கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்

கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்

  • By Magazine
  • |

பழனி அரங்கசாமி

பிறப்பினாலும், வளர்ச்சியினாலும், தோற்றத்தினாலும் மனிதர் அனைவரும் ஒன்றே என்றாலும், தனி ஒருவன் கல்வி கற்று அறிவும் ஆற்றலும் பெற்று உயர்ந்து நிற்கும் போது, அவனை உலகம் மதித்துப் போற்றுகிறது. எனவே சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் பெருமைக்கும், புகழுக்கும், அறிவுக்கும் கல்வி ஒரு தலையாய காரணம் ஆகும். அறவுடையோன்வழி அரசும் செல்லும் என்பது அசைக்க முடியாத உண்மை.

கிறிஸ்துவத்துக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கி.மு 15- ஆம் நூற்றாண்டினை இந்திய வரலாற்றில் வேதகாலம் என்று குறிப்பிடுவர். மக்கள் சமுதாயம் வனாந்தரகங்களிலும் கால்நடை வளர்த்தும், நாடோடியாகவும் பிழைத்து கொண்டிருந்தது. அக்காலத்தில் எழுதும் கலை இல்லை. கற்றுணர்ந்த வடவாரியர் இறைவணக்கத்துக்குரிய பாடல்களை வாய்மொழியாகவே பாடி வந்தனர். பிற்காலத்தில் ரிக் வேதமேயன்றி அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் யசுர்,சாம, அதர்வண வேதங்களும் தோன்றின. இதனால் தான் பன்னெடுங்காலம் வாய்மொழியாகவே உயிரோடிருந்த இந்த நான் மறைகளை எழுதாக்கிளவி என்று கூறுவர்.

உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்னும் புறநானூற்று பாடலும் கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் கல்வி பண்டைய காலத்தில் குருகுல முறையினை சுட்டிக்காட்டுக்கிறது. மாணவன் தனக்கு பாடம் போதிக்கும் ஆசிரியனிடம் பணிவுடையனாய், இன்சொல் உடையவனாய் தன்னால் இயன்ற பொருளைக் கொடுத்து ஆசிரியனுக்கு தொண்டு செய்து கல்வி கற்க வேண்டும். பணிவும் இன்சொல்லும் கருத்தும், கவனமும் கல்வி கற்றலுக்குரிய அடிப்படை குணங்கள் ஆகும்,

இப்படிக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகிய போது அனைவரும் அமர்ந்து ஆசிரியரிடம் ஓரிடத்தில் பாடம் கேட்ட காலம் வந்தபோது, திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தோன்றின. பேனாவும், பேப்பரும் இல்லாத காலம். திண்ணையில் மணலைப் பரப்பி ஆட்காட்டி விரலினால் எழுதப் பழகிக் கொடுப்பார்கள். நிகண்டு போன்ற சொல்லடைவு நூல்களை மனதில் ஏற்றிக் கொண்டு நெட்டுருப் பண்ணச் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாடல் வரிகளை மாணவர்கள் மனனம் செய்து ஒப்பிப்பார்கள். நினைவாற்றல் என்பது இளமையிலே மாணவர்கள் மனதில் ஏற்றிக் கொண்ட ஒரு அரிய கலையாக இருந்தது. இப்படிப் படித்து முன்னேறிய அறிஞர்களைத் தான் ஏழாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப்படித்த விரகர் என்று பாராட்டுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் மாணவர்களை இருப்பால் ஆகிய எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலையில் எழுதப் பழக்குவார்கள்.

எழுதும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் பனை ஓலை எகிப்து, மெசபட்டோமியா போன்ற நாடுகளில் பாப்பிரஸ் எனும் மரத்தின் பட்டை அராபிய நாடுகளில் ஆட்டுத்தோலை பதப்படுத்தி அதில் எழுதினார்கள். இந்தியாவிலேயே சாமானியர்கள் பனை ஓலையில் எழுதினாலும், அரசர்களும் செல்வந்தர்களும் தமது உத்தரவுகளை, அறிக்கைகளை, பட்டயங்களை செப்பேடுகளில் எழுதினர். அரசர்களின் பொதுச் செய்திகள், நிபந்தங்கள், ஆணைகள், ஆவணங்கள் ஆகியவற்றை கல்லிலும் செதுக்கினர். இப்படி எழுத்துக்கும், படிப்புக்கும், கல்விக்கும் இந்தியநாட்டின் வரலாற்றில் ஒரு தனி மரபும் பாரம்பரியமும் உள்ளன.

இந்த பாரம்பரியக்கல்வி தான், பன்னெடுங்காலம் இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. வெள்ளையராட்சியின் உச்சகட்டத்தில் மெக்காலே 1835 ஆம் ஆண்டில் துவக்கிய கல்வி முறையினால் இந்தியா முழுவதும் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஆங்கில மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை இருபதுக்கு மேற்பட்ட மொழிகளாலும் ராஜாக்கள், ஜமீன்தார்களின் ஆட்சியினாலும் நடப்பு நிலையில் இந்தியா வேறுபட்டுக் கிடந்தது. அப்போது இந்தியா ஒரே நாடு என்கிற மொழி ரீதியான நாட்டுணர்வு வருவற்கு ஒரு காரணம் ஆங்கில மொழி தான் என்பதோடு இந்தியாவின் பெரும் நகரங்களான மதராசியிலும், பம்பாயிலும் அப்போதைய இந்தியத் தலைநகராக இருந்த கல்கத்தாவிலும் முதன் முதலாக ஏற்படுத்தப் பெற்ற பல்கலைக்கழகங்களும் மற்றொரு காரணமாகும்.

இவையிரண்டு காரணங்களால் ஆங்காங்கு வட்டார மொழிகள் பயிற்றுவிக்கப்பட்ட நிலைமை மாறியதோடு, பரவலாக படித்தோரிடை ஆங்கிலமே நாடு தழுவிய பொதுமொழியாகி விட்டது. செய்தித்தாள்களும், வானொலியும் ஆங்கிலக் கல்விக்கு அனுசரணையாக அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பின்னும், ஏறத்தாழ ஆங்கிலத்தை பொது மொழியைக் கொண்ட கல்வி முறையே நீடித்தது. இப்போதும் சட்டரீதியாக இந்தி மொழியோடு ஆங்கிலமும் இணை மொழியாக நீடித்தது. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகின்ற வரை கால வரையறையின்றி ஆங்கிலமும் இணைமொழியாக நீடிக்கும் என்று நேருஜி வாக்குறுதி கொடுத்த பின்னரே 1965- இல் தமிழ்நாடு முழுதும் நிகழ்ந்த பயங்கரமான இந்தி எதிர்ப்புப் போராட்டமும், கொந்தளிப்பும் அடங்கியது. அப்போது எழுபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாயினர் என்பது ஒரு வரலாற்று செய்தி ஆகி விட்டது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வளர்க்கப்பட்ட கல்வி போதனையில் சற்று மாற்றம் ஏற்பட்டு சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் அஞ்சல் வழியில் தொலைநிலைக்கல்வி தோற்றுவிக்கப்பட்டது. உயர்கல்வியை இடைநிலையில் விட்டு விட்டோரும், வீட்டுப்பணியில் முழ்கிக்கிடந்த பெண்டிரும், பணியில் அமர்ந்துள்ளோரும் இந்த அஞ்சல் வழிக்கல்வியில் பயின்று பட்டம் பெற வாய்ப்புக் கிடைத்தது. படிப்பு வசதி இல்லாத முகமதிய மற்றும் இந்துப் பெண்டிரும், சிறைவாழ் கைமிகளும் கூட அஞ்சல் வழியில் பயிலுகின்றனர். இப்படி கல்வியின் வரலாறு, குருகுலக்கல்வி, அயலவர் துவக்கிய பள்ளிக்கல்வி அனைவருக்குமான தொலைநிலைக் கல்வி, காணொலிக்கல்வி என்று மாறுபட்டாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.

குருகுலக் கல்வி மாணவர்கள் ஆசிரியர்களை நாடிச் சென்றார்கள். பள்ளிக் கல்வியிலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடிக் கல்வி நிலையங்களுக்குப் போகின்றனர். இன்றைய அறிவியல் யுகத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய இருசாரருமே கணினியை நோக்கிச் செல்கிறார்கள். தொலைத்தூரத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளோரும் கணினி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றாலும், வகுப்பில் நேரடியாக கவனம் சிதறாமல் அமர்ந்து கேட்டலும், வினா எழுப்புதலும் விடை பெறுதலும் ஆகிய வசதி கணினி வழிக்கல்வி முறையில் அத்துணைச் சிறப்பாக இருக்காது. காணொலிக் காட்சியினால் கல்வி பெறுவது இரண்டாவது தரமானது.

இந்திய நாட்டின் ஒன்றிய அரசு 2025- ஆம் ஆண்டியிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகிற புதியக் கல்வி கொள்கை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதன் வழி அகில உலக மொழியாக உள்ள ஆங்கிலம் நமது கல்வி நிலையங்களிலிருந்து காலப்போக்கில் விலக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது. எனவே பல்வேறு மொழிகள் பேசப்படும் நம் நாட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்கிற முறையில் இந்தப் புதிய கல்விக் கொள்கையின் தரமும் உயர்வும் இருத்தல் வேண்டும்.

நடுவண் அரசு நாடு முழுவதும் இனி பின்பற்றுதலுக்கான புதிய கல்விக் கொள்கையினை அறிவித்து பற்பல மாநிலங்களில் அது நடைமுறையிலுள்ளது. தொடக்கக் கல்வியில் படிப்பினையும், எழுத்தினையும் பயிற்றுவிப்பதோடு எண்ணியல் திறனை ( ஞிவீரீவீtணீறீ றீமீணீக்ஷீஸீவீஸீரீ) வளர்ப்பதும் இதன் அடிப்படை நோக்கமாகும். இதுபற்றிய எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் புதிய கல்விக்கொள்கை. சிறிய வயதில் இருந்தே சுயத்தொழில் செய்வதையும் தொழில் முனைவோருக்கான திறனையும் வளர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதில் சாதி ரீதியான நால்வருண வேறுபாட்டை மீண்டும் நடுவண் அரசினர் நயமாகப் புகுத்துகிறார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது. காலையில் பள்ளியில் பயின்று, மாலையில் குடும்பத்தில் செய்யும் பாரம்பரியமான தொழிலைப் பின்பற்றி பழக வேண்டும் என்கிற குலக்கல்வி திட்டத்தை 1953-ஆம் ஆண்டு முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி கொண்டு வந்த போது அதனை முழுமூச்சாக பெரியார் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். வண்ணான் மகன் வண்ணானாகவே இருப்பதா என்று கேட்டார் பெரியார். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜியும் தோற்று அவரது மந்திரி சபையும் கலைந்து, சாதீயத்தை வளர்க்கும் இத்திட்டமும் காலாவதியாகி விட்டது. எனவே சமூக சீர்திருத்தத்தை தனது முன்னணிக் கொள்கையாகக் கொண்ட இன்றைய தமிழக அரசு இந்தப்புதிய கல்விக் கொள்கையினை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

2025-ஆம் ஆண்டின் புதிய கல்விக்கொள்கையில், பள்ளிப்பருவத்திலேயே தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளைக்  கற்றுக் கொள்ள வேண்டும் என்பது திட்டம். அறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பின்பற்றப்படுகிறது. இந்த புதிய கல்விக்கொள்கையில் ஒரு நயவஞ்சக வேலையும் ஒளிந்து கொண்டுள்ளது. அது மெள்ள ஆங்கிலத்தை வெளியேற்றி அங்கு சமஸ்கிருதத்தைப் புகுத்துகின்ற திட்டம். அதனை வெளிப்படையாகச் சொல்லாமல், ஆங்கிலம் பயிலுவதற்குப் புகுத்துகின்ற திட்டம். அதனை வெளிப்படையாகச் சொல்லாமல், ஆங்கிலம் பயிலுவதற்கு ஒரு பள்ளியில் பதினைந்து மாணவருக்கு குறைவாக இருந்தால், அவர்களை ஆங்கிலம் பயிற்றுவிக்கும் வேறு பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் வேறொரு இந்திய மொழியினை பயிற்றுவிக்க வேண்டும் என்பது தான் அத்திட்டம். அதாவது சமஸ்கிருதம் என்று அதனைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார்கள். இதனைப் பின்பற்றினால், காலப்போக்கில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு என்று இந்தி அரசினர் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுப்பார்கள். இப்போதும் கூட உலக வழக்கு அழிந்து ஒழிந்து நிற்கும் வடமொழியின் வளர்ச்சிக்கு இரண்டாயிரம் கோடிக்கு மேல் அள்ளிக் கொடுத்துள்ள நடுவண் அரசு தமிழுக்கு 75 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இந்த ஓரவஞ்சனை ஏன் என்று கேட்டால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசீய கல்விக் கொள்கையினைப் பின்பற்றினால் நீங்கள் கேட்ட தொகையைக் கொடுப்போம் என்கிறார். தமிழக அரசோ புதிய கல்விக் கொள்ளைகைய ஒதுக்கி சட்டச்சபையில் தமிழ்நாட்டுக்கென்று சமூக நீதியை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் மாநில கல்விக் கொள்கையினை நிறைவேற்றி அதனைப் பின்பற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *