சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர்   பி. விஜயகுமார்

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பெருந்தன்மை

மாரீஸ்வரி- எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டுகால கட்டத்தில் நடந்தது. வழக்கின் தன்மை என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் பார்வை இல்லாத தம்பதியர்கள். கணவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. மனைவிக்கோ 12-ம் வகுப்பு முடிக்கவும் பார்வை போயிற்று.

இருவருக்கும் திருமணம் நடந்த முதலில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியர்கள் சிகிட்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். இரவு நேரம் தமது குழந்தையை எவரும் தூக்கிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் தனது குழந்தையை தமது முந்தாணி முடிச்சியில் கட்டி வைத்துக் கொண்டு வார்டில் தூங்கிக் கொண்டிருந்தார். குழந்தைத் திருடனோ முந்தாணியை அப்படியே பிளேடால் அறுத்து குழந்தையைத் தூக்கிச் சென்று விட்டான்.

விஷயம் பெரியதாகப் பேசப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தம்பதியர்கள் குழந்தையை கண்டுபிடித்துத் தர மதுரை உயர்நீதிமன்றத்தை நாடினர். போலீசாரோ குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை, இது ஒரு Untraceable  வழக்கு என்று வழக்கை முடித்து வைத்திருந்தனர்.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்த நீதிமன்றம் குழந்தை கிடைக்காததால் அரசாங்கம் தம்பதியருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தம்பதியர்கள் பணம் ஒன்றும் வேண்டாம் குழந்தைதான் வேண்டுமென்று கூறி நீதிமன்றத்தை விட்டுச் சென்று விட்டனர்.

பிறகு தம்பதியருக்கு இரண்டாவது ஒரு குழந்தை பிறக்கும் வாய்ப்பு வந்தது. இம்முறை தம்பதியர் பேறுகாலத்திற்காக அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்தனர். இந்த குழந்தையும் பெண் குழந்தை தான். ஆனால் தம்பதியர்கள் அதற்காக துளியளவும் வருத்தப்படவில்லை.

இந்த இரண்டாவது குழந்தை வளர்ந்து வந்து கொண்டிருக்கையில் உயர்நீதிமன்றத்திலிருந்து நஷ்டஈடு தொகை மூன்று லட்சம் வாங்கிச் செல்லுமாறு நீதிமன்றம் தம்பதியருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. தம்பதியர்களும், குழந்தையும் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.

தம்பதியர்களையும் குழந்தையையும் பார்த்த நீதிபதி கண்கலங்கிப் போனார். அவ்வளவு வறுமை அவர்களிடம் தெரிந்தது. பரிதாபப்பட்ட நீதிபதி இவர்களுக்கு உதவி செய்ய மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். சங்கம் உடனே முன் வந்தது. அக்குழந்தையின் படிப்புச் செலவு அத்தனையும் சங்கம் ஏற்றுக் கொண்டது. அப்பெண் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது விலையுயர்ந்த மடிக்கணிணியும் சங்கத்தால் அப்பெண்ணுக்கு வழங்கப்பட்டது. பிறகு நீதிபதி தமது சட்டைப் பையிலிருந்து தம்பதிகளுக்கு ரூ.1000 கொடுக்கவும் அங்கிருந்த வழக்கறிஞர்களும் அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பிறகு தம்பதியருக்கு மூன்று லட்சத்திற்குரிய காசோலையும் வழங்கப்பட்டது. அப்பணத்தை வைத்துக் கொண்டு அந்த குடும்பம் ஒரு சிறிய வீடு அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் நல்வாழ்க்கைக்கு உதவி செய்த நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *