தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!

தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!

  • By Magazine
  • |

பூ.வ.தமிழ்க்கனல்

இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணி இடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டம் ஆக்கி நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.

மேற்குறிப்பிட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச் சட்டங்களின் அமலாக்கம் குறித்துக் கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு அநீதி இழைக்கக்கூடிய அம்சங்களை, வழிகாட்டுதல்கள் என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. இந்த வழிகாட்டுதல்களை முதலாளிகள் மீறும்போது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் இத்தொகுப்பில் சொல்லப்படவில்லை. முந்தைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளைக் கலைக்கச் சொல்லும் இத்தொகுப்புகள், அவற்றுக்கு மாற்று குறித்துப் பேசாமல், தொழிலாளி வர்க்கத்தைக் கைவிடுகின்றன.

தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948. ஊதிய வழங்கல் சட்டம் 1936. சம ஊதியச் சட்டம் 1976 மற்றும் போனஸ் பட்டுவாடா சட்டம் 1965 என 4 சட்டங்கள் இருந்து வரும் இடத்தில், அவற்றுக்குப் பதிலாக ஊதியம் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

‘ஊதியம் குறித்தும் தொழிலாளர் நல அதிகாரிகள் குறித்தும் பல்வேறு சட்டங்களில் காணப்படும் குழப்பமான வரையறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் ஊதியம் வழங்குவதில் தற்போது உள்ள நெருக்கடிகளைப் புதிய ஊதியத் தொகுப்பு நிவர்த்தி செய்யும்” என்று ஒன்றிய அரசு புது ஊதியத் தொகுப்பை வியந்தோதுகிறது.

ஆனால், இப்புது ஊதியத் தொகுப்பு ஊதியம் குறித்த வரையறைகளைத் தெளிவாகக் கூறாமல், நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தமது விருப்பத்திற்கு ஏற்ப அவற்றை விளக்கம் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களையும் அதிகாரிகளையும் நீக்கியிருக்கும் இத்தொகுப்பு, அதனிடத்தில் புதிதாக எந்தவோர் அமைப்;பையும் உருவாக்காமல் வெறுமையாக விட்டிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை எதன் அடிப்படையில், எவ்வாறு நிர்ணயம் செய்வது என்ற கேள்விக்கு, தொழிலாளர்களின் திறன், வேலையின் தன்மை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழி காட்டுகிறது இத்தொகுப்பு.

ஒரு தொழிலாளி எவ்வளவு திறமையானவர் என்பதை வைத்து அவருக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதலைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு தொழிலாளியைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்தி, அவரது ஊதியத்தை வெட்டிவிடுவது ஆலை நிர்வாகத்திற்கு இனி எளிதாகிவிடும்.

1957- இல் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு சம்பள வீதத்தைக் கணக்கிடுவதற்குப் பல்வேறு அளவுகோல்களை வகுத்துத் தந்தது. அவற்றின்படி, போதுமான அளவு ஊட்டச்சத்து, துணிகள், எரிபொருள், மின் வசதி, கல்வி, சுகாதாரம், முதியோர் நலன் ஆகியவற்றோடு திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட சமூகச் செலவுகள் ஆகிய அனைத்தையும் 3 பேருக்கு வழங்கும் விதத்தில் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் 7 ஆவது ஊதியக் குழு, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு 18,000 ரூபாய், அதாவது நாள்1-க்கு 600 ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசோ தேசியக் குறைந்த பட்ச ஊதியம் நாள் 1-க்கு அடிமாட்டுக் கூலியை நிர்ணயம் செய்திருக்கிறது.

ஒவ்வொரு தொழில்துறைக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாறுபட்டு இருக்கும் என்றும்; ஒன்றிய அரசு கூறியிருப்பதால், இத் தேசியக் குறைந்தபட்ச ஊதியமும் நாடெங்கும் ஒரே சீராக அமல்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், இவ்வூதியத்தை யார், எந்த அளவுகோலின்படி நிர்ணயம் செய்வார்கள் என்பதையும் தெளிவாகக் கூறாமல், அதனை நிர்ணயம் செய்வதை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் முடிவுக்கு விட்டு விட்டது.

இதற்கு முன்பு இருந்த ஊதியச் சட்டங்களின்படி தொழிலாளர் நல ஆய்வாளர்கள் ஊதியம் வழங்கப்படுவது குறித்துத் தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது தொழிலாளர் நல ஆய்வாளார் என்ற பதவியே நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ‘ஒருங்கிணைப்பாளர் என்ற பொம்மைப் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பாளர், ஊதியம் குறித்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வகுப்பெடுத்துப் புரிய வைப்பாராம். நிறுவன முதலாளி ஊதியம் குறித்த நடைமுறைகளைத் தான் முறையாகப் பின்பற்றுவதாகத் தனக்குத்தானே சான்றளித்து, அந்த ஆவணத்தை இணையதளத்தில் பதிவேற்றினால்,  அதற்கு ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்வாராம். நேரடி ஆய்வு என்பதெல்லாம் இனி மேல் கிடையாதாம். எனில், ஒரு இரப்பர் ஸ்டாம்பிற்கும் ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த அலங்காரப் பதவிக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இதற்கு முன்பு ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகச் சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை மட்டுமன்றி, கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும். புது ஊதியத் தொகுப்பில் அத்தண்டனைச் சட்டப்பிரிவு எவ்வித மாற்றம் இன்றி நீக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஊதியம் குறித்தப் பிரச்சினைகள், சர்ச்சைகளுக்காகத் தொழிலாளர்கள் இனி நீதிமன்றத்தை நாட முடியாது. அதற்கென இருந்த சட்டப்பிரிவுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதில் தொழிலாளர்கள் தங்களது தாவாக்களை இதற்கென அமைக்கப்படும் அதிகாரம் ஏதுமற்ற அமைப்புகளில் சென்று பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் அத் தொழிலாளார்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதனை அத் தொழிலாளி வேலை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வரையறுத்திருந்த முந்தைய ஊதியப் பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வரும் பெரும் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் பொறுப்பும் கடமையும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களது சம்பளத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் என்ற அடிப்படையில் பிடித்து வைத்து வருகின்றன. இச்சட்டவிரோத நடைமுறையைப் புது ஊதியத் தொகுப்பு, சட்டப்பூர்வமாக மாற்றியிருப்பதோடு, பிற தொழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டலை நீடித்திருக்கிறது.

சங்கமாக அணி திரளும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, சட்ட விரோதக் கதவடைப்பு மற்றும் வேலை நீக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க 3 முக்கியத் தொழிற்சங்கச் சட்டங்கள் உள்ளன. அவை, தொழில் தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலை வேலை வாய்ப்புச்சட்டம், 1946 ஆகியன. இச் சட்டங்கள் 3-ம் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களது சங்கம் சேரும் உரிமையை இரத்து செய்வது, நினைத்த நேரத்தில் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவது அல்லது நிறுவனத்தைத் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடுவதற்கு அனுமதி அளிப்பது, வேலை நேர வரம்புகளை உயர்த்துவது என முதலாளிகளுக்குச் சாதகமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் இந் நடைமுறைத் தொகுப்பு செய்து கொடுக்கிறது.

முதலில் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் குறித்த வரையறைகள் இத்தொகுப்பில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, சேவைத் துறைகளைத் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வராமல் விலக்கி வைக்கும்படித் தொழிற்சாலைக்கான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவொரு தொழில்துறையையும் சேவைத் துறை என வரையறுக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு இச்சட்டத் தொகுப்பு வழங்குகிறது.

ஒரு நிறுவனத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறுபவரையே தொழிலாளி என வரையறுக்கிறது இத்தொகுப்பு. அதற்கும் அதிகமாக ஊதியம் பெறுபவா; கண்காணிப்பாளர் அல்லது மேலாளர் என வரையறுக்கப்படுவதால், அவருக்குத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் எதுவும் கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த 15,000ரூபாய் ஊதியம் என்ற வரையறையைக் கூட்டவோ, குறைக்கவோ ஒன்றிய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதியம் வாங்கும் அனைவரும் தொழிலாளர்களே அல்ல என்று வரையறை செய்வதன் மூலம், ஏற்கெனவே சங்கமாக அணி திரண்டு உள்ள தொழிலாளர்களைத் தொழிலாளர்களே அல்ல என்று தகுதி நீக்கம் செய்கிறது இத்தொகுப்பு. இதன் வழியாகத் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் காலி செய்து முடக்குகிறது.

பதிவாளர் என்ற அதிகாரியின் கருணை, தயவைப் பெற்றால்தான் தொழிற்சங்கத்தைச் சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்றவாறு காலனிய காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகாரத்தை இச்சட்டத் தொகுப்பு உருவாக்கியிருக்கிறது. அதாவது, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றித் தன் விருப்பப்படி ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாது பதிவாளர் மறுக்கலாம் எனக் கட்டைப் பஞ்சாயத்து அதிகாரத்தைப் பதிவாளருக்கு வழங்குகிறது, இத்தொகுப்பு. இதனால் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிற்சங்கங்களைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வது இனி குதிரைக் கொம்புதான்.

மேலும், புதிதாகத் தொழிற்சங்கம் தொடங்கக் குறைந்தபட்சம் 100 தொழிலாளர்கள் சங்கத்தில் இருக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் 100 தொழிலாளர்கள் இல்லையென்றால், அவர்களது பதிவு இரத்து செய்யப்படும் என்றும் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் வகையில் இத்தொகுப்பில் விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

தொழிற்சாலைகளை முன்னறிவிப்பின்றி மூடுவதற்கான நிபந்தனைகள் இத்தொகுப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 100 தொழிலாளர்களுக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மட்டுமே முன் அறிவிப்பின்றி மூட முடியும் என்பதை மாற்றி, அந்த எண்ணிக்கையை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது முடிவு செய்யலாம் எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு என்பது கார்ப்பரேட்டு நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதன்படி, மிகுஉற்பத்தி தேவைப்படும் காலத்தில் அதிகத் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி, அத்தேவை முடிந்த பிறகு அவர்களை எச் சட்டச் சிக்கலும் இன்றி வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இவ்வேலை வாய்ப்பு முறை மூலம் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க விரும்பும் கார்ப்பரேட்டுகளின் கனவை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது இத்தொகுப்பு.

ஏற்கெனவே தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் பட்டதாரிகளை, பட்டயப் பொறியாளர்களைத் தொழில் பழகுநர்களாக பயன்படுத்திக் கொண்டு மொத்த ஆலையையும் இயக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இச்சட்டத் தொகுப்போ இனி யாரும் நிரந்தரத் தொழிலாளி இல்லை, யாருக்கும் பணிப் பாதுகாப்பு இல்லை என்ற நவீனக் கொத்தடிமை நிலையை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் போதாதென்று 8 மணி நேரம் என்று இருந்த வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் எனக் கூட்டுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒரு மணி நேரக் கூடுதல் உழைப்புச் சக்தியை, திறனைக் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு இலவசமாக வாரிக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைச் சட்டமாக்கிவிட முயல்கின்றனர்.

ஏற்கெனவே இருக்கின்ற சட்டத்தையே பெருமுதலாளிகள் மதித்துச் சங்கங்களுடன் ஊதியப் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. அமலாக்கப்பட்டு இருக்கும் சட்டத் தொகுப்பினால் சங்கம் ஊதிய பேர பேச்சுவார்த்தை நடத்திட வழியற்றுப் போகும். குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்தச் சிரமப்பட்டு வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் ஊதியம் மேலும் குறைந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவர்கள். இது தொழிலாளர்களின் குடும்பங்களின் மீது நிகழ்த்தப்படும் பொருளாதாரத் தாக்குதல், நிர்க்கதியாக நிற்கிற தொழிலாளர் குடும்பங்களின் மீது நடத்தப்படும் வன்முறை.

நாட்டில்பெரும்பான்மைத் தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பற்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களாக உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயருகிற வேலையை இச் சட்டத் தொகுப்பு செய்யும். இதனால் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து ஒப்பந்த, தினக்கூலி போன்ற அத்துக்கூலிகள் முறையிலான வேலைகளாக மாற்றப்பட்டுச் சட்டப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இல்லாத நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. நாட்டின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத் தொகுப்புகள் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும். தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைத் தட்டிப் பறித்துக் கார்ப்பரேட்டுகளுக்குப் படையலிடும் தனது கார்ப்பரேட்டு விசுவாசத்தை ஒன்றிய அரசு தற்போது வெளிக்காட்டி உள்ளது. நாம் போராடிப் பெற்ற உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வீதியில் இறங்கிப் போராடித் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *