இரா. அரிகரசுதன்
நீல மலைச்சரிவுகளின்
பசிய மரங்களை முட்டும்
மேகங்கள் வெட்கம் சுமக்கின்றன.
மலையையும் தன்னையும் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கின்றது ஆறு
அதன் உள்ளொளியாய்
எரிந்துக்கொண்டிருக்கும் ஆழமோ
நீரின் மேலே மெல்ல ஊர்கின்றது
தெங்கம் பழங்கள் மிதந்து செல்வதைக்
கண்கொள்ளும் குரங்குகள்
தங்களுக்குள் நினைவுகளைப்
பேசிக் கொள்கின்றன.
நீரின் முகமும்
நீந்தும் மனமும்
தொட்டுக்கொள்ளும் கணத்தில்
பிறக்கின்றது பிரபஞ்சத்தின்
ஓர் அழகியக் குழந்தை
அமைதியின் தாய்ப்பாலை
வாய்உறிஞ்சும்
அதன் மென்சிரிப்போ
சுடரும் மலைமேல்
இன்னொருச் சுடராகச் சுடர்கிறது.
அவ்வாறே மனம் எனும் மாயை
கணங்களுக்குள் வெடிக்கின்றது
ஆம் தீப்பிழம்பும் தீந்தேனைப் பெய்கின்றது.
Leave a Reply