பேசும் தென்றல்

  • By Magazine
  • |

கார்த்திகாவின் பேட்டி

பூ.வ.தமிழ்க்கனல்

பேசும் தென்றல்” என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள், கார்த்திகாவுக்கு. அதற்கேற்ப இவரது பேச்சில் தமிழ் தென்றலாகத் தவழ்கிறது.

இலக்கியம், பட்டிமன்றம், தன் முன்னேற்றம் என மேடைகள் தோறும், அரங்கங்கள் தோறும் பேச்சு வீச்சைக் காட்டும் கார்த்திகா, வரிசையாய் வந்து விழும் வார்த்தைச் சரம், அதில் வைரக்கற்களாய் ஒளிரும் கருத்து ஆழம் என்று இவர் பேச்சில் அறிவு மின்னல் தெறிக்கிறது.

உங்கள் ஊர், குடும்பம் பற்றி,,,

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி எனது சொந்த ஊர். ‘கல்லாலே வேலியிட்டால் கலையழகு இல்லை என்று நெல்லாலே வேலியிட்ட” நெல்லைச் சீமையில் பிறந்தது, நான் பெற்ற மகிழ்ச்சி. அன்பான பெற்றோர், காதலான கணவர், கனிவான அக்கா, மகிழ்வூட்டும் மகள் என்று இனிய, எளிய குடும்பம் எங்களுடையது.

படிப்பு

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை தமிழ், முதுநிலை இயற்பியல் பயின்றேன். இயற்பியல் படிப்பு, அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள, தமிழ்ப் படிப்பு, அற உணர்வை அரவணைத்துக் கொள்ள. தற்போது தமிழில் முனைவர் பட்ட ஆய்வைச் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டிருக்கிறேன். ‘கல்யாண்சி கவிதைகளில் அகப்பொருள் எடுத்துரைப்பியல்” என்ற தலைப்பில் அந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்.

பேச்சுத் துறைக்கு வந்தது எப்படி?

நான் இயல்பாகவே கலகல பேச்சாளி. சிறுவயதில் இருந்தே அப்படித்தான். அம்மா கூட, ‘எப்போது பார்த்தாலும் ஏன் தொண தொணன்னு பேசிக்கிட்டிருக்கே வாயாடி” என்று என்னைச் செல்லமாய்ச் சீண்டுவார். அந்த லொட லொட பேச்சுதான், இன்று முறையான பேச்சாய் மாறியிருக்கிறது. பள்ளிக் காலத்தில் முதல்முறையாய், மாணவர்களுடன் ஒரு பேச்சுப் போட்டியில் போட்டியிட்டு வென்றேன். தொடர்ந்து, மாவட்ட, மாநில அளவுக்கு உயர்ந்தேன். பேச்சுடன், கவிதை, கட்டுரை எழுதுவதிலும் எனக்கு ஆர்வமும் திறமையும் உண்டு.

உங்கள் பேச்சுப் பயணத்தில் முதல் முக்கியத் திருப்புமுனை எது?

மேல்நிலை வகுப்பு படிக்கும் போது,‘கருணாநிதியின் புகழுக்குக் காரணம் அவரது இலக்கியப் பணியே” என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் வென்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் கையால் பரிசு பெற்றேன். தொடர்ந்து மாநில அளவில் வென்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியிடம் பரிசு பெற்றேன். வாழ்வில் மறக்க முடியாத தருணமும் முதல் முக்கியத் திருப்புமுனையும் அதுதான்.

உங்களுக்குப் ‘பேசும் தென்றல்” என்ற பட்டம் கொடுத்தது யார்?

கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, ஆண்டுதோறும் தங்கள் ஆண்டுவிழாவில் ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்துப் பேசச் செய்வதையும் அவருக்கு ஒரு பட்டம் வழங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி கடந்த 2017-ஆம் ஆண்டு அவர்கள் வழங்கிய ‘பேசும் தென்றல்” பட்டம், எனக்கு நிலைத்து விட்டது.

இலக்கிய உரை, தன்னம்பிக்கைப் பேச்சு இவற்றில் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமானது எது?

இவை எல்லாமே எனக்குப் பிடிக்கும் என்றாலும் நாட்டு மரத்தைத் தாங்கும் நாளைய விழுதுகளான இன்றைய இளந்தலை முறையினருக்கு உரமிடும் தன்முன்னேற்றப் பேச்சு எனக்குப் பெரிதும் விருப்பமானது. அதனாலேயே புத்தக நேசத்தைச் சுவாசமாக்கி, தகவல்களைத் திரட்டிக் கொள்கிறேன். பயணங்கள் தோறும் புத்தகங்களே என்னுடைய வழித்துணை. புத்தகத்துடன், சன்னலோர இருக்கையும் கிடைத்துவிட்டால் சுகம். ஒன்றிரண்டு பயணங்களில் ஒரு புத்தகத்தைப் படித்துவிடுவேன். இந்த ஆண்டு இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துப் படிப்பதும் என் வழக்கம்.

உங்களுக்குப் பிடித்தமான பேச்சாளர்கள்?

உயரமான இடங்களில் இருந்து, இரசிகர்களின் உள்ளங்களைச் சிறைபிடிக்கும் சிறந்த பேச்சாளர்கள் அனைவருமே எனக்குப் பிடித்தமானவர்கள்தான். அவர்களில், இலக்கியத்தில் வாரியார், இலங்கை செயராசு ஆகியோருக்கு என் மனதில் தனியிடம் உண்டு.

காமராசர் பிறந்தநாளில் பிறந்த என் மகள் சுபக்சா, பள்ளயில் காமராசர் பற்றிப் பேசி பரிசு வென்றாள். அப்போது கீழே அமர்ந்து அவள் பேச்சை இரசித்த நான் சிலிர்த்துப் போனேன். இப்போது எனக்குப் பிடித்தமான பேச்சாளர்கள் பட்டியலில் என் மகளும் இடம் பிடித்து விட்டாள்.

நீங்கள் பெற்ற பாராட்டுகளில் மறக்க முடியாதது?

அண்மையில் மதுரையில் ‘மாமதுரைத் திருவிழா” நடத்தினார்கள். அதில் பள்ளி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வழங்கும் விதமாக 3 ஆண் பேச்சாளர்களும் ஒரே பெண் பேச்சாளராக நானும் பேசினோம். அனுபவமும் பேச்சாற்றலும் மிக்க அந்த ஆண் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுத்து நான் பேசினேன். மாணவர்கள் மகிழ்ந்து என் பேச்சில் ஒன்றிப் போனார்கள். பேசி முடித்ததும் நான் ஒரு சிங்கப்பெண்ணாய் முழங்கியதாகப் பலரும் பாராட்டினார்கள். என் மனதில் தங்கிய மகிழ்வு நிகழ்வாக அது ஆகிவிட்டது.

கடந்த வாரம் இலங்கை சென்று வந்தீர்கள் அல்லவா?

ஆமாம்; நான் சென்ற முதல் வெளிநாடு, இலங்கை. இயற்கை அன்னையின் ஆட்சி முழுமையாய் நடக்கும் அழகிய நாடு அது. அந்த நாட்டு மக்களும் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள், இனிமையானவர்கள். அவர்களின் அன்பை நேரடியாக உணரும் வாய்ப்பாக இந்தப் பயணமும் அமைந்தன. அடுத்தடுத்து மாணவர்கள் நடுவில்  தன்னம்பிக்கைப் பேச்சு என்று பரபரப்பாய், ஆனால் சுவாரசியமாய் நாள்கள் பறந்தன. தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழ் மக்களுக்கு எனது நன்றி. குறிப்பாக, அங்கு எனது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்த, மலையகக் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவர் நடேசன் சுந்தரேசனுக்கு.

உங்களின் பேச்சுப் பயணத்தில் உறுதுணையாக உள்ளவர்கள்?

எனது பேச்சின் முதல் இரசிகரும் விமர்சகருமான கணவர் இராசா, பெற்றோர், என்னுடன் இணைந்து பேசும் பேச்சாளருமான சகோதரி இராசேசுவரி, மகள் என்று எங்கள் குடும்பத்தினர் அனைவருமே எனது பின்பலமாய் உள்ளார்கள். கு.ஞானசம்மந்தன், கவிதா போன்ற முன்னத்தி ஏர்களும் எங்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

கடைசியாக, பேச்சாற்றலைப் பெண்கள் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவீர்கள்? மனித சமுதாயத்தில் எந்த நல்ல மாற்றமுமே தானாக மலர்ந்து விடவில்லை. எல்லாமே போராடிப் போராடி, குரல் கொடுத்துக் கொடுத்துப் பெற்றவைதான். பெண்கள் தங்கள் சிக்கல்களை, தேவைகளைப் பேசவும் அநீதிகளைச் சாடவும் பேச்சுத்திறன் அவசியம். அதற்குச் சிறந்த பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். சமூகத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு பேச்சாளராக நாம் எப்போதும் அறம் சார்ந்து பேச வேண்டும். கேட்கும் பார்வையாளாரின் வாழ்வில் சிறு நல்ல தாக்கத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், நேர்மறையாகப் பேச வேண்டும். நான் எப்போதும் இந்த தளத்தில் நின்றுதான் பேசுகிறேன். அதையே, பேச்சாளராக விரும்பும் சக பெண்களுக்கும் ஆலோசனையாகக் கூறுகிறேன். தென்றல் தணிகிறது. ஆனால் அதன் தாக்கம் மனதில் தங்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *