மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்

  • By Magazine
  • |

A. தர்மராஜ் (த.ராசு)

முந்தைய பாகத்தின் தொடர்ச்சி…

மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு தங்கத்தில் தாலி வழங்குவதற்கு ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 2023 ஏப்ரல் மாதத்தில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்து முதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. முதுகலை தமிழ் பட்டதாரியான இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளவர்.

இவர் 2023- மே மாதத்தில் ஒருநாள் வி¬ளாட்டு துறை அமைச்சரை சந்தித்து, தனது குடும்பம் மிகவும் வறுமைநிலையில் இருப்பதாகவும், தனக்கு ஒரு வேலைவாய்ப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அலுவலக உதவியாளராக பணிநியமானம் வழங்க உத்தரவிட்டார். அதே மாதத்தில் சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கட்டண சலுகை சுற்றுலாத்துறையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கு இல்லங்கள் என்று சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இப்போதைய காலகட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 845 அறைகளுடன் கூடிய 28 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. தங்கும் விடுதிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதுபோல் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு  அனைத்து அறைகளையும் மொத்தமாக பதிவு செய்பவர்களுக்கும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்குபவர்களுக்கும் கட்டண சலுகை உள்ளது. சாகச படகு  சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய சுமார் 600 படகுகள் சுமார் 10 இடங்களில் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கட்டணம், தனிக்கட்டணம் (ஸ்பெஷல் ஃபீஸ்) செலுத்துவதில் இருந்து விலக்களித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுரிகளில் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டு வந்தன. ஆகவே, இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை தவறாமல் பின்பற்றுபடியும், அப்படி பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கும் தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்படும் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.25000 ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

அதே போல், அவர்களுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், சமூகப்பணியாளர், வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றை தேர்வு செய்து 10 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை என்ற முகவரியிலோ, சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமோ பெற்றுக் கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு சுதந்திர தின விழாவில் முதல்வரால் விருது வழங்கப்படும்.

2023-ஜீன் இறுதி வாரத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது, கால்கள் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத் திறனாளிகளுக்கு  அவர்களின் நல அலுவலகம் சார்பில் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பிலான  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 800 மதிப்பிலான நவீன செயற்கைக் கால்களை ஆட்சியர் வழங்கினார். மேலும் 2 மாற்று திறனாளிகளுக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 700 மதிப்பிலான நவீன செயற்கை கைகள் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

2023 ஆகஸ்டில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மணியமர்வு ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 10 மாற்றுத் திறனாளிகள் விற்பனையாளர் பணிக்காகவும், 18 பேர் கட்டுநர் பணிக்கென்றும் தேர்வு பெற்றவர்கள்.

திருப்பூரில் மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை குறித்த புகைப்பட கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைக்க வருகை தந்த போது அங்கு நின்றிருந்த ஒரு மாற்றுத் திறனாளி திடீரென்று அமைச்சரின் காலில் விழுந்து உதவி கேட்டு கண்ணீர் விட்டு கதறினார். தான் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்றும் வறுமை காரணமாக குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது கோரிக்கையைக் கேட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசு உதவிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது 2024 மார்சில் நிகழ்ந்த சம்பவம்.

அதே மார்சில் நடந்த மற்றொரு குறிப்பிடும்படியான நிகழ்ச்சியாக சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 165 பயனாளிகளுக்கு 1.48 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 140 மாற்றுத்திறனாளிகளுக்கு 96000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஆளுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு சலுகையுடன் மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. அவர்கள் குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. கடன் வாங்குவோருக்கு பிணையம் அளிக்க பலர் முன்வருவதில்லை. ஆகவே தனிநபர் பிணையம் அளிப்பதில் விலக்கு அளிக்கும்படி மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

மாற்றுத் திறனாளிகள் மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றாக அரசு வளாகங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான கடிதத்தை மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆவின் நிறுவனம் பொதுப்பணி, வருவாய்த்துறைகளுடன் இணைந்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளே ஆவின்பாலகம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என அதிலே கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் இடத்தை மாற்றுத்திறனாளிகள் பெற்றால் அவர்கள் ஆவின் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கவும், வாடகை விலக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்து உத்தரவிட முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி, 2024 செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டது. பள்ளிகளில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.1000 என்பதை 2 ஆயிரம் என்றும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கும் ஆண்டுக்கு 3 ஆயிரம் என்பதை 5 ஆயிரம் என்றும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரைக்கும் ஆண்டுக்கு 4 ஆயிரம் என்பதை 8 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிடப்பட்டது. கல்லுரிகளில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.6000 என்பதை ரூ. 12000 ஆகவும் தொழிற் கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு ரூ.7000 என்பதை 14000 ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டது. பள்ளிக் கல்லுரி படிப்புகளுடன் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டில் தேவையான அளவிற்கு அரசு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 அக்டோபரில் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுபிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 33 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியின் தொடக்கவிழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  அக்டோபர் 4-ல் நடந்தது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கென மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் இதே போல திருவான்மியூரிலும், வேளாங்கண்ணியிலும் அவர்களுக்கான மரப்பலகை பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாய்வாளர்களில் 82 சதவீதத்தினர் உடல் இயக்கம் முடங்கியதால் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக் குழுவினர் இவர்களுக்கு புனர் வாழ்வு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்தனர். ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில் 2020 டிசம்பரில் மறுவாழ்வு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. ஆண் பெண் இருபாலருக்கும் தலா 20 படுக்கை வசதிகளுடன் அது செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து உணவு பூங்கா, குளிர்பதனப்பெட்டி, தொலைக்காட்சி, செய்தித்தாள், சுகாதாரமான குடிநீர் கலவையகம் என்று பல்வேறு வசதிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களின் தரவுகளின் அடிப்படையில் மருத்துவமனை முதல்வர் தலைமையிலான குழு மேற்கொண்டது. அது பற்றிய ஆய்வுக்கட்டுரை சர்வதேச இதழ் ஒன்றில் வெளியிடப்படடுள்ளது. அதில் உள்ளடங்கியிருந்த குறிப்புகள்.

2020 டிசம்பரில் முதல் 2022 ஜீன் வரை மறுவாழ்வு பிரிவில் 201 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். அவர்களில் 149 பேர் ஆண்கள், 52 பேர் பெண்கள். சிகிச்சை பெற்றவர்களில் 40 சதவீதம் பேருக்கு எலும்புமூட்டு இயக்க பாதிப்புகள் இருந்தன. அதற்கு அடுத்து 21 சதவீதம் பேர் நரம்பு சார்ந்த பிரச்சனைகளிலும் 7.5 சதவீதம் பேர் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளிலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

முடிவுரை

கடந்த 3.12.16 ல் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் அரசு சார்பில் அன்றைய தினத்தில் அவர்களுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு தனியார் நிறுவனங்களும் மாற்றுத் திறனாளிகளை மகிழ்விப்பதற்னெ நிகழ்ச்சிகளை நடத்தின. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஒரு தொண்டு நிறுவனம் சில பேரை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி கவுரவித்தது. நாடாளுமன்றத்தில் அதே ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமை மசோதா 2014-ஐ நிறைவேற்றி அவர்களைக் கவுரவித்தது.

ஐ.நா.சபையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்ட 7 திறன்குறைவுகளை 21- ஆக அதிகரித்திருக்கிறது.  திராவக வீச்சு பாதிப்பு, தலகீமியா, ஹீமோபிலியா முதலான ரத்தத் தொடர்பான நோய்கள், மஸ்குலர் டிஸ்ட்ரஃபி எனப்படும் தசை இறுக்க நோய், பார்க்கின்சன் பாதிப்பு போன்றவையும் இந்த மசோதாவால் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான பட்டியலுடன் சேர்க்கப்பட்டது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை 2.68 கோடி பேர். இந்த எண்ணிக்கை பத்துக் கோடியாக அதிகரிக்கக் கூடும். அதுவரை எலும்பு தொடர்பான பாதிப்புகள், பார்வை இழப்பு, கேட்கும் சக்தியில்லாமை ஆகிய 3 குறைவுடையவர்கள் மட்டுமே உரிமைகளும் சலுகைகளும் பெறமுடியும் என்று இருந்த நிலைமை மாறி, மற்ற திறன் குறைவு உள்ளவர்களும் இனி சலுகைகளை பெறுவதற்கு இந்த மசோதா வழி செய்தது.

மாற்றுத்திறனாளிகள் மற்ற மனிதர்களைப் போல் பொது இடங்களிலும் அலுவலங்களிலும் எளிதாக சென்று வர இயலாத வகையில் தான் நமது கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின் நிறைவேற்றமானது இந்தியாவிலும் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தவையாக மாறுவதை உறுதிப்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி வாய்ப்புகள் வழங்கிடும் எல்ல கட்டிடங்களும், போக்குவரத்துகளும் சிரமம் ஏதுமில்லாமல் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அந்த மசோதா வலியுறுத்தியது.

மேலும், எல்லா தனியார் நிறுவனங்களும் கூட மாற்றுத் திறனாளிகள் எந்தவித  சிரமமோ, இடையூறுமோ இல்லாமல் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்த மசோதா. இதன்படி, அரசின் நிதி உதவியையும், அங்கீகாரத்தையும் பெறக்கூடிய மருத்துவ, நிர்வாக இயல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட எல்லா கல்வி நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதுவரை அரசு வேலைவாய்ப்பில் தரப்பட்டு வந்த 3 சதவீத ஒதுக்கீடு இந்த மசோதாவின் படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது தான் இதில் முக்கியமான அம்சம். அவர்களுக்கு சிரமம் தரும் வகையிலான பணி ஒதுக்கீடோ, இட மாறுதல்களோ தருவதையும் இந்த மசோதா தடை செய்கிறது. அவ்வாறான வேறுபாடு காண்கிற குற்றங்கள் காணப்படுவதாக அறியப்படுமாயில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிசெய்கிறது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் போது தொழுநோயாளிகள், ஆட்டிஸம் பாதித்தவர்கள், கற்கும் திறன் குறைந்தவர்கள் ஆகியோர் கூட இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு வரும்போது அதிக பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் அதுவரை எதிர் கொண்டிருந்த பல தடைகளை இந்த மசோதா உடைத்தெறிந்து விடும் என்று நம்பப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கென்று புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. வயது முதிர்ந்தவர்களுக்கு பலனளிக்கும் விதத்திலான தேசீயக் கொள்கைகள் பல ஏற்கனவே வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. அது போல் மாற்றுத் திறனாளிகளுக்கும் பலன் தரக்கூடிய தேசீயக் கொள்கைகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதிலே தனிக்கவனம் செலுத்தப்பட்டு நடைமுறையில் சற்று வேகம் காட்டப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனித்துறை அமைத்து செயல்படுவதில் தீவிரம் காட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *