புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்

புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்

  • By Magazine
  • |

பண்டை சேரநாட்டின் தெற்குபகுதியில் ஆய்நாடாகவும், வேணாடாகவும் வரலாறு கண்ட தற்போதைய குமரிமண்ணானது , குறிப்பாக குமரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், தமிழரின் உயரிய கலைகளிலொன்றான வர்மக் கலையின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக போரில் தங்களைப் பாதுகாக்கவும், எதிரியை முடக்கவும் இதைப் பயன்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் இதே அறிவு பயன்பட்டது. இதனால் போரும் மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவ மரபு இங்கு உருவானது.

இந்த உடல்-மனம்-திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு பெரிய சிந்தனைத் தளம் ஆயகலைகள் 64 என்ற கருத்தாகும். பண்டைய இந்திய மரபில் ஒரு மனிதன் முழுமையான கல்வி பெற வேண்டிய 64 கலைகள் குறிப்பிடப்படுகின்றன. இதில் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகள் மட்டுமல்ல; ஓகம், வில்வித்தை, களரி யுத்தக் கலை, மருத்துவ அறிவு, தந்திர-யந்திர அறிவு போன்ற பலதரப்பட்ட திறன்கள் அடங்குகின்றன. உடல் கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு, அழகு உணர்வு, அறிவு வளர்ச்சி ஆகிய அனைத்தையும் இணைக்கும் முழுமையான மனிதக் கல்வி முறை இதன் அடிப்படை. வர்மக்கலை போன்ற உடல் மனம் சார்ந்த ரகசிய அறிவும் இந்த பரந்த கலை மரபின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பார்க்கும்போது, குமரிமண் என்பது வெறும் புவியியல் எல்லை அல்ல; அது சேரர் அரசியல் வலிமை, ஆய் வீர மரபு, வேணாட்டு நிர்வாகத் தொடர்ச்சி, வர்மக்கலையின் ரகசிய அறிவு, 64 கலைகளின் முழுமையான மனித வளர்ச்சி தத்துவம் ஆகிய அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்த வரலாற்று பண்பாட்டு மையமாகும். தென்னிந்திய நாகரிகத்தின் தெற்குக் கடைசி முனை என்ற அடையாளத்தைத் தாண்டி, பல மரபுகள் உருவாகி பரவிய ஒரு தொடக்கப் புள்ளியாக குமரிமண் விளங்குகிறது. இங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் வர்மக்கலை வித்தகர்கள் ஆசான்கள் எனும் சிறப்பு பெயரால் அறியப்பட்டனர். அத்தகைய ஆசான்களுள் ஒருவரும், தமிழ் மருத்துவ பண்டிதருமாக வாழ்ந்த வித்வான்களுள் ஒருவரே, புல்லங்குழி அபூபக்கர் ஆசான் ஆவர்.

கிள்ளியூரின் செம்முதல் அருகே புல்லங்குழி எனும் ஊரில் வாழ்ந்த அபூபக்கர் ஆசானின் காலமாக அறியப்படுவது கி.பி 1619 முதல் 1694 வரையாம். மண்ணின் கலையான தெற்கன் களரியின் மெய்பயிற்று, வர்மக்கலை மற்றும் மருத்துவ முறைகளில் கைதேர்ந்த வல்லுநராக வாழ்ந்துவந்தார்.

இவரது பிரதான சீடராக இருந்தவர் வட்டவிளை, ஆறுதேசத்தை சார்ந்த மாசிலாமணி ஆசான் ஆவார்.

அன்று புல்லங்குழி தேசத்தில் பெருவாரியான வர்மக்கலை வித்வான்கள் வாழ்ந்திருந்தனர். இவர்கள் அளப்பரிய தமிழ்புலமையும்,நெடிய மரபறிவையும் கொண்டிருந்தமையால் பற்பல கிரந்தங்கள் வர்மம் சார்ந்து இயற்றப்பட்டன.

அஃதொப்ப புல்லங்குழி அபூபக்கர் ஆசான் அவர்களால் இயற்றப்பட்டு நமக்குகிடைப்பவை நட்சத்திரகாண்டம் 1200, நட்சத்திர காண்டம் 1500, ஒடிமுறிசாரி 1200 மற்றும் ஒடிமுறிசாரி 800 என்பவையாம்.

இவரது சீடரான வட்டவிளை, ஆறுதேசம் மாசிலாமணி ஆசான் இயற்றிய நூல்களாவன சீவோற்பத்தி காண்டம் மற்றும் அரிவையர் சிந்தாமணி மற்றும் சூதகநூல் என்பவையாம்.

அறம் பாடுதல் எனும் மரபொன்று தமிழ் இலக்கியத்தில் உண்டு. பொதுவாக தமிழ் இலக்கியத்தில் ஒரு புலவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். வஞ்சப்புகழ்ச்சியாக அவ்வாறு எழுதுவதும் உண்டு. இது தவிர புலவர்கள் தாம் நினைக்காமல் எழுதிய ஒரு பாடலின் தவறான பொருள் பலித்துவிடுவதை அறம்பற்றுதல் அல்லது அறமாதல் என்பார்கள்.

இது தொன்மையான தமிழ் நம்பிக்கை. சரியாக சொல்லப்பட்ட வார்த்தை கொல்லும் தன்மை கொண்டது என்பதே இந்த நம்பிக்கையின் ஆதாரம். இது தொல்தமிழ்ப் பண்பாட்டில் சொல் எப்படி மதிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. சொல் எப்போதும் அறத்தின் பக்கமே நிற்கும் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது. புல்லங்குழி அபூபக்கர் ஆசான்,தமது மகளுக்கு திருமணம் செய்விக்க பொன்னும் பொருளும் கொடுத்து உதவுவதாக வாக்குறுதி அளித்திருந்த பிரதான சீடனொருவர் , திருமணநிகழ்வின் கடைசி நேரத்தில் வாக்குமறுதலித்த வெஞ்சினத்தில் எழுந்த 50 பாக்களை கொண்ட கலம்பகத்தை வாயால் பாடி இயற்றியதாகவும் அதனால் அந்த சீடனுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *