நான்_ நீ_ நாம்   கொச்சி ஹோர்தூஸ்

நான்_ நீ_ நாம்   கொச்சி ஹோர்தூஸ்

  • By Magazine
  • |

நவம்பர்  27_30 ,2025

– கிருஷ்ணகோபால்

வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில்தான் கேரளாவுக்கு சுற்றுலாச் செல்வோம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காலகட்டத்தில் கொச்சியில் நடக்கும்  ஹோர்த்தூஸ் இலக்கிய விழாவுக்கு நண்பர்கள் சென்றோம்.

  சென்னை குருவாயூர் இரயிலில் நண்பர்கள் சிலர் திருநெல்வேலியிலிருந்தும் ,சிலர் இரணியலிலிருந்தும் ஏறினர். நான் நாகர்கோவில் டவுனிலிலிருந்து ஏறினேன்.இரயில் ஏறும் போது இரவு பதினொரு மணி.

 எப்போதுமில்லாத தோணலாய் இரயில் ஒரு  நடமாடும் கூட்டுக்குடும்பம் போல் தோன்றியது.   இடையிடையே ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகை ஒலி எழுந்தது காரணமாக இருக்கலாம்.கொஞ்ச நேரம் சென்றதும்  வெவ்வேறு அலைவரிசையில் குரட்டை ஒலி எழுந்துக் கொண்டிருந்தன.பிறகு ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஏறிய ஒரு கூட்டம் ஆட்கள் பேசிய பேச்சு கடும் மலையாளமாகவும்  மொழியில் இசையும் ஊடுபாவியிருந்தது .நண்பரிடம் இது குறித்து விசாரித்துப்  போது இது வயனாடு அல்லது கண்ணூர் மக்கள் பேசும் மலையாளம் என்றார்.ஆழ்ந்த தூக்கத்தில் சிலரிடமிருந்து வாயு பிரிந்துச் சென்றது .யாரோ ஒருவர்  சரியான நேரத்தில் எழும்புவதற்காக வைத்திருந்த அலாரம்  சுகமான மெல்லிசைய நெடுநேரமாக வெளிப்படுத்தி   ஓய்ந்தது.இரயில் பயணத்தில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணித்தாலும் பயணச்சீட்டு பரிசோதகர் தொடங்கி பல இடையூறுகள் வந்துக் கொண்டேயிருக்கும். பொதுவாக இரயில் தூக்கம் என்பது அரைத்தூக்கம்தான்.

  கேரளாவின் தொழில் நகரமான கொச்சியை  காலை ஆறுமணிக்கு வந்தடைந்ததும் தமிழ்நாட்டைப் போல்   கேரளாவில் மழைக்கான எந்த ஒரு அறிகுறியுமில்லை.

இருப்பினும் வானம்  மந்தாரமாகவே காணப்பட்டது. இரயில் நிலையம் அருகே உள்ள தேனீர் கடையில் பால்கலக்காக தேனீர் அருந்தி விட்டு வழக்கமாக கொச்சிக்கு வந்தால் தங்கிக் கொள்ளும் விடுதியை நோக்கி நடந்தோம்.

நடைபாதை ஓரத்தில்  பிச்சைக்காரர்களும், பரதேசிகளும், நோயாளிகளும் ,வீடற்றவர்கள் என பலவகைப்பட்ட மனிதர்கள் தூங்கிக் கிடந்தனர்.

  ஹோர்தூஸ் நிகழ்ச்சிகள் பதினொரு மணிக்குத்தான் தொடங்கும் என்பதால்  தங்கும் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.

பிறகு ஹோர்தூஸ் நடக்கும் சுபாஸ் பூங்கா நோக்கி சென்றோம் . தங்கும் விடுதியிலிருந்து நடந்துச் சென்றால் பத்து நிமிட தூரம்தான் மனோரமா ஹோர்த்தூஸ் நடைபெறும் இடம்.

வேம்பநாடு காயலருகே கொச்சியின் நுரையீரலாக விளங்கும் சுபாஸ் பூங்கா ஒரு காலத்தில் அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபுவின்  பெயரை தாங்கிய பூங்காவாகவே இருந்திருக்கிறது.

அதன் பின்னர்  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ‘சுபாஸ் சந்திர போஸ்’ பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.இப்போது சுருக்கமாக சுபாஸ் பூங்கா என்றப் பெயரில் அறியப்படுகிறது.

ஹோர்தூஸ் எனும் பெயருக்கு இணக்கமாக  கலை மற்றும் கலாச்சார விழா கொண்டாட்டமானது முதலில் கோழிக்கோட்டில் தான் நடைப்பெற்றது. இப்போது  இரண்டாவது முறையாக கொச்சியில்  நடைப்பெறுகிறது. கேரளத்தின் பிரபல  அச்சு  ஊடகமான மாத்ருபூமி திருவனந்தபுரத்தில் வருடத்திற்கு ஒருமுறை ‘க’ என்றப் பெயரில் இலக்கிய விழா நடத்துவதுப் போன்று இன்னொரு பிரபல  கேரள அச்சு ஊடகமான மனோரமா ‘ஹோர்தூஸ்’ என்றப் பெயரில் இலக்கிய கலைவிழா நடத்துகிறது.

உண்மையில் ஹோர்தூஸ் என்றால் என்ன..?

17 ம் நூற்றாண்டில் ஹென்ட்ரிக் வான் ரீட் என்பவர்  மலபார் கடற்கரை வாழ்  தாவரங்களை குறித்து லத்தின் மொழியில் எழுதி தொகுக்கப்பட்ட ‘ஹோர்தூஸ் மலபாரிஸ் ‘ என்ற நூலை எழுதியிருந்தார்.   அந்த பெயரையே  மலபார் கடற்கரை நகரமான  கோழிக்கோட்டில்  நடக்கும் இலக்கிய  நிகழ்வுக்கு சூட்டினால் பொருத்தமாக இருக்கும் என அந்த பெயரையே இந்த இலக்கிய நிகழ்வுக்கு சூட்டி பெருமைப் படுத்தியிருப்பார்கள் எனப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

இப்போது இரண்டாவது முறையாக கொச்சியிலும்…. நானுறு பேச்சாளர்கள், நூற்றி என்பது  நிகழ்வுகள்,  பன்னிரெண்டு அரங்கங்களில் ஐந்து அரங்கங்கள் தொல்தமிழரின் புவியியல் நிலப்பரப்பான குறிஞ்சி ,முல்லை , மருதம், நெய்தல், பாலை எனப் பெயர் தாங்கியிருந்தது சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வில் குழந்தைகளுக்கென தனி அரங்கம் இருந்தது.

மலையாளிகள் தங்கள் வேர்களை பரசுராமனின் மழுவில் தேடிக் கொண்டிருப்பதை விட்டு, பழந்தமிழர் மரபில் தேடிக் கண்டடைந்திருப்பது ஆரோக்கியமானது.

 நான்கு நாட்கள் நடந்த நிகழ்வில் இரண்டு நாட்கள் மட்டுமே கலந்துக் கொண்டு முழுமையாக மூன்று  இலக்கிய நிகழ்வுகளிலும் பல்வேறு சிறுசிறு கலை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் கலந்துக் கொண்டேன்.

காவல்துறை அதிகாரியை நோக்கி கேள்வி கேட்டார் என்பதற்காக லாக்கப்பில் வைத்து காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட ஒருவர் மற்றும் பெண் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு ஓய்வுப் பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகள் என நான்குபேர் ஒரு விவாதத்திற்காக தயாராக இருந்த  ‘முல்லை’ அரங்கிற்குள்   நுழைந்தேன்.

 ஓய்வுப் பெற்ற உயர் காவல்துறை அதிகாரியை நோக்கி… ‘போலீஸ்காரர்கள் ஏன்   அடிக்கிறார்கள்’..? என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓய்வுப் பெற்ற  காவல்துறை  உயர் அதிகாரியை நோக்கிக் கேட்கிறார்.

 ‘திருப்பி  கேள்வி கேட்டால் அடிப்பது என்பது  அதிகாரத்தின் சுபாவம்.  அடித்து துன்புறுத்தினால்தான்   குற்றத்தை ஒத்துக் கொள்வார்கள் என்பது எழுதப்படாத விதி என பதில் சொல்ல ஆரம்பித்த காவல்துறை அதிகாரி  ஒரு ஒப்புதல் அடியாளின் வாக்குமூலம் ‘ போல் அதிகாரத்தின் கோரமுகங்களை தோலுரித்து பேசினார். நிரபராதியான  பாதிக்கப்பட்ட  ஒரு நபரிடம் லாக்கப்பில் என்ன நடந்தது எனக் கேட்கும் போது அவர் ரெண்டு வார்த்தைப் பேசுவதற்குள்ளே கண்கள் தளுதளுத்தது …இதனைப் புரிந்துக் கொண்ட  ஒருங்கிணைப்பவர் அவரை தொடர்ந்து பேச வைக்கவில்லை.ஒரு மணிநேரம் தொடர்ந்து நடந்த விவாதம் ஒருங்கிணைப்பாளர் கேட்ட கேள்விகள்   பல அதிகாரத்தின் நகக்கண்ணில் ஊசி ஏத்தியது.

‘வரலாறு திருப்பி எழுதப்படுகிறது.யூதர்களின் சரித்திரமும் நாவலும்’ என்ற தலைப்பில் நிகழ்ந்த உரையாடல் ஒன்று நடந்த அமர்வில் உட்கார்ந்திருக்கும் போது நாவலாசிரியர் சேது’ யூதர்கள்’ குறித்து எழுதிய ‘மறுபிறவி ‘நாவல் குறித்து பேசினார்.

காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் குரூர முகத்தை நாம் கண்டு வருகிறோம்  இருப்பினும்  சாதாரண மனிதர்களான சேந்தமங்கலம், பரவூர்  ,கொடுங்கலூர் எனப் பரவி வாழ்ந்த யூதர்களையே எனக்குத் தெரியும்  என மாப்புக் கேட்பதுப் போல் பேச ஆரம்பித்த அவர் நாவல் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

1948-களில் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டபின் 1950-களில் பள்ளியில் என்னோடுப் படித்த யூதத் தோழர்கள் கண்ணீரோடு விடைப்பெற்றது  எனக்கு நினைவிருக்கிறது.

2006- ம் ஆண்டு நான் யூதர்கள் குறித்து நாவல் எழுத தீர்மானிக்கும் போது  சேந்தமங்கலத்தில் 95 வயதான யூதர் ஒருவரை சந்தித்தேன்.நான் சரித்திர ஆசிரியனல்ல ஆனால் நான் கேரளாவில்  வாழ்ந்த  யூதர்களை குறித்து எழுத வேண்டும் எனத் தோணியதால் எழுத ஆரம்பித்தேன்.2011 ம் ஆண்டு மறுபிறவி நாவல் வெளி வந்தது.

1950- களில் யூதர்கள்  எல்லோரும் இஸ்ரேலுக்குச் போயிருக்கவில்லை. காசுப் பணம் அதிகமுள்ள பணக்கார வெளுத்த யூதர்கள் மட்டுமே அங்கு செல்ல முடிந்தது .எளிய அன்றாடம் காய்ச்சிகளாக இருந்த கருத்த யூதர்கள் அங்குச் செல்ல முடியவில்லை   போன்று பல விஷயங்களை அவர் எழுதிய நாவலிலிருந்து பேசினார்.

தமிழ் நடிகர் கமல்ஹாசனும் மலையாள நடிகை மஞ்சுவாரியாரும் கலந்துக் கொண்ட  கலந்துரையாடல் நிகழ்வொன்று நடந்தது .

சமகால அரசியல், சமகால  பிற கலைப் போக்கு , நவீன சினிமாவில் இந்தியப் பெண்களின் பங்களிப்பு, ஆயுர்வேத மருத்துவம், முப்பது வகையான இராமாயணம் இருப்பதைக் குறித்து ஆனந்த் நீலகண்டனின் பேச்சு. ஆனால் அந்தப் பேச்சில் கம்ப இராமாயணம் விடுபட்டுப் போயிருந்தது.  நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ குறித்த உரையாடல்   என பலதும் நடந்தது.கீழடிக் குறித்து உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் பேச இருந்த நிகழ்வு என்ன காரணத்திற்காகவோ இரத்துச் செய்யப்பட்டிருந்தது. தமிழிலிருந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் பங்கேற்ற நிகழ்வு ஒன்றும் நடந்தது அதில் பங்கேற்க இயலவில்லை. பகல் மங்கத்தொடங்கி கருக்கல் ஆகும் போது  சுபாஸ் பூங்காவெங்கும் ஆங்காங்கே மின்  வெளிச்ச அலைகள் புது வண்ணம் கொடுத்து பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பூங்காவை மனிதர்கள்  தனித்தும் குடும்பத்தோடும்  காதலர்களோடும் குட்டிப் போட்ட பூனைப் போல் சுற்றி சுற்றி வந்தனர். எதை இரசிப்பது எதை விடுவது  அல்லது எதையும் தவறவிட்டிடக் கூடாதே என்கிற அங்கலாப்பில்  நடந்தனர். எதிரே  வருபவர்களை காணும் போது   அரை  லகரியில் மிதந்து நடப்பதைப் போல் தோணியது.எல்லோரையும் கனவுநிலைக்குக் கொண்டுச் சென்றது சிந்திக்  கிடந்த மஞ்சள் வெளிச்சம். இதற்குப் போட்டியாக வேம்பநாட்டு காயலில் மிதக்கும் கப்பல்களும் வெளிச்சத்தை கசிய விட்டன. இப்போது சுபாஸ் பூங்காவே மிதப்பதுபோல் அசைந்தாடியது. மரங்களும் அதில் பூத்துக் கனிந்த மலர்களும் இந்த அதிசயத்தை பார்த்து  எண்ணி மெய்மறந்து பெருமூச்சு விட்டன மறுபடியும் இந்த நிகழ்வு எப்போது நடக்குமென….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *