சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்    பி. விஜயகுமார்

முதல் மனைவி இறந்து போயிருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வராது

தற்சமயம் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இது. கணவர் அரசு ஊழியர். அவருக்கு முதல் மனைவி இருந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் கணவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

திடீரென கணவர் இறந்து போகிறார். இப்போது கணவரின் ஓய்வூதியம் பெறுவது சம்மந்தமாக முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் பிரச்சனை வருகிறது. இரண்டாம் மனைவி தனக்கும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமென்று ஒரிசா உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில் வழக்குத் தொடர்ந்தார். தனி நீதிபதியோ இரண்டாம் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும் சட்டம் இல்லை என இரண்டாம் மனைவியின் வழக்கை தள்ளுபடி செய்தார்.

இருப்பினும் இரண்டாம் மனைவி விட்டப்பாடில்லை. அதன் பிறகு தனி நீதிபதி அமர்வு உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே முதல் மனைவியும் இறந்து போகிறார். இதனால் இரண்டாம் மனைவி தமது வழக்கிற்கு வலு சேர்க்கின்ற வகையில் முதல் மனைவியும் இப்போது இறந்துள்ளார். அதனால் நான் மட்டுமே வாரிசு. எனக்குத்தான் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை வைத்தார்.

ஆனால் டிவிசன் பெஞ்சும் இவர் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். ஒரு கணவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும் போது இன்னொருவர் இரண்டாவது  மனைவியாக திருமணம் செய்ய இந்து மத சட்டத்தில் இடமில்லை என்றனர். முதல் மனைவி இறந்திருந்தாலும் கூட ஓய்வூதியம் இரண்டாம் மனைவிக்கு வராது என்றனர். ஒருவேளை முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியை கட்டியிருந்தால் ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றனர். இரண்டாம் திருமணம் முடிந்த பிறகு மனைவி இறந்திருந்தாலும் இரண்டாம் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க சட்டத்தில் இடமில்லை என்றனர். இரண்டாம் மனைவியின் மேல் முறையீடு மனுவும் தள்ளுபடியானது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இன்னொரு வழக்கு இது. கணவர் இறந்ததும் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் மனைவி இரண்டாவதாக ஒருவரை மணந்து அந்த திருமணத்தை பதிவும் செய்துவிட்டார். இந்த விபரம் ஓய்வூதிய அலுவலகத்துக்குத் தெரிய வந்தது. உடனே அப்பெண்ணுக்குரிய குடும்ப ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டனர்.

இதனால் விரக்தியடைந்த அந்த பெண் எங்கெல்லாமோ ஓய்வூதியத்திற்காக மனு கொடுத்துப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இறுதியாக தாம் செய்த இரண்டாம் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று ரத்து செய்துவிட்டு இப்போது நான் விதவையாகத்தான் இருக்கிறேன் கணவர் ஓய்வூதியத்தை வழங்குங்கள் என்று கேட்டுப் பார்த்தார். அலுவலகம் முடியாது என்று மறுத்து விட்டது.

இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஓய்வூதியத்திற்காக வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றமோ தாங்கள் இரண்டாம் திருமணப் பதிவு சான்றிதழை ரத்து செய்திருந்தாலும் இப்போது நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது. உங்களை முதல் கணவரின் வாரிசாக கருத முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அப்பெண்ணுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இவையெல்லாம் சட்டம் தெரியாமல் கவனக்குறைவால் சில பெண்கள் செய்யும் தவறுகள். இரண்டாம் பொண்டாட்டி, இரண்டாம் கல்யாணம் என்றால் அதை கையாள்வதைப் பற்றி பெண்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு காலை வைக்க வேண்டும். இல்லையேல் அதோ கதிதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *