வர்மம் எனும் மர்மக்கலை!

வர்மம் எனும் மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

விசபந்த வர்மம்

சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான துதிக்கை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் விசபந்த வர்மம் பற்றி அறிவோம்.

இவ்வர்மம் மேற்புற முழங்கை மத்தியில் அமைந்துள்ளது. விஷபந்த வர்மம், விசபந்தக்காலம், விஷமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.

“ஆரடா பெருவிரல் மேல் சுட்டுவர்மம்

அப்பனே அஞ்சிறை மேல் விசமணியின்பந்தம்”.

                                                                                                                                ஒடிமுறிவு நூல்

“வீழுமந்த முழங்கையில் மையம் பற்றி

விசமான மணிபந்த வர்மமாகும்

தாழுமந்த மணிநடுவில் முறிவுகொண்டால்

தயவான வட்டெலும்பு முறிந்து வீங்கும்

வாழுமிந்த வர்மத்தில் முறிவுகொண்டால்

வளமான பன்னிரெண்டில் மரணமாகும்

நாளவதி கழிந்து மெள்ள நீண்டுதானால்

நன்மையுள்ள மூடில்லா தாளி சாற்றில்

ஆளுமிந்த உலுவா விதை அரைத்து மைந்தா

அளவான துணிதனிலேவூட்டிச் சுற்றே”.

“சுற்றுகின்ற துணியதிலே நாலு சீளி வைத்து

செறிவான கவனத்துடன் துணியை சுற்றி

முற்றுகின்ற முறிவெண்ணெய் தாரை கோரி

முடிந்த நல்ல வல்லாரை தாக்குவாயே

பற்றுகின்ற வர்மமது தீரும் சொன்னேன்

பரமனருள் கிருபையினால் தீர்ந்தாலாச்சு

வெற்றிவரும் எட்டுவிரல் முன்னே தள்ளி

வெகுவான மணிக்கெட்டினுள்ளே தள்ளே”.

                                                                                                                                வர்மச் சூத்திரம் -136

                “விடபந்தவர்மமது கொண்டு வலிமிஞ்சிடிலோ

                                வகையான உச்சிதனில் அமத்தல் செய்து

                தொடருமந்த கழுத்துறையைத் தடவிமெள்ள

                                சென்னிதனில் பெருவிரலால் அனுக்கி மெல்ல

                படமந்த செவிக்குற்றியடங்கல் செய்து

                                பாரதிலே புயம்வழியே தடவி கீழிறக்கி

                விடமிறங்க மணையடங்கல் கவளியதும்

                                அறிந்தனுக்கி அமுர்த முக்கூட்டெண்ணெய் போடே”.

                                                                                                                                வர்ம திறவுகோல்

என குறிப்பிடுகிறது. மேலும்,

                குதற்கமுடன் குளிரும்தேகம் குணங்கெட்ட விடநிலையில்

                விதற்கமுடன் விளறும் மேனி முறிந்தாலோ அபத்தமாகும்

                தற்கமுடன் தளருமது மருந்து செய்தால் குணமாகும்

                மார்க்கமுடன் மருந்துவகை கைபாகம் செய்துபாரே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                விட நிலையில் விசபந்த வர்மத்தில் தாக்கம் கொண்டால் உடல் குளிர்ந்து தளர்ச்சை தோன்றி விளற்சை உண்டாகும். இந்நிலையில் முறிவுற்றால் அபத்தமாகும். எனினும் முறைப்படி மருந்துகளை அறிந்து கைபாகமாக செய்து வந்தால் பலிதமாகும் என்பதாம்.

                விடபந்தம் தொட்டனுக்கி விட்டுவரில் தமரின் குற்றம்

                தடமடைத்து பலபிணிகள் தறுகாதோடும் தனிந்துரைவாய்

                தக்கமுறைப்படி வுறைத்துசெய்து வலிப்பும் தலைவலியும்

                ஒக்கமுறு மன உறைப்புமாகும் பாரே.

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                விடபந்த வர்மத்தை தொட்டு முறைப்படி தூண்டிவர தமர் எனும் இதய பிணிகளும் அடைப்புகளாக வரும், பல நோய்களும் நில்லாமல் போய் விடுவதோடு மீண்டும் வராமலும் தணிந்துபோகும். இவ்வர்மத்தை தூண்டிவர தலைவலியும் தீர்ந்து, மன உறைப்பும் உண்டாகும் என்பதாம்.

                ஈடுதரும் முழங்கையின் நடுவே பற்றி

                ஊடுருவும் மூச்சுறைக்கும் தலமேபக்கம்

                பாடுதரும் விடபந்தம் என்பார் முன்னோர்

                கூடுலரும் கொண்டவுடன் குதற்கமாச்சே.  

                                                                                                                 – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மாத்திரையில் தாக்கம் கொண்டால் பல்வேறு இன்னல்களை தரும். முழங்கையின் நடுவே அமைந்துள்ள மூச்சும் விடமும் ஊடுருவி இயங்கும் தலத்தினை விடமணிபந்தம் என முன்னோர்கள் குறிப்பிடுவர். இவ்வர்மம் பாதிப்படையும்போது உடல் மெலிந்து பலவித மாறுபாடுகளும் உண்டாகும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு, எலும்பு முறிந்து, தாங்க முடியாத அளவு தரிப்பும், வீக்கமும், வேதனையும் உண்டாகும். கண்மசவல், பனி, குளிர், மயக்கம், ஜன்னி தோன்றும். இது விசகலையில் கொண்டால் அசாத்தியமாகும். அதாவது பனிரெண்டாம் நாளில் மரணமுண்டாகும். அந்த நாள் கழிந்துவிட்டால் வெந்தயத்தை மூடில்லாதாளி சாற்றில் அரைத்து துணியினால் சுற்றிக்கட்டவும். நான்கு சீளி வைத்து கவனமாக துணி சுற்றி எண்ணெய் தாரை கோரி வல்லாரை என்னும் மருந்தை உள்ளே கொடுத்துவர சுகம் உண்டாகும். இதற்கு நாழிகை 12 என வர்மச்சூத்திரம் எனும் சுவடி குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தை இளக்குவதற்கு பாதிக்கப்பட்டவரின் கழுத்துறை வழியே புயம் வரை தடவி, அடங்கல்களை அனுக்கி, உச்சியில் அமத்தல் செய்து, அமிர்த முக்கூட்டெண்ணெய் அல்லது முறிவெண்ணெயும் இட்டு அகமருந்தும் கொடுக்க இவ்வர்ம குற்றங்கள் தீரும் என அனுபவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி கையில் தரிப்பு, கையில் விசம் ஏறுவது போன்ற வேதனை, நெஞ்சுவலி, தலைவலி போன்ற பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ ஏற்பட வாய்ப்பு உண்டு என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை பெருவிரல், ஒருவிரல் தூண்டல், அழுத்தல், அதிர்த்தல் போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டும்போது குடல்வலி, நெஞ்சுவலி, கைவலி, தலைவலி, விரல்வலி குணமாகும். மேலும், இதய நோய்களுக்கு மிக சிறந்த வர்மதானமாக விசபந்த வர்மம் செயல்படுகிறது என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *