புத்தாண்டின் நம்பிக்கை

புத்தாண்டின் நம்பிக்கை

  • By Magazine
  • |

– இரா. அரிகரசுதன்

ஒவ்வொரு புத்தாண்டும் வருகையிலும் மனிதர்கள் இந்த ஆண்டு நாம் பெற்ற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அடுத்த ஆண்டில் நல்ல விஷயங்கள் நடக்காதா? என்கின்ற எதிர்பார்ப்புகளை சுமந்து புத்தாண்டுகளை எதிர்கொள்கிறார்கள்.

மனித மனம் அன்றாடங்களில் உள்ள சிக்கல்களின் வழியாக பெற்ற அனுபவங்களின் மூலம் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தவிற வேறு என்ன வைக்க இயலும் என்கின்ற அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      மனிதர்களுக்கு ஒன்று முடிந்து இன்னொன்று துவங்க வேண்டும் என்கின்ற வாழ்வின் மீதான ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. அன்றாடம் நடந்து கொண்டிருக்க கூடிய சமூக வாழ்வின் எதார்த்த நிலை ஒருநாளும் முடிவுக்கு வருவதில்லை. சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் ஆனால் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த வேலையை  மிச்சம் வைத்தல் நடைபெறுகிறது. மிச்சம் வைத்தல் சரி, ஆனால் அந்த மிச்சத்தை செய்து தீர்ப்பதற்கான நேரம் சூழல் வாய்க்குமா என்றால் இல்லை. எனில் இருக்கக்கூடிய அந்த மிச்சத்தை விட்டு நகர்வது அல்லது மறந்து விடுவது அல்லது அதை பெரிதாக பொருட்படுத்தாமல் சரி நம்மால் இயன்றது இவ்வளவுதான். நாம் அடுத்த விஷயத்தை பார்ப்போம், அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்கான, ஒரு அத்தியாயம் முடிந்து அடுத்த அத்தியாயம் திறப்பது போலான ஒரு விஷயம் மனிதற்களுக்கு தேவைப்படுகின்றது. 

ஒரு அத்தியாயம் முடிவது என்பது சுகமாக முடிகின்றதா, நடுநிலைமையோடு முடிகின்றதா அல்லது சங்கடமாக முடிகின்றதா என்பதெல்லாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவருக்குமான கடப்பாடு.

அத்தியாயம் முடிந்து அடுத்த அத்தியாயம் ஆரம்பிப்பது போல தான் ஒவ்வொரு ஆண்டையும் மனிதர்கள் ஆரம்பிக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள் அடுத்த அத்தியாயம் என்பதுதான் அந்த புது வருடம் பற்றிய எதிர்ப்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்பு சுவாரசியதமானதாக இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் வயதான காலத்தில் கையில் ஊன்றுகோல் போன்று செயல்படுகின்றது.

இதுவே, மன வலி குன்றியோரிடையே வேறு வகையில் இயங்குகின்றது. ஜோசியர்களை நாடி செல்ல வைக்கின்றது. இப்படி தேடிச் செல்பவர்களை ஜோதிடம் அல்லது எதிர்கால கணிப்பு என்பது மனிதரை ஆற்றுப்படுத்துவதாகவோ அல்லது ஜோதிடக் கலையை ஒரு தொழிலாக செய்து முன்னேறுபவர்களுக்கான வாடிக்கையாளர்களாகவோ  ஆக்கி விடுகின்றது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்ற செயல்பாடு தான் இது. இந்த பயம் மனிதரைப் படுத்தும்பாடு இருக்கின்றதே.

அது தினமும் ஆருடம் பார்க்க வைக்கின்றது. எதற்கெடுத்தாலும் தன்னை விட்டு வேறொன்றை காரணம் சொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடைபெறும் செயல்களின் மீதான அறிவும் அனுபவம் கொண்ட கருத்துகளின் வழியாக மாற்றுத் திட்டங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நடவாததை நடக்கச் செய்யும் எளிய செயல்வடிவம் என்று ஒன்று உள்ளது. மக்கள் அதன் மீது விருப்பம் கொள்ளாமலிருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

ஏனென்றால் நாம் செய்த தவறுகளை அல்லது கவனக்குறைகளை அல்லது இயலாமைகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மனித மனம் இந்த ஒத்துக் கொள்ளுதலை ஏற்க மாட்டேன் என்கின்றது.

எனவே புத்தாண்டு என்பது வாழ்வின் அடுத்த அத்தியாயமாகவோ அல்லது எதிர்காலத்தின் மீது நம்பிக்கையாகவோ கொள்ளும் நபர்கள் யாராகிலும் அரசியல் சமூகவியல் புரிதலோடு இந்த உலகை பார்க்க வேண்டும் என்பதாக அமையவேண்டும்.  இன்று உலகில் நடைபெறும் செய்திகளைக் கண்ணுறும்போது உலக நடைமுறைகளி¢ன் பால் அறிவும் கருத்தும் இல்லாத எளிய மனிதர்களாக வாழ்வது இயலாத நிலை வந்துவிட்டது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரின் அன்றாட நிகழ்வையும் பாதிக்கக்கூடிய அரசியல் செயல்பாடுகள் உலகளவில் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

இச்சூழலில் நம் அன்றாட வாழ்வை உழைத்தோம், ஏதோ கிடைத்தது அதனைக் கொண்டு எளிய வாழ்வு வாழ்ந்தோம். என வாழும் வாய்ப்பு அற்றவர்களாக இருக்கின்றோம்.

உலகம் வியாபாரங்களாலும் வியாபாரத்தை வலுப்படுத்த யுத்தங்களாலும் சூட்சுமங்களாலும் அதனையே திறமை என்று நம்பச் செய்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறே, நமது இளம் தலைமுறைக்கு ஓர் இரவு நகர்ந்து செல்வதுபோல சத்தமற்றுக் கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருக்கின்றது. எனவே சம நீதியும் சமதத்துவம் கொண்ட வாழ்வு, இயற்கையோடான வாழ்வு சாத்தியப்படுவதும் நம் கையில் இருக்கின்ற ஒரு நம்பிக்கையே. இதுபற்றிய விழிப்பு கொள்ளாதவரை வாழ்வை வாழ்வாக வாழும் சூழல் வாய்க்காது. அந்த நம்பிக்கையோடு புதிய தென்றல் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *