உயர்ந்த கனவு

உயர்ந்த கனவு

  • By Magazine
  • |

– சஜிபிரபு மாறச்சன்

குடியரசு தலைவர் அப்துல்கலாம் தான் போகும் இடமெல்லாம் கனவு காணுங்கள் என்றார்.  திரும்ப திரும்ப ஒரே கனவையே பார்த்தால் சக்தி வாய்ந்த எண்ணங்களாக உருவெடுத்து உங்களை செயலாற்றல் மிக்க மனிதராக உயர்த்தி விடும் என்று கூறினார்.

அப்துல்கலாம் அவர்களுக்கு மட்டும் கனவுகள் நடந்து விடும் என்று நினைக்காதீர்கள். உங்களாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்ததை அடைய முடியும்.

இதற்கு எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் இக்காய்கறிகள் எவ்வளவு வளர்ந்துள்ளன என்று காலையிலேயே போய் பார்ப்போம். அவற்றிற்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி வளர்ப்போம். நாளுக்கு நாள் அவை வளர்ந்து பல மடங்காக நமக்கு பலன் தரும்.

இதைப் போல் தான் நாமும் நமது கனவுவிதையை நெஞ்சில் உறுதியாக பதிவு செய்து ஒவ்வொரு நாளும் அதற்கு ஊட்டம் கொடுத்து அதன் வளர்ச்சியை மனதில் பார்க்க வேண்டும்.

சினிமா, நாடகம், குறும்படங்கள் இவைகள் எல்லாம் உடனே படமாக்கி விடமாட்டார்கள். மேடையில் நடித்ததும் அதை படமாக்கி விடமாட்டார்கள். ஒவ்வொன்றும் திரும்ப திரும்ப எடுத்து பலமுறை ஒத்திகை பார்த்த பிறகே படமாக்கப்படுகிறது. ஒத்திகை பார்த்த பிறகு தான் மேடையில் நடிக்கப்படுகிறது.

இதே போல் தான் நம் வெற்றியும் மனதில் ஒவ்வொரு நாளும் காட்சியாக பார்த்த பிறகு நிஜத்தில் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். பிறகு நிஜத்தில் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். இரவு படுக்கப் போகும் போது மனதை ஓய்வாக்கிக் கொண்டு நமது இலட்சியக் கனவை அடைந்து விட்டோம் என்ற நம்பிக்கையுடன் கற்பனையில் மீண்டும் காட்சியாக பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் தூங்க வேண்டும். இப்படிதான் நமது கனவு விதைகளை ஊட்டச்சத்து கொண்டு வளர்க்கும் விதம் கற்பனையில் திரும்ப திரும்ப ஒரே காட்சியை நம்பிக்கையுடன் பார்ப்பதால், அது சக்தி வாய்ந்த எண்ணமாக ஆழ்மனதில் உருவாகி உங்களை விடாமுயற்சியுடன் செயல்பட வைத்து நீங்கள் விரும்பியதைப் பெற்றுத் தந்து விடுகிறது.

எப்போதும் பெரிதாக சிந்தியுங்கள். உயர்ந்த எண்ணங்கள் மலரும் சோலை என்று பாரதிதாசன் நம் மனதை பற்றி குறிப்பிடுகிறார்.

உங்கள் கனவை, இலட்சியத்தை, உயர்வை ஒவ்வொரு நாளும்  செயலாற்றல் கொண்ட சக்தி மிக்க எண்ணங்களாக வளர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். இதுதான் வெற்றிக்கும், தீராத பிரச்சனைகளுக்கும், நோய்களுக்கும் கூட மிகச் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும். கனவுகளிலிருந்து தான் கடமைகள் துவங்குகின்றன.

நல்ல உயர்ந்த கனவை நினைத்து, விதைத்து, அதை அற்புதமாக அறுவடை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *