஊரில் புதியதாக ஒரு தாவரம் அல்லது வரலாற்றுச் சின்னம் இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக அங்கு சென்று புகைப்படங்களை எடுத்து விட்டு இணையத்தில் இணைத்து விடுவார். இவை அனைத்தையும், பொதுநல நோக்கில் செய்து வருகிறார்.

                ஆனால், அவருடைய பணி வெறும் புகைப்படங்களை இணைப்பதோடு நின்று விடவில்லை. தற்பொழுது வரை 121 புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார். சுமார் 40 புத்தகங்களை இணையத்தில் இலவசமாக ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் எனும் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் அவருடைய புத்தகங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்காக, அறிவியல் வளர்ச்சிக்காக நுணுக்கமான பல தலைப்புகளையும் தேர்ந்தெடுத்து தொடர்ந்து எழுதி வருகிறார். ஏற்காடு இளங்கோ போன்றவர்கள் எதார்த்தமான சாதனையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *