– கே.பி.பத்மநாபன்
சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்
சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம்
இதமான விடுதலையின் தென்றல் காற்று
இந்தியமண் மீதினிலே வீசலாச்சு;
முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி
முற்றான இன்பத்தைத் தந்த தென்றல்
எதனாலோ சிறிதுசிறிதாக மாறி
இனியமணம் தனையிழந்து வீசு தின்று!
மதசாதி இனபேதம் கலந்தாலோ
மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ
சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ
சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ
வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ
வாடுகிற ஏழை மிதிபடுவதாலோ
நிதமிங்கே நடக்கின்ற கொடுமையாலே
நிலத்தின்று தென்றலிங்கு நாறிப் போச்சு!
மிதமான நிதி சேர்க்கும் எண்ணத்தோடும்
மெய்யான கருணையன்பு நெஞ்சத்தோடும்
விதவிதமாம் மாந்தர்தம் ஒற்றுமையும்
வேற்றுமையை வளர்த்தாத அரசும் சேர்ந்து
நிதிமிங்கே நாட்டுவளம் மேன்மையாக்கும்
நேர்மையுடன் உழைத்திட்டால் மீண்டுமிங்கே
சுதந்திரத்தின் தென்றலிலே புதுமணம் தான்;
சூழ்மனித நேயத்தின் நறுமணம் தான்!
Leave a Reply