– குமரி எழிலன்
மதியம் ஒன்றரை மணிக்கு குளத்ல போயி குளிக்காட்டா குடியாமுழுகியாப் போகும்….முணுமுணுத்தாள்…தர்மப் பத்தினி… கோசலை
“வீடு சொல்லி கேக்காட்டா ஊரு சொல்லி கேக்கும்” என்ற சொலவடை வந்து விழுந்திருக்கும்.
“முங்கிக் குளிக்கிற சுகம் டவுன்ல பொறந்த உனக்கு எப்பிடித் தெரியும்”
பதிலுக்கு முனங்கிக் கொண்டே பைக்கில் பறந்தேன் நான்..
குளத்தின் தொண்ணூறு விழுக்காடு நீர்ப்பரப்பு தாமரை இலை கொண்டு மூடப்பட்டிருந்தது.பத்து விழுக்காடு இடம் ஆலமர நிழலால் தண்ணீரை குளிரச் செய்தது…..
தண்ணீரின் அடி ஆழம் வரை தெளிவாய்த் தெரிந்தது…படிக்கட்டில் சோப்பும் வண்டிச் சாவியும் கண்ணாடியையும் கழற்றி வைக்கையில்…..
ரெண்டு வளையல்கள் உடைந்து கிடப்பதும் ஒருநாள் பயன்படுத்தப் பட்ட மேல் சோப்பும் துணி சோப்பும் உடைந்த வளையல்கள் பக்கம் கிடந்தன.
சுற்றும் முற்றும் காக்கை குருவிகள் கூட இல்லை.. துணிகள் ஏதாவது பறந்து கிடக்குமாவென்று தேடினேன் எதுவும் கிட்ட வில்லை.
யாரோ ஒரு பெண் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மூழ்கியிருக்கலாமோவென்ற ஐயம் எழுந்தது.
தெளிந்த தண்ணீருக்குள் அப்படியொன்றும் கண்களில் சிக்கவில்லை. உள்ளுக்குள் பயத்தோடு கொஞ்சம் ஆழத்துக்கு சென்று குளித்து கரை ஏறினேன்..ஆனால் என் மனசு குளத்துக்குள்ளேயே தத்தளித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் படித்துறையில் கண்ணாடி வளையல்கள் மட்டும் காணாமல் போயிருந்தன..சாலையோர செடிகளுக்கு தண்ணீர் எடுக்க வந்த மருமகள் இந்துவிடமும் அத்தை சரோஜாவிடமும்.. விவகாரத்தை சொன்னேன்..
நேற்று முங்கியிருந்தா இன்றைக்கு மிதந்திருக்குமே மருமகனே என்றார்கள்… அத்தை. மருமகளும் ஆமோதித்தாள் .
அவர்கள் தண்ணீர் கோர வருவதைக் காரணம் சொல்லி தேர் குளத்துக்கு எஸ்கேப் ஆனேன்.. மகள் சிவகாமியிடமும் துணைவியாரிடமும் சொல்லி வைத்தேன்..
என்னா அத்தானுக்கு… முகம் பேய் அடிச்ச மாதிரி இருக்கு.. எதயாம் பாத்து பயந்துட்டேள.. லதா அண்ணி கிண்டல் செய்தார்கள் மேற்படி விஷயத்தை விலாவாரியாகச் சொன்னேன்..
“இப்படிதான் பாத்துக்கிடுங்க. எங்க நான்குநேரியில ஒருநாளு ஒரு கெணத்தாங்கரயில…ஒரு சாப்பாட்டு வட்ட கிடந்துருக்கு .. யாரு வட்ட.. ? நாயிகீயீ தூக்கிகிட்டு வந்து போட்ருக்குமோ என்று பெயரை பார்த்தா இசக்கியம்மாள் என்று கிடந்தது…
தண்ணி இறைக்கும் போது காலில் சிக்கிய கயர் கிணற்றுக்குள் இழுத்துப்போட்ட சம்பவத்தை சுற்று சுவரில்லாத கிணற்றுக்குள் கிடந்த சடலம் மறுநாள் உறுதிப்படுத்தியது .என்று சொன்னார்கள்.
இதுக்குதான் நட்டநடு மதியம் கொளத்துக்கு குளிக்க போவாண்டாம்னேன் “ஏழ சொல்லு அம்பலம் ஏறுமா”..சொலவடையை அரங்கேற்றி அலுத்துக் கொண்டாள் தர்ம பத்தினி.
வடசேரில பாவு போடுகையில கலர் ஏற லனா ஏதாவது வதந்தி பரப்புவாளம்…அதுமாதிரி அத்தாமிழி குளக்கரை இசக்கிக்க வளையல் எடுத்து ஓடச்சுக்கூட போட்டு பொம்பள வழுக்கி விழுந்து செத்துட்டானு வதந்தி பரப்பிருக்கலாம்…
கோசலை பழங்கால வழக்கத்தை புதுப்பித்துக் கொண்டாள்.. மூன்றாம் நாள் துணி சோப்பையும் நாலாம் நாள் மேல் சோப்பும் காணவில்லை…
முதல் நாள்செருப்புப்போட்டு குளிக்க…எனது காலுக்குக் கீழே மெத்து மெத்து மெத்தென்று இருந்த உணர்வு.. (அது தாமரை. இலைக்குவியலின் சேர்க்கையாக கூட இருக்கலாம்). இன்னமும் அவ்வப்போது மனசுக்குள் வந்து போகிறது..
சோப்பு போடுகையில் வளையல் உடைந்திருக்கலாம்..குளத்துக்கு வரும்போது இடுப்பில் சொருகியோ செம்பருக்குள் போட்டோ கொண்டுவந்திருந்த செல் போனில் வந்த அவசர அழைப்புக்கு விரைந்து புறப்பட சோப்புகள் விடப்பட்டிருக்கலாம்
என யூகங்கள் பலவாக வந்தாலும். ஐயம் அகலாத என் மனசுக்குள் சந்தேகப்பேய் இன்னமும் அகல வில்லை…
“யார் வீட்டில் உலையில் போடப்பட்ட அரிசி வேகாமல் கிடக்க வேகவைக்க பரப்பிய வதந்தீயாகக் கூட இருக்கலாம் யாரு கண்டா….”அலுத்துக் கொண்டாள் கோசலை.
Leave a Reply