நமது மூலிகை மருத்துவர்
அழகிற்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறு செடிவகையை சார்ந்த மந்தாரை, அதிக மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது.
மந்தாரையின் பூர்விகம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சைனா என்றும் சொல்லப்படுகிறது.
மந்தாரையில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானவை. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற பூக்களை கொண்டது.
இதில் சிவப்பு நிற பூக்களை கொண்ட மந்தாரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
மந்தாரையின் இலைகள் பிளவுபட்டு வண்ணத்துப்பூச்சியின் இறகு போன்ற வடிவத்தில் காணப்படும்.
பூக்கள் 5 இதழ்களுடன் அழகாக ஜொலிக்கும் வண்ணமாய் காணப்படும். இதன் காய்கள் 15 முதல் 30 செ.மீ நீளத்தில் காணப்படும். அதன் உள்ளே விதைகள் இருக்கும்.
மந்தாரை தண்ணீர் தேங்காத கடற்கரை சார்ந்த பகுதிகளில் நன்றாக வளரும். இதனை விதை மூலம் பெருக்கம் செய்யலாம்.
மந்தாரையின் தாவரவியர் பெயர் :
Bauhinia acuminata
ஆங்கிலப் பெயர்கள் :
Orchid tree, Bauhinia, Butterfly ash, Camel’s foot tree
வேறுபெயர்கள் :
பூங்காரம், மலையாத்தி, திருவாச்சி
அடங்கியுள்ள தாவரவேதிப்பொருள்கள் :
Beflavone, flaconol glycoside, Triterpine, Gallotannins, gallic acid, Kaempferol, quercetin, Bauhinistatin மற்றும் அதிக அளவில் விட்டமின் சி சத்து.
மந்தாரையின் மருத்துவ பயன்கள்
1.வாதநோய், கட்டி, வீக்கங்களுக்கு
மந்தாரை பட்டை 10 கிராம் அளவிற்கு எடுத்து 400 மி.லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக வற்ற வைத்து வடித்து தினம் இருவேளை வீதம் குடிக்க வேண்டும். இது வாதநோய்கள், தோல்நோய்கள், கட்டி, வீக்கம் இவற்றிற்கு சிறந்தது.
2. தைராய்டு நோய் மற்றும் அதன் பாதிப்புகளுக்கு
மந்தாரை இலை 4 அல்லது 5 எண்ணம் எடுத்து சிறிதாக நறுக்கி அத்துடன் ஒரு கரண்டி மல்லி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து அரை டம்ளராக வற்ற வைத்து வடித்து தினம் காலை ஆகாரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இது தைராய்டு வீக்கம், தைராய்டு நோய்கள் மற்றும் அதனால் உண்டான உடல் பாதிப்புகளுக்கு சிறந்தது.
3. இரத்தபோக்கு அடங்குவதற்கு
மந்தாரை பூ மொக்கு 6 எண்ணங்கள் எடுத்து 200 மி.லி தண்ணீர் விட்டு வற்ற வைத்து தினம் இருவேளை குடிக்க வேண்டும். இது பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு என்ற இரத்தபோக்கிற்கு சிறந்தது. கண் மற்றும் உடல் குளிர்ச்சி உண்டாக்கும். உடல் உஷ்ணம் மாறும்.
4. அஜீரணம் மற்றும் நீரிழிவு நோய்க்கு
மந்தாரம் பூ 4 அல்லது 5 எண்ணங்கள் எடுத்து அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாக வற்ற வைத்து வடித்து தினம் இருவேளை குடித்து வர அஜீரணம் தீரும். இது நீரிழிவு நோய்க்கு சிறந்தது.
5. மலச்சிக்கல் மற்றும் மூலநோய்களுக்கு
மந்தாரம் பூவை நிழலில் உலர வைத்து பொடித்து சூரணமாக்கி கொள்ள வேண்டும். இதில் அரை கரண்டி அளவு எடுத்து இரவு ஆகாரத்திற்கு பிறகு தேனில் கலந்து உண்ண மலச்சிக்கல் மாறும். மூலநோய்க்கு சிறந்தது.
6. நிணநீர் கோளவீக்கங்களுக்கு (நெறிகட்டியதற்கு)
மந்தாரம் பட்டை 10 முதல் 20 கிராம் அளவு எடுத்து சதைத்து 400 மில்லி தண்ணீர் சேர்த்து 100 மில்லியாக வற்ற வைத்து வடித்து 50 மில்லி வீதம் தினம் இருவேளை குடிக்க வேண்டும். கழுத்து மற்றும் தொடை இடுக்குகளில் வரும் நெறிகட்டிகள் மற்றும் தைராய்டு வீக்கம், டான்சில் வீக்கம், கருப்பை மற்றும் சினைப்பையில் வரும் நீர்க்கட்டிகள் இவற்றிற்கு சிறந்தது.
மந்தாரம் பட்டையை சிறிது சுக்குடன் சேர்த்து அரைத்து நெறிகட்டிற்கு வெளிப்புறமாக பூசலாம்.

7. குடல்புழு கழிச்சல் இவற்றிற்கு
20 கிராம் மந்தாரை பட்டையை இடித்து சாறு எடுத்து தினம் இருவேளை வீதம் குடிக்க கழிச்சல், இரத்தபேதி மாறும். குடல்புழுக்கள் அகலும்.
8. வாய்ப்புண்ணிற்கு
மந்தாரை பட்டையுடன் சிறிது மாதுளை பூ சேர்த்து கசாயமிட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் அகலும்.
9. அழுகியபுண் ஆறுவதற்கு
50 கிராம் மந்தாரம் பட்டையை சதைத்து 400 மில்லி தண்ணீர் சேர்த்து 100 மில்லியாக வற்ற வைத்து வடித்து லேசான சூட்டில் புண்ணை கழுவி வர, புண் விரைவில் ஆறும்.
10. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கெட்ட கொழுப்பிற்கு
மந்தாரம் பட்டையில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட் (Anti Oxidant) என்னும் தாவரவேதிப் பொருட்கள் உள்ளன. இவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி பலவிதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளதால் தினம் உலர்ந்த மந்தாரம் பட்டையை சுமார் 5 கிராம் அளவிற்கு எடுத்து சதைத்து கசாயமிட்டு குடிக்கலாம். மேலும் இது இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது. உடல் எடையை அதிகரிக்க விடாமல் செய்கிறது.
11. புண் ஆறுவதற்கு
மந்தாரம் இலையை அரைத்து வெட்டப்பட்ட புண்ணிற்கு வைக்க புண் விரைவில் ஆறும். மேலும் இதை விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வைக்க அதன் பாதிப்புகள் விரைவில் மாறும்.
12. கவனிக்க வேண்டியவைகள்
Leave a Reply